மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்
ரஷ்யாவின் பெல்கொரோட் பிராந்தியத்தில் இரண்டு நாட்கள் நீடித்த தாக்குதலுக்கு ரஷ்ய இராணுவம் முற்றுப்புள்ளி வைத்ததாக அறிவிக்கப்பட்ட சில நாட்களில், சம்பந்தப்பட்ட படைகளின் வெளிப்படையான நவ நாஜி தன்மையை நிரூபிக்கும் பல தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளன.
கிரெம்ளினின் கூற்றுப்படி, இராணுவம், விமானப்படை மற்றும் தேசிய காவலர்களை உள்ளடக்கிய ஒரு பெரிய இராணுவ நடவடிக்கையில், 24 மணி நேரத்திற்கும் மேலான சண்டையின் பின்னர், இத்தாக்குதலில் ஈடுபட்ட அதிதீவிர வலதுசாரி ரஷ்ய தன்னார்வ பட்டாலியன் மற்றும் அதி தீவிர தேசியவாத சுதந்திர ரஷ்யாவுக்கான படையணியின் 70 உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.
இந்த தாக்குதலில் ரஷ்ய கிராமங்களில் நூற்றுக்கணக்கான கட்டிடங்கள் அழிக்கப்பட்டதாக கூறப்படுகிறது,
இதில் ட்ரோன் தாக்குதல்கள், அமெரிக்காவில் தயாரிக்கப்பட்ட கவச வாகனங்கள் மற்றும் சைபர் தாக்குதல் ஆகியவை அடங்கும்.
நேட்டோ கட்டளையின் கீழ் நடைமுறையில் செயல்படும் உக்ரேனிய இராணுவத்தால் தயாரிக்கப்பட்டு, திட்டமிடப்பட்ட தாக்குதல் என்பதற்கான தெளிவான அறிகுறியாக, இந்த நாசகார பிரிவுகளின் தாக்குதல் தொடர்ச்சியான உக்ரேனிய வான்வழித் தாக்குதல்களால் ஒருங்கிணக்கப்பட்டது.
உக்ரேனில் நேட்டோ-ரஷ்யா போர் தொடங்கிய பிறகு ரஷ்ய எல்லைக்குள் நடத்தப்பட்ட மிகப்பெரிய ஊடுருவல் இதுவாகும்.
இந்த தாக்குதலில் ஈடுபட்ட படைகள் அப்பட்டமான நவ-நாஜிக்கள் ஆவர். பரந்த சர்வதேச தொடர்புகளை, எல்லாவற்றிற்கும் மேலாக ஜேர்மனியுடன் இப்படைகள் தொடர்புகளைக் கொண்டிருந்தன.
ரஷ்ய தன்னார்வப் படையின் (RVC) தலைவரான டெனிஸ் நிகிடின் என்ற டெனிஸ் கபுஸ்டின் என்பவர் குறிப்பாக இதில் முக்கியத்துவம் வாய்ந்தவர் ஆவர்.
RVC படையானது கடந்த ஆகஸ்ட் மாதம் உக்ரேனில் உருவாக்கப்பட்டது. பல்லாயிரக்கணக்கான ரஷ்ய முஸ்லிம்கள் மற்றும் ரஷ்ய கூட்டமைப்பின் குடிமக்களாக இருக்கும் பிற தேசிய, மதம் மற்றும் இன சிறுபான்மையினரைக் கொண்டிராத, ‘இன ரீதியாக தூய்மையான‘ ரஷ்ய தேசிய அரசை நிறுவுவதே Russian Volunteer Corps (RVC) RVC ன் குறிக்கோளாகும்.
இரண்டாம் உலகப் போரின் போது சோவியத் யூனியனுக்கு எதிரான அழித்தொழிப்பு போரில் நாஜிக்களுடன் ஒத்துழைத்த விளாசோவ் இராணுவத்தின் சின்னங்களையும், சர்வதேச அதிதீவிர வலதுசாரிகளின் பல்வேறு சின்னங்களையும் Russian Volunteer Corps (RVC) RVC பயன்படுத்துகிறது.
