மன்னார் உயிலங்குளம் பகுதியில் விசாரணைக்கு சென்ற பொலிஸார் மீது தாக்குதல் மேற்கொண்டதாக குறிப்பிடப்படும் பெண்கள் உட்பட 10 பேர் எதிர்வரும் 10 ஆம் திகதி வரை (10-07-2023) விளக்கமறியலில் வைக்க மன்னார் பதில் நீதவான் ஞாயிற்றுக்கிழமை (25) மாலை உத்தரவிட்டுள்ளார்.

சனிக்கிழமை (24) மாலை மன்னார் – மதவாச்சி பிரதான வீதியில் உள்ள உயிலங்குளம் மதுபானசாலைக்கு அருகில் சிலர் கலவரத்தில் ஈடுபட்டதாக பொதுமக்கள் சிலர் உயிலங்குளம் பொலிசாருக்கு தகவல் தெரிவித்ததை அடுத்து உயிலங்குளம் பொலிஸார் உயிலங்குளம் மதுபான சாலைக்கு சென்று விசாரணை செய்துள்ளனர்.

இதன் போது அவ்விடத்தில் கலவரத்தில் ஈடுபட்ட நபர்கள் சிலரை பொதுமக்கள் பொலிசாருக்கு கூறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அதனடிப்படையில் கலவரத்தில் ஈடுபட்டவர்களை விசாரணை செய்ய முற்பட்ட போது அவ்விடத்தில் நின்ற சிலர் பொலிசாரை தாக்கி உள்ளார்கள்.

தாக்குதலில் காயமடைந்த பொலிசார் மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள்.

இதன் போது சனிக்கிழமை (24) இரவு ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார் என தெரிவிக்கப்பட்டது.

மேலும் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஒருவரின் வீட்டுக்குச் சென்ற பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்டதாக கூறப்படும் சந்தேக நபர்கள் உயிலங்குளம் பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை தொடர்ந்து, விசாரணைகளை மேற்கொண்ட பொலிஸார் குறித்த சந்தேக நபர்களை ஞாயிற்றுக்கிழமை (25) மாலை மன்னார் மாவட்ட நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் முன் ஆஜர்படுத்தியதை தொடர்ந்து குறித்த சந்தேகநபர்களை எதிர்வரும் 30 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க பதில் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

சந்தேக நபர்கள் சில மாதங்களுக்கு முன் மன்னார் நொச்சிக்குளம் பகுதியில் இடம்பெற்ற இரட்டைக் கொலை சம்பவத்தின் போது மரணித்தவர்களின் உறவினர்கள் என தெரிய வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply