போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருளுக்காக புகையிரத தண்டவாளங்களில் உள்ள ஆணிகள், இரும்புத் துண்டுகள் ஆகியவற்றை அகற்றுவதால் பெரும்பாலான புகையிரதங்கள் தடம் புரள்கின்றன.

இவ்வாறானவர்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்க வேண்டும் என புகையிரத திணைக்களத்தின் பிரதி பொது முகாமையாளர் வி.எஸ்.பொல்வத்தகே தெரிவித்தார்.

புகையிரத திணைக்களத்தில் இன்று புதுன்கிழமை (28) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது,

கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 4 மணியளவில் கொஸ்கம நோக்கி புறப்பட்ட பயணிகள் புகையிரதம் பேஸ்லைன் புகையிரத நிலையத்துக்கும் கோட்டே ரோட் புகையிரத நிலையத்துக்கும் இடையிலான பகுதியில் தடம் புரண்டது.

புகையிரத என்ஜின் உட்பட மூன்று புகையிரத பெட்டிகள் இவ்வாறு தடம் புரண்டன. இதனால் களனிவெளி பாதையின் புகையிரத சேவைகள் அனைத்தும் இரத்து செய்யப்பட்டன.

போதைப்பொருள் பாவனைக்கு அடிமையானவர்கள் போதைப்பொருளுக்காக தண்டவாளங்களில் பொருத்தப்பட்டுள்ள ஆணிகள், இரும்புத் துண்டுகள் ஆகியவற்றை அகற்றுகிறார்கள். இவ்வாறான சம்பவம்தான் பேஸ்லைன் – கோட்டே ரோட் புகையிரத நிலையத்தை அண்மித்த புகையிரத பாதையில் இடம்பெற்றுள்ளது. இதனால் புகையிரதம் தடம் புரண்டது.

போதைப்பொருள் பாவனையாளர்கள் தாம் செய்வது எவ்வளவு பெரிய பாரதூரமான செயல் என்பதை அறிவார்களா என்பது சந்தேகத்துக்குரியது. இவ்வாறு வெறுக்கத்தக்க செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் பொதுமக்கள் பொலிஸ் நிலையங்களில் அல்லது புகையிரத பாதுகாப்பு தரப்பினரிடம் முறைப்பாடு அளிக்க வேண்டும் என்றார்.

Share.
Leave A Reply