மத்திய வங்கியால் நிர்ணயிக்கப்படுகின்ற அரச மற்றும் தனியார் வங்கி கட்டமைப்புக்கான வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளன.
அதன்படி, துணை நில் வைப்புகளுக்கான வட்டி வீதமாகவும், துணைநில் கடன் வசதிகளுக்கான வட்டி 14 வீதமாகவும் நிர்ணயிக்கப்பட்டுள்ளன.
இந்த வட்டி வீத குறைப்பானது மிகவும் முக்கியத்துவம் மிக்கது என்பதுடன், நாட்டின் பொருளாதார கட்டமைப்பிலும் மக்களின் அன்றாட பொருளாதார செயற்பாடுகளிலும் மாற்றங்களை ஏற்படுத்தும்.
கிட்டத்தட்ட ஒரு வருட காலத்தின் பின்னர் இவ்வாறு மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டிருக்கின்றன.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நாடு வங்குரோத்து நிலையை அடைந்ததன் பின்னர் மத்திய வங்கியினால் வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன.
அதன்படி, வைப்புக்களுக்கான வட்டி 15.5 வீதமாகவும் கடன் வசதிகளுக்கான வட்டி 16.5 வீதமாகவும் அதிகரிக்கப்பட்டது. இந்த வட்டி வீத அதிகரிப்பு தொடர்ந்து பேணப்பட்டு வந்த நிலையில் தற்போது 2.5 வீதத்தினால் குறைக்கப்பட்டிருக்கிறது.
எவ்வாறு வட்டி வீதங்கள் பணவீக்கத்தை குறைக்கும்?
பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்காகவே 2022ஆம் ஆண்டு இவ்வாறு வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன.
அந்த வகையில், தற்போது பணவீக்கமானது படிப்படியாக குறைவடைந்து வருகிறது. கடந்த வருடம் இறுதிப் பகுதியில் 70 வீதமாக பதிவாகியிருந்த பொதுவான பண வீக்கம் 25 வீதமாக கடந்த மே மாதம் குறைவடைந்தது.
2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மத்திய வங்கி வட்டி வீதங்களை அதிகரித்தது. பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு என்று கூறியே வட்டி வீதங்கள் அதிகரிக்கப்பட்டன. அதன்படி, தொடர்ந்து 15.5 மற்றும் 16.5 என்ற வட்டி வீதங்களில் மாற்றம் செய்யாமல் இருப்பதற்கு மத்திய வங்கி தீர்மானித்தது.
மத்திய வங்கி அறிவிக்கும் வங்கி வட்டி வீதங்கள் மிகவும் முக்கியமானதாகும். இலங்கையில் வங்கிகள் வழங்குகின்ற கடன்கள் மற்றும் மக்கள் செய்கின்ற வைப்புகளுக்கு வழங்குகின்ற வட்டி வீதங்களை தீர்மானிக்கின்ற ஒரே நிறுவனம் இலங்கை மத்திய வங்கியாகும்.
வட்டி வீத அதிகரிப்பினால் வங்கிக் கடனுக்கான வட்டி வீதங்கள் 25 வீதத்தை தாண்டின. மேலும், நிலையான வைப்புக்களுக்கான வட்டி வீதங்களும் அதிகரித்தன.
இதனால் மக்கள் பணத்தை வங்கிகளில் வைப்புச் செய்வார்கள் என்றும் அதனால் கேள்வி குறைவடைந்து பணவீக்கம் குறையும் என்றும் மத்திய வங்கி எதிர்பார்த்தது. இது சர்வதேச ரீதியான கோட்பாடாகும். அது கைகொடுத்தது என்றே கூறவேண்டும்.
2022 நடுப்பகுதியில் 70 வீதமாக அதிகரித்த பணவீக்கம் தற்போது 25 வீதமளவில் குறைவடைந்தது. இந்த நிலையிலேயே தற்போது மத்திய வங்கி வட்டி வீதங்களை குறைப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கிறது.
மத்திய வங்கி என்ன கூறுகிறது?
இது தொடர்பாக மத்திய வங்கி வெளியிட்டிருக்கின்ற அறிக்கையில் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையானது மே 31ஆம் திகதி நடைபெற்ற அதன் கூட்டத்தில் மத்திய வங்கியின் துணைநில் வைப்பு வசதி வீதத்தினையும், துணைநில் கடன்வழங்கல் வசதி வீதத்தினையும் முறையே 13.00 சதவீதத்துக்கும் 14.00 சதவீதத்துக்கும் 250 அடிப்படைப் புள்ளிகளினால் குறைப்பதற்கு தீர்மானித்துள்ளது.
