ரஷ்ய ஆக்கிரமிப்புக்குட்பட்ட, தெற்கு யுக்ரேன் பகுதியில் அமைந்திருந்த மிகப்பெரிய அணையான ‘கக்வோவ்கா அணை’ உடைக்கப்பட்டு வெளியேறிய பெருமளவு தண்ணீர், சுற்றியுள்ள நிலப் பகுதிகளைச் சூழ்ந்துள்ளது. அந்த வெள்ளத்தில் கண்ணிவெடிகள் மிதந்து வருவது புதிய ஆபத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதன் காரணமாக அங்கு பேரழிவு ஏற்படலாம் எனச் செஞ்சிலுவைச் சங்கம் எச்சரித்துள்ளது.
டினிப்ரோ ஆற்றின் நீரின் அளவு தொடர்ந்து அதிகரித்து வருவதால், கெர்சன் பகுதியைச் சேர்ந்த மக்கள் அவ்விடத்தை விட்டு வெளியேறி வருகின்றனர்.
இந்த அணை உடைப்புச் சம்பவம் தொடர்பாக ரஷ்யா – யுக்ரேன் ஆகிய இரு நாடுகளும் தங்களுக்குள் ஒருவரையொருவர் மாறிமாறி குற்றம்சாட்டி வருகின்றனர்.
விளம்பரம்
அணையிலிருந்து வெளியேறும் வெள்ளத்தில் சிக்கி, ரஷ்ய கட்டுப்பாட்டில் உள்ள ஒலெஷ்கியை பகுதியைச் (Oleshky) சேர்ந்த மூன்று பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் யுக்ரேனிலிருந்து வெளியேறிய, இந்தப் பகுதி மேயர் யெவன் ரிஷ்சுக், வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ள பகுதிகளில் இன்னும் அதிகமான உயிரிழப்புகள் இருக்கலாம் என ரஷ்ய அரசு தொலைக்காட்சியிடம் கூறியுள்ளார்.
ஆனால் ரஷ்யா – யுக்ரேன் ஆகிய நாடுகளைச் சேர்ந்த இருதரப்பு அதிகாரிகள் கூறும் தகவல்கள் எதையும், பிபிசியால் இதுவரை உறுதிப்படுத்த முடியவில்லை.
அதேசமயம், “அகற்றப்பட்ட கண்ணிவெடிகள் வெள்ளத்தில் மிதந்து வருவதால், அங்குள்ள மக்களுக்கு மட்டுமல்லாமல், அங்கு உதவி செய்ய செல்பவர்களுக்கும் பெரும் ஆபத்தாக முடியலாம்” என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் ஆயுத மாசுப் பிரிவின் தலைவர் எரிக் டொலோஃப்சன் எச்சரித்துள்ளார்.
ஏ.ஃப்.பி (AFP) செய்தி நிறுவனத்திடம் பேசிய அவர், “வெள்ளத்திற்கு முன்னால் கண்ணி வெடிகள் இருக்கும் இடம் குறித்து எங்களுக்குத் தெரியும். ஆனால் இப்போது அது எங்கெங்கு இருக்கிறது என்பது குறித்துஎங்களுக்குத் தெரியவில்லை. ஆனால் அது வெள்ளம் ஏற்பட்டுள்ள பகுதிகளில்தான் எங்கேயோ உள்ளது” என்று கூறியுள்ளார்.
யுக்ரேனின் தொலைக்காட்சி ஒன்றிடம் பேசிய, யுக்ரேன் ராணுவத்தின் தெற்கு படையின் செய்தி தொடர்பாளர் நடாலியா ஹூமெனிக், “ரஷ்ய ஆக்கிரமிப்பிலிருந்த பல காலாட்படைக்கு எதிரான கண்ணிவெடிகள், வெள்ளத்தால் அகற்றப்பட்டு தற்போது வெள்ள நீரில் மிதக்கும் கண்ணிவெடிகள் மாறிவிட்டன.
கண்ணி வெடிகள் ஒன்றுடன் ஒன்று உரசிக் கொள்ளும்போது அவை வெடித்துச் சிதறும் வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. இது மிகப்பெரிய அபாயத்தை விளைவிக்கும். ” என்று குறிப்பிட்டுள்ளார்.
கக்கோவ்காவில் என்ன நடந்தது?
ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதியான நோவா கக்வோவ்காவில் இருந்த மிகப்பெரிய அணை, கடந்த செவ்வாயன்று தகர்க்கப்பட்டது. இதனால் அணையிலிருந்து வெளியேறிய வெள்ளநீர் சுற்றியுள்ள பகுதிகளை மூழ்கடித்தது.