ரஷ்ய தன்னார்வப் படையுடன் நவ-நாஜிக்கள், உக்ரேனில் உள்ள சுமி பிராந்தியத்தின் எல்லைக்கு சில தொலைவு தூரத்தில் செய்தியாளர் சந்திப்புக்குத் தயாராகிறார்கள். புதன்கிழமை May 24, 2023. [AP Photo/Evgeniy Maloletka]
ஜேர்மன் பத்திரிகையான டேர் ஸ்பீகலின் படி, ‘ரெக்ஸ்’ என்று அழைக்கப்படும் கபுஸ்டின் (Kapustin) , ஐரோப்பிய நவ-நாஜிக்களின் வட்டாரத்தில் ‘மிகவும் செல்வாக்கு மிக்க நபர்களில் ஒருவராக’ ஜேர்மன் அதிகாரிகளால் கருதப்படுகிறார்.
2001 இல் ஒரு இளைஞனாக ஜேர்மனிக்கு குடிபெயர்ந்த கபுஸ்டின், 2019 இல் நாட்டிற்குள் நுழைய தடை விதிக்கப்பட்டார். இருப்பினும், ஜேர்மனியின் நவ-நாஜி வட்டாரங்களுடனான அவரது உறவுகள், அரசு எந்திரத்துடன் நெருக்கமாக பிணைக்கப்பட்டுள்ளன.
2008 முதல், அவர் தீவிர வலதுசாரிகளுடைய ஆடை பிராண்டான ‘வைட் ரெக்ஸ்’ ஐ நடத்தி வருகிறார், இது சர்வதேச நவ-நாஜிக்கள் வட்டாரத்தில் ஒரு முக்கிய சக்தியாக வளர்ந்துள்ளது.
மேலும், ஐரோப்பாவில் பல பெரிய அளவிலான அதிதீவிர வலதுசாரிகளுடைய நிகழ்வுகளை ஒழுங்கமைப்பதிலும் இது ஈடுபட்டுள்ளது. ரஷ்யாவில், கபுஸ்டின் பல ஆண்டுகளாக இழிபுகழ்பெற்ற வன்முறை மற்றும் தீவிர வலதுசாரி கால்பந்து கூலிகன் காவாலித்தனத்திலும் ஈடுபட்டுள்ளார்.
ஜேர்மனியில், கபுஸ்டின் இரண்டு முக்கிய நவ நாஜிக்களான ரொமி பிரெங்க் மற்றும் தோர்ஸ்டன் ஹைஸ் (Tommy Frenk and Thorsten Heise) ஆகியோருடன் தொடர்பு வைத்திருப்பதாக அறியப்படுகிறது.
ஹைஸ் நவ-நாஜி தேசிய ஜனநாயகக் கட்சியின் (NDP) தலைவர் ஆவார், மேலும் சர்வதேச நவ-நாஜி பயங்கரவாத வலையமைப்பான கொம்பாட் 18 லும் இவர் முக்கிய பங்கு வகிப்பதாகவும் நம்பப்படுகிறது.
ஹெய்ஸ் உடன் தொடர்புகளை வைத்திருத்த ஜேர்மன் நவ-நாஜி பயங்கரவாத வலையமைப்பான NSU, குறைந்தது 10 புலம்பெயர்ந்தவர்களை கொன்றுள்ளது. NSU ஆனது, ஜேர்மன் அரசு மற்றும் குறிப்பாக அதன் இரகசிய சேவையான Verfassungsschutz ஆகியவற்றால் கட்டியெழுப்பப்பட்டு, மறைக்கப்பட்டுள்ளது.
