அ.இ.அ.தி.மு.க. பொதுக் குழு தீர்மானங்களையும் பொதுச் செயலாளர் தேர்தலையும் எதிர்த்துத் தொடரப்பட்ட ஏழு மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுவதாக சென்னை உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்தத் தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பு உடனடியாக மேல் முறையீடு செய்திருக்கிறது

கடந்த ஆண்டு ஜூலை 11ஆம் தேதி நடந்த அ.தி.மு.க. பொதுக் குழுக் கூட்டங்கள் செல்லாது அறிவிக்கக்கோரி, ஓ. பன்னீர்செல்வம் தரப்பில் தாக்கல்செய்யப்பட்ட இடைக்கால மனுக்கள் அத்தனையையும் சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

அ.இ.அ.தி.மு.கவின் பொதுச் செயலாளரைத் தேர்வுசெய்வதற்காந தேர்தல் மார்ச் 26ஆம் தேதி நடைபெறுமென மார்ச் 17ஆம் தேதியன்று எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு அறிவித்தது. இதற்கான வேட்புமனு தாக்கல் மார்ச் 18ஆம் தேதி துவங்கும் என்றும் அறிவிக்கப்பட்டது.

இதையடுத்து, அ.தி.மு.க. பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைவிதிக்கக் கோரியும் பொதுக்குழு தீர்மானங்களுக்கு எதிராகவும் ஓ. பன்னீர்செல்வம் தரப்பினர் சென்னை உயர்நீதிமன்றத்தில் இடைக்கால மனுக்களைத் தாக்கல்செய்தனர்.

இந்த வழக்கை நீதிபதி குமரேஷ்பாபு தலைமையிலான அமர்வு விசாரித்தது. ஓ.பன்னீர்செல்வம், அவரது ஆதரவாளர்களான பி. வைத்திலிங்கம், மனோஜ் பாண்டியன், ஜே.சி.டி. பிரபாகர் உள்ளிட்டோர் சார்பாக மொத்தம் ஏழு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

இந்த மனுக்களை விசாரித்த நீதிமன்றம், பொதுச் செயலாளர் தேர்தலை நடத்தலாம் எனவும் முடிவுகளை அறிவிக்கக்கூடாது என்றும் இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்த வழக்கில் மார்ச் 22ஆம் தேதி வாத – பிரதிவாதங்கள் முடிவடைந்தன. இதற்குப் பிறகு இரு தரப்பும் எழுத்து மூலமாக தங்கள் வாதங்களைத் தாக்கல்செய்தன. இதற்குப் பிறகு, நீதிமன்றம் தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தது.

இந்த வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. பொதுக் குழு தீர்மானங்களை எதிர்த்தும் பொதுச் செயலாளர் தேர்தலுக்கு தடைகோரியும் தாக்கல் செய்யப்பட்ட அனைத்து மனுக்களையும் தள்ளுபடி செய்வதாக நீதிபதி தீர்ப்பளித்தார்.

 

இதனால், எடப்பாடி கே. பழனிச்சாமி தரப்பு அறிவித்த பொதுச் செயலாளர் தேர்தலின் முடிவை அறிவிக்க விதிக்கப்பட்டிருந்த தடை நீங்கியது.

மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதும் இந்த தீர்ப்பை எதிர்த்து ஓ. பன்னீர்செல்வம் தரப்பின் சார்பில், மேல் முறையீடு செய்வதாகவும் அதனை உடனடியாக விசாரிக்க வேண்டுமென்றும் அவரது தரப்பு மூத்த வழக்கறிஞர் சி. மணி சங்கரும் அப்துல் சலீமும் கோரினர்.

இதையடுத்து இந்த மேல் முறையீட்டை நீதிபதிகள் ஆர். மகாதேவன், முகமது சஃபீக் அடங்கிய அமர்வு விசாரிக்குமென அறிவிக்கப்பட்டுள்ளது.

அ.தி.மு.கவின் பொதுச் செயலாளர் யார் என்பது குறித்து வி.கே. சசிகலா, ஓ. பன்னீர்செல்வம் ஆகியோர் தொடர்ந்த பிரதானமான உரிமையியல் வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன.

Share.
Leave A Reply