இதனால் அணையையொட்டி இருந்த கெர்சன் பகுதியைச் சேர்ந்த 30 கிராமங்கள் நீரில் மூழ்கியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கிராமங்களைச் சேர்ந்த 2000க்கும் அதிகமான குடும்பங்கள் தங்கள் வீடுகளை இழந்து தவித்து வருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
ரஷ்யாவின் ஆக்கிரமிப்பு பகுதியான, டினிப்ரோ ஆற்றின் கிழக்கு பக்கத்திலிருந்து மீட்பு படகின் மூலம் கெர்சனுக்கு வந்திறங்கிய பெண் ஒருவர், “அணையின் உடைப்பு குறித்த செய்தியைத் தான் கேள்விப்பட்ட அடுத்த சில மணி நேரங்களில், தங்களின் நிலைமை தலைகீழாக மாறிவிட்டதாக” கூறுகிறார்.
“எங்கள் பகுதியைச் சூழ்ந்த தண்ணீரின் அளவு உயர்ந்துகொண்டே சென்றது. அந்த நேரத்தில் எங்கள் வீடுகளிலிருந்து எவ்வளவு பொருட்களை எடுத்துக்கொள்ள முடியுமோ, அவ்வளவு பொருட்களை எடுத்துக்கொண்டோம். விபத்து நடந்தபோது நான் சமையல் வேலையில் ஈடுபட்டிருந்தேன். ஆனால் அப்போது எனது கால்கள் ஏற்கனவே நீரில் மூழ்கியிருந்தன. அந்த நீரின் அளவு மிகச் சீக்கிரமாக அதிகரிக்கத் தொடங்கியது” என்று பிபிசியிடம் கூறுகிறார் 40 வயதான அந்த பெண்.
இந்த நிலையில், ”ஆற்றின் இரு பக்கத்திலிருக்கும் மக்களுக்கும் உதவிகள் செய்யும் வகையில், யுக்ரேன் பல நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது” என யுக்ரேனின் உள்துறை அமைச்சர் இஹோர் கிளிமென்கோ கூறியுள்ளார்.
”ஏற்கனவே ஆற்றின் வலது பக்கத்திலிருக்கும் மக்களுக்குத் தேவையான உதவிகளைச் செய்து வருகிறோம். இதுபோக ரஷ்ய ஆக்கிரமிப்பில் உள்ள ஆற்றின் இடதுபக்கத்தில் வசிக்கும் மக்களுக்கும் உதவி செய்யத் திட்டமிட்டு வருகிறோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
வெள்ள நீரால் மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள கெர்சன்
வெள்ள நீரால் பாதிக்கப்பட்டுள்ள 30 கிராமங்களில் 20 கிராமங்கள் யுக்ரேன் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும், மேலும் 10 கிராமங்கள் தற்காலிகமாக ரஷ்ய ஆக்கிரமிப்பில் இருப்பதாகவும் அவர் கூறுகிறார்.
”மக்கள் தங்களை தாங்களே தற்காத்துக்கொள்ளும் நிலைக்கு, ரஷ்யா அவர்களைத் தள்ளியிருக்கிறது” எனவும் கிளிமென்கோ சாடுகிறார்.
புதன்கிழமையன்று இரவு கெர்சனை சூழ்ந்துள்ள வெள்ள நீரின் அளவு உச்சக்கட்டத்தை எட்டிவிட்டது. இந்த நிலையில், பரந்த கக்கோவ்கா பதியிலிருக்கும் விவசாய நிலங்கள் பேரழிவில் இருப்பதாகப் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்த பாதிப்பிலிருந்து ஏற்கனவே 1700 பேர் மீட்கப்பட்டுள்ளதாக கெர்சனின் பிராந்திய தலைவர், ஒலெக்சாண்டர் புரோகுடின் தெரிவித்துள்ளார். அதேபோல் ஆற்றின் மற்றொரு பக்கத்தில் உள்ள கிரெம்லின் பகுதியில் நியமிக்கப்பட்டுள்ள அதிகாரிகள், அங்கிருந்து 1200 பேரை மீட்பதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருவதாகத் தெரிவித்துள்ளனர்.
மேலும் யுக்ரேன் பகுதிக்குட்பட்ட டினிப்ரோ ஆற்றின் மேற்கு பகுதியில் வசிக்கும் 17,000 பேரும், ரஷ்ய ஆக்கிரமிக்குட்பட்ட ஆற்றின் கிழக்குப் பகுதியில் வசிக்கும் 25,000 பேர் உட்பட மொத்தம் 40,000க்கும் அதிகமானோர் தங்களது வசிப்பிடங்களிலிருந்து வெளியேரும் நிலையில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
”பாதிக்கப்பட்டுள்ள மக்களின் வீடு முற்றிலும் சேதமடைந்து உள்ளதாகவும், அவர்களின் அவலநிலை தொடர்ந்து நீடித்து வருவதாகவும்” யுனிசெஃப் அமைப்பின் டேமியன் ரேன்ஸ் தெரிவித்துள்ளார்.