எதிர்பார்த்ததிலும் பார்க்க விரைவாக குறைவடைகின்ற பணவீக்கம், பணவீக்க அழுத்தங்கள் படிப்படியாக இல்லாதொழிகின்ற நிலையில் நாணய நிலைமைகளை தளர்வடையச்செய்கின்ற நோக்குடன் சபை இத்தீர்மானத்தினை மேற்கொண்டது.
இத்தகைய நாணயத் தளர்வடையச்செய்தலின் ஆரம்பமானது 2022இல் பதிவு செய்யப்பட்ட நடவடிக்கைகளின் வரலாற்றுச் சுருக்கத்திலிருந்து பொருளாதாரம் மீளெழுச்சியடைவதற்கான உத்வேகமொன்றினை வழங்குகிறது. இதுநிதியியல் சந்தைகளில் உள்ள அழுத்தங்களையும் தளர்வடையச் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களுக்கு மகிழ்ச்சி?
அதன்படி, தற்போது மத்திய வங்கியின் வட்டி வீதங்கள் குறைக்கப்பட்டுள்ளமையானது சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்களை பொறுத்தவரையில், கடன்களை பெற்று வர்த்தகங்களை செய்யக்கூடிய நிலைமை ஏற்படும் நிலைமை உருவாகியிருக்கிறது.
முக்கியமாக, கடந்த ஒரு வருட காலமாக வட்டி வீத அதிகரிப்பினால் சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டனர்.
முக்கியமாக, வங்கிகளில் கடன்களை பெற்று வர்த்தகங்களை செய்துகொண்டிருக்கின்ற தரப்பினர் வட்டி வீத அதிகரிப்பினால் கடுமையான நெருக்கடிகளை எதிர்கொண்டனர். கடன் மற்றும் வட்டி தவணைப் பணம் மிக அதிகளவில் அதிகரித்து காணப்பட்டது.
இதனை சமாளிக்க முடியாமல் கடந்த காலங்களில்சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தனர்.
இது தொடர்பாக தொடர்ச்சியாக சிறிய மற்றும் நடுத்தர வர்த்தக முயற்சியாளர்கள் அரசாங்கத்திடமும் மத்திய வங்கியிடமும் வட்டி வீதங்களை குறைக்குமாறு கோரிக்கை விடுத்து வந்தனர்.
எனினும், பணவீக்கத்தை கட்டுப்படுத்துவதற்கும் நாணய மாற்று வீதத்தில் ஸ்திர தன்மையை பேணுவதற்கும் மத்திய வங்கி தொடர்ச்சியாக வட்டி வீதங்களை அதிகரித்த நிலையிலேயே பேணி வந்தது.
கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடர்ச்சியாக வட்டி வீதங்கள் அதிகரித்த நிலையிலேயே பேணப்பட்டு வந்தன.
எனினும், தற்போது மத்திய வங்கியின் நோக்கமான பணவீக்கம் குறைவடைந்து வருவதையடுத்து வட்டி வீதத்தை குறைப்பதற்கு மத்தியில் வங்கி தீர்மானித்திருக்கிறது.
இதன் அடிப்படையில், எதிர்வரும் மாதங்களில் மக்களின் வங்கி வைப்புகளுக்கான வட்டி வீதம் ஒரு குறிப்பிட்ட அளவில் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதேபோன்று மக்கள் பெறுகின்ற வங்கி கடன்களுக்கான வட்டி வீதமும் குறிப்பிடத்தக்க அளவில் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே கடன் பெற்றவர்களின் வட்டி வீதங்களும் குறைவடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இலங்கையின் அண்மைய பொருளாதார வரலாற்றில் மிக அதிகமான வட்டி வீத அதிகரிப்பாக இந்த கடந்த வருட வட்டி வீத அதிகரிப்பு காணப்பட்டது.
எதிர்காலத்தில் பணவீக்கம் மேலும் குறையும் என இலங்கை மத்திய வங்கி கணித்துள்ளதுடன், எதிர்பார்த்த காலத்தை விட விரைவில் குறைவடையும் என சுட்டிக்காட்டியுள்ளது.
அந்த வகையில், வட்டி வீதம் குறைவடைவதால் எவ்வாறான தாக்கம் பொருளாதாரத்துக்கு ஏற்படும் என்பதை சரியான முறையில் இங்கு ஆராய்ந்து பார்க்கவேண்டிய அவசியம் காணப்படுகிறது.
முக்கியமாக, மத்திய வங்கி வட்டி விகிதங்களை குறைக்கும்போது நாட்டின் பொருளாதாரம் விரிவடையும். அபார பொருளாதாரம் விரிவடையும்போது மக்களின் பொருளாதார செயற்பாடுகள் அதிகரித்து பொருளாதார நிலைமைகள் சாதக நிலைமையை அடையும்.
வசதி அதிகரிக்கும்போது பொருளாதாரம் சுருக்கம் அடைந்துவிடும். பொருளாதார செயற்பாடுகள் சுருங்கிவிடும். மக்கள் பணத்தை வங்கியில் வைப்பு செய்துவிடுவார்கள்.
