மஹிந்த ராஜபக்‌ஷ மீண்டும் பிரதமராகப் பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், அண்மைக்காலமாக அடிக்கடி பரவி வருகின்றது. கடந்த வாரத்தில், பதவி ஏற்பதற்காக அவர் தன்னுடைய வீட்டிலிருந்து,

ஜனாதிபதி செயலகம் நோக்கி புறப்பட்டுவிட்டார் என்பது வரையில் வதந்தி பரவியது. இந்த வதந்தி பரவிக் கொண்டிருந்த போது, அவர் மாத்தறையில் ஒரு குடும்ப நிகழ்வில் பங்குபற்றிக் கொண்டிருந்தார்.

ஆனால், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்கள் அடிக்கடி வெளியாவதன் பின்னால், வதந்தியைப் பரப்புவர்களைக் காட்டிலும், மஹிந்த வாதிகளே அதிகம் இருப்பதாக குற்றஞ்சாட்டப்படுகின்றது.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையை அண்மித்த தேர்தல் வெற்றிகளை கடந்த ஜனாதிபதி தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் ராஜபக்‌ஷர்கள் பெற்றார்கள்.

குறைந்தது ஒரு தசாப்த காலம் ஆட்சியில் இருந்து, அவர்களை அகற்ற முடியாது என்று நம்பப்பட்டது. ஆனால், யாருமே எதிர்பார்க்காத வண்ணம் ‘ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும்’ போராட்டம், முழு நாட்டையும் புரட்டிப் போடுமளவுக்கு எழுந்து.

அதனால், வேறு வழியின்றி ராஜபக்‌ஷர்கள் அனைவரும் ஆட்சிக் கட்டிலில் இருந்து, ஒரு வருடத்துக்கு முன்னால் இறங்கினார்கள்.

அதிலும், கோட்டாபய ராஜபக்‌ஷ நாட்டை விட்டுத் தப்பியோடி மாலைதீவு, சிங்கப்பூர் என்று அலைந்து திரிய வேண்டி வந்தது. இவ்வாறான நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்ட ரணில், ஆட்சியில் ஏறினார்.

ஒரேயொரு தேசிய பட்டியல் உறுப்பினர் பதவியைக் கொண்டு பாராளுமன்றம் வந்த ஒருவர், பிரதமராக மாறி, இறுதியில் ஜனாதிபதியாகவே அமர்ந்தார்.

அவர், ராஜபக்‌ஷர்களை விரட்டும் போராட்டங்களை, தன்னுடைய ஆட்சிக் கனவுக்காக கனகச்சிதமாகப் பயன்படுத்திக் கொண்டார். ஆட்சியில் அமர்ந்தவுடன், அதைத் தக்க வைப்பதற்காக ராஜபக்‌ஷர்களின் அனுசரணையைப் பெற்றுக் கொண்டார்.

கிட்டத்தட்ட ராஜபக்‌ஷர்களின் ‘பினாமி’யாகவே ரணில் ஆட்சியில் ஏறினார். ஆனால், ஆட்சியில் ஏறிய சிறிய காலத்துக்குள்ளேயே, யாரின் ‘பினாமி’யாகவும் இல்லாமல், தனித்த ஆவர்த்தனம் செய்யும் ஓர் ஆட்சியாளனாக தன்னை முன்னிறுத்தும் வேலைகளில் தெளிவாக ஈடுபடலானார்.

தன்னை எந்தக் கேள்வியும் கேட்காதவர்களை மாத்திரம் அமைச்சரவைக்குள் உள்வாங்கிக் கொண்டு, ராஜபக்‌ஷ விசுவாசிகளை பெரும்பாலும் விலத்தி வைத்தார்.

இதனை, ஆரம்பத்தில் கண்டுகொள்ளாமல் இருந்தாலும், நீண்டகால அரசியல் நோக்கில் தங்களுக்கு பெரும் பிரச்சினையாக மாறும் என்பதை ராஜபக்‌ஷர்கள் உணர்ந்துகொள்ள ஆரம்பித்தார்கள்.

அதனால்தான், மஹிந்த மீண்டும் பிரதமராக பதவி ஏற்கப்போகிறார் எனும் தகவல், கடந்த ஆண்டின் இறுதியில் இருந்து அடிக்கடி பரவத் தொடங்கியது.

மஹிந்த மீண்டும் பிரதமராக பதவியேற்றால், பாராளுமன்றமும் அமைச்சரவையும் ராஜபக்‌ஷர்களின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடும். தங்களின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகளுக்காக என்னென்ன செய்ய வேண்டுமோ அதனை, விரைவாக செய்துவிட முடியும்.

அதாவது, தென் இலங்கையில் ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக எழுந்த அதிருப்தியைக் கட்டுக்குள் கொண்டுவந்துவிடலாம். அதுதான், ராஜபக்‌ஷர்களின் எதிர்கால ஆட்சிக் கனவை தக்க வைக்க உதவும். அப்படியான நிலையில், மஹிந்தவை பிரதமராக பதவியில் அமர்த்த வேண்டிய தேவை, ராஜபக்‌ஷர்களுக்கும் ராஜபக்‌ஷர்களின் விசுவாசிகளுக்கும் உண்டு.