”அணை உடைக்கப்பட்டு தண்ணீர் வெளியேறிவுள்ளதால் அங்கு குடிநீர் விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும், குடியிருப்புகளைச் சுற்றி தண்ணீர் சூழப்பட்டுள்ளதால் அங்கு மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும்” டேமியன் குறிப்பிடுகிறார்.
கெர்சன் பகுதியைச் சுற்றியுள்ள ஆயிரக்கணக்கான மக்கள் குடிநீர் இல்லாமல் தவித்து வருவதாக யுக்ரேனின் பிரதமர் விளாடிமிர் ஜெலன்ஸ்கி புதன்கிழமையன்று தெரிவித்துள்ளார். இது டேமியனின் வார்த்தைகளை உறுதிப்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
அங்கு நிலைமை இப்படி மோசமடைந்து வருகையில், இந்த விவகாரத்தில் யுக்ரேனும் ரஷ்யாவும் தங்களுக்குள் மாறிமாறி குற்றம்சுமத்தி வருகின்றனர்.
அணை உடைப்பிற்கு காரணம் ரஷ்யாதான் எனவும், இதனால் பாதிக்கப்பட்டுள்ள ரஷ்ய ஆக்கிரமிப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு உதவ, ரஷ்யா சிறிய முயற்சி கூட செய்யவில்லை எனவும் யுக்ரேன் கூறுகிறது.
அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியின் செனட்டர் பாப் மெனெண்டஸ், “இந்த தாக்குதலுக்கு ரஷ்யாதான் காரணம் என உறுதியாகக் கூறமுடியாது” என்று பிபிசியிடம் தெரிவித்தார்.
” இதற்கு முன்னதாக யுக்ரேனின் உட்கட்டமைப்பைத் தகர்க்கும் விதமாக ரஷ்யா பல நடவடிக்கைகளை எடுத்துள்ளது. ஆனால் ரஷ்யா அதை ஒருபோதும் ஒப்புக்கொண்டதில்லை என்பது நமக்குத் தெரியும்” என்றும் அவர் குறிப்பிடுகிறார்.
ஆனால் அதேசமயம் ரஷ்ய பிரதமர் விளாடிமர் புதின், துருக்கியைச் சேர்ந்த தலைவர் ரிசப் தயிப் எர்டோகனுடன் தொலைப்பேசியில் உரையாடுகையில் இது ஒரு காட்டுமிராண்டித்தனமான செயல் (“a barbaric act” ) எனக் குறிப்பிட்டுள்ளார். ரஷ்யா இந்த தாக்குதலுக்குக் காரணம் யுக்ரேன்தான் எனக் கூறுகிறது.
கெர்சன் நகரைச் சூழ்ந்திருக்கும் சமீபத்திய துயரம் இது. கடந்தாண்டு போர் தொடங்கிய குறுகிய காலத்தில் ரஷ்யப் படையினரால் இந்த பகுதி ஆக்கிரமிக்கப்பட்டது. ஆனால் கடந்த நவம்பர் மாதம் மீண்டும் யுக்ரேனால் மீட்கப்பட்டது. அப்போதிலிருந்து இந்த நகரம் பல பாதிப்புகளைச் சந்தித்து வருகிறது.
கெர்சனை பகுதியைச் சேர்ந்த 57 வயது பெண் விக்டோரியா யெர்மென்கோ பிபிசியிடம் பேசும்போது, “கடந்தாண்டு பிப்ரவரியில் எனது வீடு தகர்க்கப்பட்டது. அதன் பின் எனது மகனின் வீட்டில் வசித்து வந்தேன். இப்போது இந்த வீடும் வெள்ளத்தில் மூழ்கிவிட்டது” என்று வேதனையுடன் தெரிவித்தார்.
”வீடுகளைத் தண்ணீர் சூழ தொடங்கியபோது, அங்கே பதற்றம் நிலவ தொடங்கியது. நாங்கள் உடனடியாக அங்கிருந்து கிளம்ப வேண்டும். ஆனால் அது சிரமமானது. நாங்கள் எங்களது பொருட்களை எடுக்க வேண்டியிருந்தது. எனது சகோதரர் பக்கவாதத்தில் பாதிக்கப்பட்டிருந்தார். எப்படியோ அங்கிருந்து வெளியேறிவிட்டோம்” என்று அவர் குறிப்பிடுகிறார்.
சமீபத்திய ஆண்டுகளில் கக்கோவ்கா அணை, கியேவுக்கும் மாஸ்கோவிற்கும் இடையிலான செல்வாக்கின் அடையாளமாக மாறியுள்ளது.