தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிரேத பரிசோதனை அறிக்கையை வழங்குவதில் சிக்கல் நிலை காணப்படுவதாக இலங்கை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்குமாறு கோரி, தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன தாக்கல் செய்த கோரிக்கைக்கு பதிலளித்தபோதே பாதுகாப்பு அமைச்சு இதைக் குறிப்பிட்டுள்ளது.

பிரபாகரனின் மரண பரிசோதனை அறிக்கையை வழங்குவது, நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலானது என இலங்கை பாதுகாப்பு அமைச்சு பதிலளித்துள்ளது.

இலங்கையில் 30 ஆண்டுகளுக்கும் மேல் இடம்பெற்ற உள்நாட்டுப் போர், 2009ஆம் ஆண்டு மே மாதம் 19ஆம் தேதி முடிவுக்கு வந்ததாக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், போர் முடிவடைந்து 14 ஆண்டுகள் கடந்துள்ள போதிலும், போரின் சர்ச்சைகள் இன்றும் தொடர்ந்த வண்ணமே உள்ளன.

போர் குற்ற விசாரணைகள், காணாமல் போனோர் விவகாரம், ராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டவர்களின் நிலைமை, அரசியல் கைதி விவகாரம், காணி விவகாரம் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகளுக்கு இன்றும் தீர்வு கிடைக்காத நிலைமை காணப்படுகின்றது.

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் இறுதிப் போரில் கொல்லப்பட்டதாக இலங்கை அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட போதிலும், அதற்கான எந்தவித ஆதாரங்களையும் இலங்கை அரசாங்கம் இதுவரை வெளியிடவில்லை.

 

பிரபாகரனின் உடற்கூராய்வு அறிக்கையை வழங்க மறுப்பு

இந்த நிலையில், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் உள்ளார் என ஒரு தரப்பினர் கூறி வருகின்ற நிலையில், அவர் உயிரிழந்துவிட்டதாக மற்றுமொரு தரப்பு கருத்துகளை முன்வைத்து வருகின்றது.

இவ்வாறான கருத்துகளுக்கு முற்றுப் புள்ளி வைக்கும் வகையில், இலங்கை ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தனவினால், தகவலறியும் உரிமை சட்டத்தின்கீழ், பாதுகாப்பு அமைச்சிடம் பிரபாகரனின் உடற்கூராய்வு அறிக்கை கோரப்பட்டுள்ளது.

பிரபாகரனின் மரபணு பரிசோதனை அறிக்கை, உடற்கூராய்வு அறிக்கை ஆகியவற்றை இலங்கை அரசாங்கம் வெளியிடாத பின்னணியிலேயே இந்தக் கோரிக்கை முன்வைக்கப்பட்டது.

இந்த நிலையிலேயே, அந்த அறிக்கையை வழங்க இலங்கை அரசாங்கம் மறுத்துள்ளது.

எனினும், விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் இறுதிக் கட்ட போரில் உயிரிழந்து விட்டதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன

பிரபாகரனின் உடற்கூராய்வு அறிக்கை, மரபணு பரிசோதனை அறிக்கை, உயிரிழந்தது பிரபாகரன் என உறுதி செய்வதற்கு யாரிடமிருந்து டி.என்.ஏ மாதிரிகள் பெறப்பட்டன ஆகியவை தொடர்பான தகவல்களை வழங்கக் கோரி இந்தத் தகவலறியும் விண்ணப்பம் முன்வைக்கப்பட்டிருந்தது.

ககாந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம், தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் பாதுகாப்பு அமைச்சு, ராணுவ தலைமையகம் ஆகியவற்றுக்கு இந்த விண்ணப்பத்தை அனுப்பி வைத்திருந்ததாக ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன கூறுகிறார்.

“தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ், இந்தத் தகவல்களை வழங்கினால் தேசியப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்படும்” எனக் குறிப்பிட்டு இலங்கை ராணுவமும், இலங்கைப் பாதுகாப்பு அமைச்சும் ஊடகவியலாளரின் தகவல் கோரிக்கையை நிராகரித்துள்ளது.