இதனை நன்கு உணர்ந்து கொண்டிருக்கிற ரணில், அவ்வாறான சூழ்நிலையொன்று உருவாகுவதைத் தவிர்த்து வருகிறார்.

தான் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ராஜபக்‌ஷர்களின் ஆதரவோடு வேட்பாளராக போட்டியிடுவது உறுதியாகும் வரையில், ராஜபக்‌ஷர்களை ஆட்சிக் கட்டிலின் பக்கத்திலேயே அண்ட விடுவதில்லை என்பதில் குறியாக இருக்கிறார்.

ஏனெனில், கடந்த வருடம் தென் இலங்கையில் எழுந்திருந்த ராஜபக்‌ஷர்களுக்கு எதிரான வெறுப்பு, இப்போது குறிப்பிட்டளவு குறைந்துவிட்டது.

அத்தோடு, ராஜபக்‌ஷர்களின் ‘போர்வாள்’களான பௌத்த அடிப்படைவாத தரப்புகள், தமிழ் – முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பரப்புரைகளை ஆக்ரோசமாக மீண்டும் தொடங்கிவிட்டன.

குறிப்பாக, ராஜபக்‌ஷர்களை வீட்டுக்கு விரட்டும் போராட்டம்கூட, புலம்பெயர் தேசங்களில் உள்ள புலி ஆதரவாளர்களாலும் மேற்கு நாடுகளின் தூதுவராலயங்களாலும் திட்டமிடப்பட்டது என்பது மாதிரியான செய்திகளை, ராஜபக்‌ஷ ஆதரவு தரப்புகள் பரப்பி வருகின்றன.

இதனால், நாட்டை புலிகளிடம் இருந்து மீட்டுத் தந்த ராஜபக்‌ஷர்களை மன்னித்து, மீண்டும் ஆட்சியில் அமர்த்தும் நிலையொன்று உருவாக்கிவிடலாம் என்பது மஹிந்தவாதிகளின் நம்பிக்கை. அதற்கு, பௌத்த பீடங்களைக் கொண்டும் அழுத்தங்களைக் கொடுக்கத் தொடங்கிவிட்டார்கள்.

கடந்த இரு தேர்தல்களிலும் மஹிந்தவின் முகத்தை முன்னிறுத்திக் கொண்டு ராஜபக்‌ஷர்கள் வாக்கு வேட்டை நடத்தினாலும், கோட்டாவும் பஷில் ராஜபக்‌ஷவும் வெற்றிக்கான உரித்தைக் கோரினார்கள். மஹிந்தவைக் காட்டிலும், தாங்கள் மக்கள் ஆதரவுள்ளவர்கள் என்ற கட்டத்துக்கு கோட்டாவும் பஷிலும் நகர்ந்தார்கள்.

அதனால், மஹிந்த பிரதமராக இருந்தாலும் கிட்டத்தட்ட செல்லாக்காசாக இருந்தார். அவரின் சொல்லுக்கு மதிப்பு இல்லாமல் போனது. தம்பிமார் நினைத்ததைச் செய்தார்கள்.

அதிலும், அடுத்த ஜனாதிபதி தேர்தல் கனவோடு பஷில் முன்னுக்கு வந்தார். இதனால், மஹிந்தவுக்கு தன்னுடைய மகனான நாமலின் எதிர்காலம் குறித்த பயம் எழுந்தது. அந்தச் சமயத்தில்தான், ராஜபக்‌ஷர்களை விரட்டும் போராட்டம் எழுந்து, நிலைமை தலைகிழானாது.

அப்போது, மஹிந்த குறிப்பிட்டளவு மகிழ்ச்சியோடுதான் இருந்தார். ஏனெனில், கோட்டாவையும் பஷிலையும் அரசியல் அரங்கில் இருந்து அகற்றுவதற்கான வாய்ப்பாக அதனைக் கருதினார்.

அதனால், ரணிலை ஜனாதிபதியாக்குவதற்காக அவர் தலைகீழாக நின்று செயற்பட்டார். அப்போது, ரணிலுக்கும் மஹிந்தவுக்குமான இணக்கப்பாடும் காணப்பட்டதாக கூறப்பட்டது.

அது, அடுத்த ஜனாதிபதி தேர்தலில் ரணிலை வேட்பாளராக ஆதரிப்பது என்பதுவும், அடுத்த பொதுத் தேர்தலில் ஆட்சியமைப்பதற்கான வாய்ப்புகளைத் தனக்கு உருவாக்கித் தரவேண்டும் என்பது மஹிந்தவினது கோரிக்கை. ஆனால், அந்த எதிர்பார்ப்புகளின்படி ரணில் நடக்கவில்லை என்பதுதான் மஹிந்தவின் மனக்குறை.

திட்டமிட்ட ரீதியில், ஜனாதிபதி வேட்பாளராகத் தான் ஆவதற்கான அனைத்து வாய்ப்புகளையும் ரணில் ஏற்படுத்திக் கொண்டிருக்கிறாரே அன்றி, பொதுத் தேர்தலில் பொதுஜன பெரமுனவை வெற்றிபெற வைத்து, தன்னைப் பிரதமராக்கும் வாய்ப்புகளை உருவாக்க மறுக்கிறார் என்பது மஹிந்தவின் அதிருப்தி.

