அட்லாண்டிக் பெருங்கடலில் டைட்டானிக் பாகங்களைக் காணச் சென்றபோது ஒரு மாலுமி உட்பட 5 பேருடன் மாயமான நீர்மூழ்கிக் கப்பலை காணும் பணி நான்காவது நாளாக தொடர்ந்து நடந்து வருகிறது.

இங்கிலாந்தைச் சேர்ந்த டைட்டானிக் கப்பல் கடந்த 1912ஆம் ஆண்டு, அமெரிக்காவின் நியூயார்க் நகரத்துக்கான தனது முதல் பயணத்திலேயே பனிப்பாறையில் மோதி விபத்துக்குள்ளானது.

இதில் 1,500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதில் டைட்டானிக்கின் உதிரி பாகங்கள் கனடா அருகே அட்லான்டிக் கடல் பகுதியில் 12,500 அடி ஆழத்தில் மூழ்கிக் கிடக்கிறது.

இந்த ஆழ்கடலில் மூழ்கியிருக்கும் டைட்டானிக் கப்பலின் பாகங்களை பார்வையிடும் சாகச சுற்றுலாவை அமெரிக்காவைச் சேர்ந்த ஓசன்கேட் என்ற நிறுவனம் பல ஆண்டுகளாக மேற்கொண்டு வருகிறது.

21 அடி நீளத்தில் டைட்டன் என்ற சிறப்பு நீர்மூழ்கிக் கப்பல் பயன்படுத்தப்படுகிறது. இதில் ஒரு பைலர் மற்றும் 4 பயணிகள் என 5 பேர் மட்டுமே பயணம் செய்ய முடியும். இந்தப் பயணத்திற்கு ஒருவருக்கு ரூ.2 கோடி கட்டண வசூலிக்கப்பட்டிருக்கிறது.

அந்தவகையில் கனடாவின் நியூஃபவுண்ட்லேண்ட் பகுதியில் செயின்ட் ஜான்ஸ் என்ற இடத்தில் இருந்து கடந்த ஞாயிற்றுக்கிழமை ஓசன் கேட் டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல் புறப்பட்டது.

இந்த நீர்மூழ்கிக் கப்பலில் ஹமிஷ் ஹார்டிங் (58) பிரிட்டனைச் சேர்ந்த கடல் சார்ந்த சாகசங்களில் ஆர்வம் மிக்கவர், ஷாசாதா தாவூத் (48) பாகிஸ்தானின் பெரும் செல்வந்த குடும்பத்தைச் சேர்ந்தவர், அவரது மகன் 19 வயதான சுலைமான் தாவூத், பால் ஹென்றி – பிரான்ஸ் கடற்படையின் முன்னாள் பைலட், ஸ்டாக்டன் ரஷ், (61), டைட்டானிக் பயணங்களை இயக்கும் நிறுவனமான ஓஷன் கேட்டின் தலைமை நிர்வாகி ஆகியோர் பயணித்துள்ளனர்.

ஆனால் இவர்களின் பயணம் எதிர்பாத்ததுபோல் அமையவில்லை. சரியாக 1 மணி நேர 45 ஆவது நிமிடத்தில் நீர்மூழ்கிக் கப்பல் தனது சிக்னலை அட்லாண்டிக் கடலில் இழக்கிறது. இதனைத் தொடர்ந்து நீர் மூழ்கி கப்பலை தேடும் பணியில் அமெரிக்கா – கனடாவின் கடற்படை ஈடுபட்டது.

மாயமான நீர்மூழ்கிக் கப்பலில் சுவாசிப்பதற்கு தேவையான ஒட்சிசன் 4 நாட்கள் மட்டுமே உள்ளது. இந்த நிலையில் நாளாவது நாளாக மீட்புப் பணிகள் தொடரும் நிலையில், ஒட்சிசன் மெல்ல மெல்ல தீர்ந்து வருவதாக நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

”தேடுதல் பணி எவ்வளவு விரைவாக நடைபெற வேண்டுமோ அவ்வளவு விரைவாக நடைபெற்று வருகிறது. நாங்கள் நம்பிக்கையுடன் இருக்கிறோம்” என்று கனடா – அமெரிக்க கடற்படை தெரிவித்துள்ளது. தேடுதல் பணியில் கூடுதல் படகுகள், நீர் மூழ்கி இயந்திரங்கள் ஈடுபட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

மீட்புப் பணியின் கேப்டன் ஜேமி பிரட்ரிக் கூறும்போது ,
“ நீர்மூழ்கிக் கப்பலில் எவ்வளவு ஒட்சிசன் எஞ்சியிருக்கிறது என்பதைக் கணிப்பது கடினமான ஒன்று, ஒவ்வொருவருக்கும் ஒட்சிசன் நுகர்வு விகிதம் எவ்வளவு என்று நமக்குத் தெரியாது” என் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையில் மாயமான நீர் முழ்கி கப்பல் 24 மணி நேரத்திற்குப் பிறகு மீண்டும் திரும்பி வரும் வகையில்தான் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று நீர் கப்பலின் முதலீட்டாளர் கூறுகின்றனர். தொடர்ந்து மீட்புப் பணி நடந்து வருகிறது.

Share.
Leave A Reply