RVC இன் இதர உறுப்பினர்களும் உக்ரேனிய அரசுடனும் மற்றும் நேட்டோவுடனும் தொடர்புள்ள இழிபுகழ்பெற்ற நவ-நாஜிக்கள் ஆவர்.
எனவே, ரஷ்யாவை சேர்ந்தவரான அலெக்ஸி லியோவ்கின் (அல்லது லெவ்கின்) பிளாக் மெட்டல் குழுமத்தின் ‘m8181th’ இன் உறுப்பினராக உள்ளார்,
இது ‘ஹிட்லரின் சுத்தியல்’ என்று பொருள்படும். கியேவில் 2014 அமெரிக்க ஆதரவுடன் ஆட்சியை கவிழ்த்ததில் இருந்து உக்ரேனிய அரசியலில் முக்கிய பங்கு வகிக்கும், நவ-நாஜி அசோவ் பட்டாலியனின் முன்னாள் உறுப்பினராக இவர் இருந்துள்ளார்.
இந்த நவ-நாஜிப் படைகளுடன் கியேவ்வுக்கு இருக்கும் நேரடியான உறவுகளை, இப்போது அது வெளியிட்டுள்ள மறுப்புகள் நம்பகத்தன்மையாக இல்லை.
ஸ்பீகல் பத்திரிகையின் கூற்றுப்படி, இந்த தாக்குதலுக்கு ஒரு வாரத்திற்கு முன்பு, கபுஸ்டின் மற்றும் சுதந்திர ரஷ்யா படையின் தலைவர், கியேவ்வில் உள்ள உக்ரேனிய இராணுவ உளவுத்துறை தலைமையகத்திற்கு அருகிலிருந்து புகைப்படங்களை எடுத்துள்ளனர்.
2022 இல் நேர்காணல்களில், கபுஸ்டின் உக்ரேனிய இராணுவத்தின் தலைமையிலுள்ள அரைவாசிப் பேர்களை சந்தித்ததாகவும், உக்ரேனிய இராணுவத்தில் ஒரு வழக்கமான சிப்பாயாக தான் பட்டியலிடப்பட்டதாகவும் கூறினார்.
இந்த ஊடுருவல் தாக்குதலானது, ரஷ்யா மீதான நேட்டோ நடத்திவரும் போரின் தன்மையின் பாடத்தினை வழங்குகிறது.
நியூயோர்க் டைம்ஸ் மற்றும் வெள்ளை மாளிகையானது, உழைக்கும் மக்கள் நம்புவதற்கு நேர்மாறாக, ‘தூண்டப்படாத போர்’ மற்றும் ‘ஜனநாயகத்தை’ பாதுகாப்பது என்ற அதன் கூற்றுடன் எந்த தொடர்பும் கிடையாது.
மாறாக, ரஷ்யாவின் எல்லைகளுக்கு நேட்டோவின் விரிவாக்கம் உட்பட, மாஸ்கோவில் ஒரு ‘கிளர்ச்சி’ மற்றும் ஆட்சி மாற்ற நடவடிக்கைக்கு முக்கிய அடிப்படையாக திட்டமிட்டு கட்டமைக்கப்பட்ட நவ நாஜி படைகளின் ஊக்குவிப்பு மற்றும் ஆயுதம் என்பனவற்றுக்கூடாக, பல தசாப்தங்களாக இந்தப் போர் தூண்டப்பட்டு தயாரிக்கப்பட்டது.
அத்தோடு, இந்தப் பிராந்தியத்தை ஏகாதிபத்தியத்தின் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வருவதற்காக, ரஷ்யாவையும் முழு முன்னாள் சோவியத் யூனியனையும் தேசிய மற்றும் இனம் அடிப்படையில் பிரிப்பதே போரின் இறுதி இலக்காகும்.
ரஷ்யாவில், இந்த ஊடுருவல் தொடர்பாக இராணுவத் தலைமையின் மீது குறிப்பிடத்தக்க விமர்சனங்களைத் தூண்டியுள்ளது.