இலங்கை தகவலறியும் ஆணைக் குழுவிற்கு இது தொடர்பில் மேன்முறையீடு செய்துள்ளதாக ஊடகவியலாளர் மிதுன் ஜயவர்தன பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

பிரபாகரனின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொட்டு அம்மானின் மரண சான்றிதழ் அறிக்கை?

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, பிள்ளைகளான சார்ள்ஸ், துவாரகா, பாலசந்திரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை மற்றும் மரண சான்றிதழ் ஆகியவற்றை வழங்க முடியாது என இலங்கை பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராணுவ தலைமையகம் ஆகியவை தெரிவித்துள்ளன.

தகவலறியும் உரிமை சட்டத்தின் கீழ் உதயன் பத்திரிகையின் செய்தி ஆசிரியர் குணாளன் டிலீப் அமுதன், பாதுகாப்பு அமைச்சு மற்றும் ராணுவ தலைமையகத்திடம் கோரியுள்ளார்.

இந்தக் கோரிக்கைக்கு பதிலளித்தபோதே ராணுவ தலைமையகம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு ஆகியன இந்தப் பதிலை வழங்கியுள்ளன.

இதேவேளை, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது மனைவி மதிவதனி, பிள்ளைகளான சார்ள்ஸ், துவாரகா, பாலசந்திரன் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் டி.என்.ஏ பரிசோதனை அறிக்கை மற்றும் மரண சான்றிதழ் ஆகியவற்றை வழங்குமாறு ஜனாதமிபதி செயலகத்திடமும், குணாளன் டிலீப் அமுதன் கோரியுள்ளார்.

எனினும், அவ்வாறான எந்தவொரு தகவலும் தம் வசம் கிடையாது என ஜனாதிபதி செயலகம் பதிலளித்துள்ளது.

செய்தி ஆசிரியர் குணாளன் டிலீப் அமுதன்

பாதுகாப்பு அமைச்சு பிபிசிக்கு வழங்கிய பதில்

தேசிய பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பத்லேயே, இந்தத் தகவல்களை வழங்க முடியாதுள்ளது என்று பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் பிபிசி தமிழுக்கு தெரிவித்தார்.

”நாம் இதை உறுதி செய்துள்ளோம். கருணா அம்மான், தயா மாஸ்டர் ஆகிய இருவரும் உறுதிப்படுத்தினார்கள். இது பிரபாகரனின் உடல் என்பதை இவர்கள் இருவரும் உறுதிப்படுத்தினார்கள். டி.என்.ஏ பரிசோதனையை நாம் முன்னெடுத்துள்ளோம்,” என அவர் கூறினார்.

”டி.என்.ஏ அறிக்கை உள்ளிட்ட தகவல்களை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டியதில்லை.

அவர் உயிரிழந்ததை பாதுகாப்பு அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது. அப்படியென்றால், அது உறுதியாகின்றது,” என பாதுகாப்பு அமைச்சின் ஊடகப் பணிப்பாளரும், ஊடகப் பேச்சாளருமான கேணல் நலின் ஹேரத் பிபிசி தமிழுக்கு பதிலளித்தார்.

மேல்முறையீடு செய்த ஊடகவியலாளர்கள்

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன், அவரது குடும்ப உறுப்பினர்கள் மற்றும் பொட்டு அம்மான் ஆகியோரின் உயிரிழப்பை உறுதி செய்வதற்கான மரண சான்றிதழ் மற்றும் டி.என்.ஏ சான்றிதழ்களை பெற்றுத் தர முடியாது என்று பாதுகாப்பு அமைச்சு, ராணுவ தலைமையகம் ஆகியன கூறியுள்ள நிலையில், அதற்கு எதிராக தகவலறியும் உரிமை ஆணைக்குழுவிடம் குறித்த ஊடகவியலாளர்கள் இருவரும் மேல்முறையீடு செய்துள்ளனர்.

 

Share.
Leave A Reply