குறிப்பாக, கடந்த வருடத்திலிருந்து இதுவரை வட்டி வீதங்கள் அதிகரித்து காணப்பட்டதால் சிறிய மற்றும் நடுத்தர வர்க்கத்தினர் பாதிப்புகளை எதிர்கொண்டனர்.
அவர்கள் தங்களது முயற்சிகளைக் கொண்டுசெல்ல முடியாத நிலைமை காணப்பட்டது. இதனால் தொழிலாளர்களின் தொழில்கள் பறிபோயின. வருமானம் குறைவடைந்தது. இதன் காரணமாகவே மக்களுக்கு வருமானம் குறைந்து, அதனால் மக்களின் கொள்வனவு சக்தியும் குறைவடைந்தது.
மறுபுறம், வட்டி வீதம் அதிகம் என்பதால் மக்கள் நிதியை வங்கியில் வைப்புச் செய்ய ஆர்வம் காட்டினர். இதனால் மக்களின் கைகளில் பணம் அதிகளவு இருக்கவில்லை.
மேலும், புதிய கடன்களையும் பெற்றுக்கொள்ள முடியவில்லை. காரணம், வட்டி வீதம் அதிகமாக இருப்பதால் புதிய கடன்கள் பெறப்படவில்லை.
இதன் காரணமாக மக்களின் கரங்களில் இருந்த பணம் வங்கியை நோக்கி நகர்ந்தது. இதனால் மக்களின் கொள்வனவு வீதம் குறைவடைந்து கேள்வி குறைந்தது. இதனால் பணம் வீக்கமடைய ஆரம்பித்தது.
அதன் அடிப்படையில், தற்போது மீண்டும் வட்டி விகிதங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கின்றன. வட்டி விகிதம் குறைவடையும் பட்சத்தில், மக்கள் நிதியை வங்கிகளில் வைப்பு செய்வதில் ஆர்வம் காட்ட மாட்டார்கள்.
எனவே, மக்களின் கைகளில் நிதி புலங்க ஆரம்பிக்கும் அதேவேளை புதிய கடன்களையும் மக்கள் பெறுவதற்கு ஆர்வம் காட்டுவார்கள். காரணம், வட்டி வீதம் குறைவாக இருப்பதால் புதிய கடன்களை பெற்றுக்கொள்ள முடியும். எனவே, மக்களின் கைகளுக்கு பணம் அதிகமாகும்.
கைகளில் அதிகம் பணம் புழங்கும் நிலைமை ஏற்படும். இது கேள்வியை மீண்டும் அதிகரிக்கும். எனவே, அதற்கேற்ற வகையில், வளங்களை செய்துகொள்ளவேண்டிய தேவை காணப்படுகிறது. பொருளாதாரம் விரிவடைந்து செல்வதற்கும் பொருளாதார சுருக்கத்தை தவிர்ப்பதற்கும் வட்டி வீத குறைப்பு அவசியமாகும்.
இலங்கையில் மட்டுமல்ல, முழு உலகிலும் இதுதான் வட்டி விகிதத்தின் நிலைமையாக காணப்படுகிறது. இதுவே வட்டி வீத குறைப்பானது. மக்களின் கடன் தவணை பணம் குறைந்திருப்பது தொடர்பிலும் தற்போது கேள்விகள் எழுப்பப்படுகின்றன.
நீங்கள் பெறுகின்ற வட்டிக் கடன்களுக்கான வட்டி விகிதங்கள் மிதக்கும் தன்மையாக இருந்தால் வட்டி வீதம் குறைவடையும்.
ஆனால், நிரந்தர வட்டி வீதத்துக்கான கடன்களை நீங்கள் பெற்றிருந்தால் தற்போது இந்த வட்டி வீத குறைப்பு உங்கள் கடன் தவணைப் பணத்தை குறைக்காது. ஆனால், எதிர்வரும் காலங்களில் நீங்கள் பெறக்கூடிய கடன்களுக்கான வட்டி குறைவடையும்.
எப்படியிருப்பினும், இந்த வட்டி விகித குறைப்பானது பொருளாதாரத்தை பொறுத்தவரையில், பொருளாதாரம் விரிவடைவதற்கும், பொருளாதார செயற்பாடுகள் அதிகரிப்பதற்கும், பணப்புழக்கம் மக்களிடையே அதிகரிப்பதற்கும் வாய்ப்பளிக்கான நிலைமையை காட்டுகிறது. இது பொருளாதார பணவீக்கத்தை மேலும் அதிகரிக்கலாம். ஆனால், அதற்கேற்ற வளங்களை செய்துகொண்டால், அந்த நிலைமையை சமாளிக்க முடியும் என்பதே சகலரதும் எதிர்பார்ப்பாக இருக்கிறது.
ரொபட் அன்டனி