உக்ரேனில் இருந்து மேலும் ஊடுருவல்களைத் தடுக்க கடந்த மார்ச் மாதம் 10 பில்லியன் ரூபிள் செலவில் அமைக்கப்பட்ட புதிய ‘தடுப்புச் சுவர்’ இத் தாக்குதலைத் தடுக்கத் தவறிவிட்டது என்று Nezavissimaya Gazeta இல் வெளிவந்த ஒரு கருத்து சுட்டிக்காட்டியது.
பெல்கோரோட் பிராந்தியத்தின் ஆளுநர் வியாசெஸ்லாவ் கிளாட்கோவ் வியாழனன்று இராணுவத் தலைமையிடம் தனக்கும் இதுபற்றி ‘நிறைய கேள்விகள்’ இருப்பதாகக் கூறினார்.
ரஷ்யாவின் இராணுவ உளவுத்துறையான GRU இன் ஒரு பகுதியாக உருவாக்கப்பட்டு செயல்பட்டுவரும் வாக்னர் கூலிப்படையின் தலைவரான எவ்ஜெனி பிரிகோஜின், இராணுவத் தலைமையை கடுமையாக விமர்சித்து இந்த வாரம் ஒரு நீண்ட பேட்டி அளித்தார்.
பாக்முத்தை கைப்பற்றுவதில் வாக்னர் குழு முக்கிய பங்கு வகித்தது, ஆனால், அவர்கள் நகரத்தை விட்டு வெளியேறி வழக்கமான இராணுவத்திடம் அப்பகுதியை ஒப்படைப்பதாக அறிவித்தனர்.
நேர்காணலில், ப்ரிகோஜின் பாதுகாப்பு மந்திரி செர்ஜி ஷுய்கு மற்றும் தலைமைப் பணியாளர் வலேரி ஜெராசிமோவ் ஆகியோரை மாற்ற அழைப்பு விடுத்தார். ‘நான் எனது தாயகத்தை நேசிக்கிறேன், நான் புட்டினுக்கு சேவை செய்கிறேன், ஷோய்குவை விசாரிக்க வேண்டும், நாங்கள் தொடர்ந்து போராடுவோம்’ என்று அவர் கூறினார்.

ப்ரிகோஜின் (Prigozhin’)இராணுவத் தலைமையை பலமுறை ‘f***ed’ என்று கூறியதோடு, பெல்கோரோட் பிராந்திய ஊடுருவலை மற்றொரு இராணுவத் தோல்விக்கு உதாரணமாகக் குறிப்பிட்டார்.
உக்ரேன் ரஷ்யாவை இன்னும் ஆழமாக தாக்க முற்படும் என்று அவர் எச்சரித்தார். ரஷ்யா முழுப் போர்ப் பொருளாதாரத்திற்கு முழுமையாக மாற வேண்டும் என்றும், புட்டினின் பகுதி அணிதிரட்டல் ஆணையின் அடிப்படையில் கடந்த இலையுதிர்காலத்தில் திரட்டப்பட்ட 300,000 துருப்புக்களைக் காட்டிலும் அதிகமான துருப்புக்களைத் திரட்ட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
Yevgeny Prigozhin, founder of Russia’s Wagner Group, a mercenary army,
நேர்காணலில் ப்ரிகோஜினின் மிகவும் குறிப்பிடத்தக்க விடயங்கள் எதிர்ப்புரட்சிகர மற்றும் பிற்போக்கு மரபுகளுக்கு சாட்சியமளித்தன.