இதனை ஆரம்பம் முதலே, மஹிந்தவாதிகள் தொடர்ச்சியாக அவரிடம் எடுத்துக் கூறி வருகிறார்கள்.

அதனால்தான், ஆரம்பத்தில் ரணிலுக்கு எதிராக பெரிதாக எந்த விமர்சனங்களையும் முன்வைக்க வேண்டாம் என்று கட்டுப்பாடுகளை விதித்திருந்த மஹிந்த, இப்போது கண்டுகொள்ளாமல் இருக்கிறார்.

அத்தோடு, மஹிந்தவாதிகளாலும், அவர்களின் ஊடக வலையமைப்புகளிலும் மஹிந்த, பிரதமராக மீண்டும் பதவி ஏற்கப்போகிறார் என்ற தகவல்களும் திட்டமிட்ட ரீதியாகத் தொடர்ச்சியாக பரப்பப்படுகின்றன.

ராஜபக்‌ஷர்களுக்கு எதிராக தென் இலங்கை மக்கள் கொண்டிருந்த வெறுப்பை, இரண்டு விதமாக பிரித்தாளும் வேலைகளை, மஹிந்தவாதிகள் தற்போது செய்து வருகிறார்கள்.

அதில், மஹிந்த நல்லவர், வல்லவர், ஊழல் அற்றவர் என்பது ஒன்று. கோட்டாவும் பஷிலுமே ஆட்சி நடத்தத் தெரியாமல் நாட்டைச் சீரழித்தவர்கள். கோட்டாவும் பஷிலும் செய்த தவறுக்காக மஹிந்தவைத் தண்டிப்பது அர்த்தமற்றது என்பது மற்றையது.

இதன்போக்கில், மஹிந்தவை பிரதமராக்கும் எண்ணமே மஹிந்தவாதிகளின் நோக்கம். ஆனால், இந்த அரசியல் ஆட்டங்களைத் தெளிவாக விளங்கி வைத்திருக்கின்ற ரணில், மஹிந்தவாதிகளின் குரல்களை கண்டும் காணாமல் இருக்கின்றார். அதிலும், எந்தவொர் இடத்திலும் அவர் ராஜபக்‌ஷர்கள் குறித்து பேசுவதையே தவிர்க்கிறார்.

ரணில் தலைமையில், கடந்த 19ஆம் திகதி கொழும்பில் இடம்பெற்ற போர் வெற்றி விழாவில், எதிர்க்கட்சி வரிகையில் இருக்கும் மைத்திரிபால சிறிசேன, சஜித் பிரேமதாஸ உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தார்கள்.

ஆனால், போர் வெற்றிக்கான உரித்தைத் தாம் கொண்டிருப்பதாகத் தொடர்ந்தும் வலியுறுத்தி வரும் ராஜபக்‌ஷர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை. முப்படையினரையும் நினைவுகூரும் நிகழ்வாக முன்னிறுத்தப்பட்டாலும், அது போர் வெற்றி விழாவாகவே அனுஷ்டிக்கப்பட்டு வருகின்றது.

இப்படியான நிகழ்வில் ராஜபக்‌ஷர்கள் யாரும் கலந்து கொள்ளவில்லை என்பது முக்கிய பேசுபொருளானது. அதில், அந்த நிகழ்வுக்கு அவர்களை, ரணில் திட்டமிட்ட ரீதியில் அழைக்கவில்லை என்ற விடயம் மேலெழுந்தது.

அது உண்மையாக இருக்குமாக இருந்தால், மஹிந்தவின் ஆட்சிக் கனவுக்கு ரணில், தற்போதைக்கு கொஞ்ச இடமும் அளிக்கத் தயாரில்லை என்பது தெளிவாகின்றது.

அடுத்த ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெறுவதற்கு எதுவெல்லாம் உதவுமோ அதையெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்ளவும், இடைஞ்சலாக இருக்கும் விடயங்களை விலத்தி வைக்கவும் ரணில் தயக்க மாட்டார்.

ஆனால், அவருக்கு இருக்கும் சிக்கல் என்னவென்றால், ராஜபக்‌ஷர்கள் என்ற நாமம், குறிப்பாக மஹிந்த எனும் நாமம், தென் இலங்கையில் வாக்குகளை அள்ளுவதற்கு அவருக்கு தேவையாக இருக்கின்றது என்பதுவும், அது, தமிழ் – முஸ்லிம் மக்களிடம் பிரச்சினைக்குரியது என்பதுதான் பெரிய சிக்கல். அந்தச் சிக்கலைத் தாண்டுவது குறித்து மாத்திரமே ரணில் சிந்திக்கிறார்.

மற்றப்படி, மஹிந்தவின் அரசியல் எதிர்காலம் குறித்தெல்லாம் அவர், எந்தச் சிந்தனையும் கொண்டிருக்கவில்லை.

-புருஜோத்தமன் தங்கமயில்-

Share.
Leave A Reply