பறந்து கொண்டிருந்த விமானத்தின் கதவை திறந்த பயணியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார் என தென் கொரிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தென் கொரியாவின் ஜேஜு தீவிலிருந்து டேகு நகரை நோக்கி கடந்த வெள்ளிக்கிழமை (26) சென்றுகொண்டிருந்த விமானத்தில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
ஏசியானா எயார்லைன்ஸுக்குச் சொந்தமான ‘பிளைட் OZ8214′ எனும் விமானம் 200 மீற்றர் (650 அடி) உயரத்தில் பறந்துகொண்டிருந்தபோது பயணியொருவர் விமானத்தின் கதவு ஒன்றைத் திறந்தார்.
சுமார் ஒரு மணித்தியாலத்தின் பின்னர் அவ்விமானம் டேகு நகரில் தரையிறங்கியது. ஆனால், அதன் கதவு கதவு திறக்கப்பட்ட நிலையிலேயே காணப்பட்டது.
எயார்பஸ் A321-200 ரகத்தைச் சேர்ந்த விமானத்திலிருந்த 194 பயணிகளும் உயிர்த்தப்பினர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
எனினும், பயணிகளில் சிலர் மயக்கம் மற்றும் சுவாசப் பிரச்சினைகள் காரணமாக வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
கதவை திறந்த நபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டார். 30 வயதைக் கடந்த ஆண் ஒருவர் கைதானார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானம் பறக்க வேண்டிய நேரத்தைவிட நீண்ட நேரம் பறந்துகொண்டிருந்தாக தான் கருதியதாகவும், விமானத்துக்குள் தனக்கு மூச்சுத் திணறல் ஏற்பட்டதால் கதவை திறந்ததாகவும் அந்நபர் கூறினார் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
விமானப் பயணப் பாதுகாப்பு விதிகளை மீறிய குற்றத்துக்காக 10 வருடங்கள் வரையிலான சிறைத்தண்டனையை அப்பயணி எதிர்நோக்குகிறார்.
நடுவானில் விமானத்தின் கதவு திறக்கப்பட்டதால், விமானத்துக்குள் அதிக வேகத்தில் காற்று நுழைந்து விமானத்துக்குள் பரபரப்பு ஏற்பட்டது. ஒவ்வொருவராக மயக்கடைவதைப் போல் இருந்ததால் விமானத்திலிருந்த மருத்துவர்களுக்கு விமானப் பணியாளர் ஒருவர் அழைப்பு விடுத்தார் என 44 வயதான பயணி ஒருவர் கூறியுள்ளார்.
‘விமானம் வெடிக்கப் போகிறது என நான் எண்ணினேன். இறந்துவிடுவேன் என எண்ணினேன்‘ என அவர் கூறினார்.
தென் கொரிய விமானப் போக்குவரத்து வரலாற்றில் இத்தகைய சம்பவம் நடந்தமை இதுவே முதல் தடவை என அந்நாட்டின் போக்குவரத்து அமைச்சு அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.
தென் கொரியாவின் வான் போக்குவரத்துத் துறையானது சிறந்த பாதுகாப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது என நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.