இந்த மரபு, பிரிகோஜின் மட்டுமல்ல, புட்டினின் தன்னலக்குழு ஆட்சி முழுவதுமாக உள்ளது. இராணுவத் தலைமையைத் தாக்கும் போது, அக்டோபர் புரட்சிக்கு எதிரான தேசியவாத எதிர்வினைக்கு தலைமை தாங்கிய மற்றும் 1930 களின் பயங்கரவாதத்தில் பல்லாயிரக்கணக்கான சோசலிச புரட்சியாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் கொல்லப்பட்டதற்கு காரணமான சோவியத் அதிகாரத்துவத்தின் நீண்டகாலத் தலைவராக இருந்த ஜோசப் ஸ்டாலினை, விளாடிமிர் புட்டினுக்கு ஒரு நேர்மறையான எடுத்துக்காட்டு என்று பிரிகோஜின் குறிப்பிட்டார்.
‘’இராணுவத் தலைமையின் இத்தகைய தோல்வியின் சந்தர்ப்பங்களில், Iosif Vissarionovich [ஸ்டாலின்] முடிவுகளை எடுத்திருப்பார், அவர் 200 பேரை சுட்டுக் கொன்றிருப்பார்… ஆனால் இதுவரை, இங்கு யாரும் எந்த முடிவையும் எடுக்கவில்லை’’ என்று ப்ரிகோஜின் குறிப்பிட்டார்.
பின்னர், அக்டோபர் புரட்சி மீண்டும் நிகழும் என்று அவர் வெளிப்படையாக எச்சரித்தார். ஷோய்கு மற்றும் பிற அமைச்சர்களின் குழந்தைகளின் வாழ்க்கை முறைக்கு எதிராக, ப்ரிகோஜின் பின்வருமாறு எச்சரித்தார்,
‘’போருக்கு மத்தியில் உயரடுக்கின் ஆடம்பர வாழ்க்கை முறை 1917 இல் ஒரு புரட்சியுடன் முடிவடைந்தது, முதலில் அனைத்து வீரர்களும் எழுவார்கள், பின்னர் அவர்களின் அன்புக்குரியவர்கள் எழுவார்கள். அவர்களில் ஏற்கனவே பல்லாயிரக்கணக்கானவர்கள் உள்ளனர் – கொல்லப்பட்டவர்களின் உறவினர்கள். ஒருவேளை நூறாயிரக்கணக்கானவர்கள் இருக்கலாம் – அதை எங்களால் தவிர்க்க முடியாது.‘’
ப்ரிகோஜினின் இந்த எச்சரிக்கைகள் ரஷ்ய தன்னலக்குழுவின் முக்கிய அச்சங்களை வெளிப்படுத்துகின்றன:
சோசலிச அக்டோபர் புரட்சிக்கு எதிரான ஸ்ராலினிச பிற்போக்குத்தனத்திலிருந்து வெளிப்பட்ட, சோவியத் யூனியனின் அழிவிலும் முதலாளித்துவத்தின் மறுசீரமைப்பிலும் உச்சக்கட்டத்தை அடைந்த ரஷ்ய தன்னலக் குழுக்கள், இந்த யுத்தம், முதலாம் உலகப் போரைப் போன்று, புரட்சிகர இயக்கங்களின் வெடிப்புக்கு வழிவகுக்கும் என்பதையும், ரஷ்யாவிலும் உக்ரேனிலும் உள்ள தொழிலாளர்கள் தங்களின் சக்திவாய்ந்த மற்றும் பகிரப்பட்ட மார்க்சிச மற்றும் சர்வதேசிய அரசியல் மரபுகளில் புத்துயிர் பெறுவார்கள் என்பதையிட்டும் பீதியடைகிறதை தவிர வேறு எதற்கும் அஞ்சவில்லை.
இந்தப் பாதை -சுயாதீனமான புரட்சிகரப் போராட்டப் பாதை- துல்லியமாக அணுவாயுத மூன்றாம் உலகப் போரை நோக்கிய போரை மேலும் தீவிரப்படுத்துவதைத் தடுக்க, பிராந்தியம் முழுவதிலும் மற்றும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்கள் எடுக்க வேண்டிய பாதையாகும்.
மொழிபெயர்ப்பின் மூலக் கட்டுரையை இங்கே காணலாம்