சென்னை நந்தம்பாக்கம் அருகில் உள்ள பரங்கிமலை பகுதியில் 18 வயது கல்லூரி மாணவி ஒருவர் வசித்து வருகிறார்.
இவர் அடையாற்றில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்துக் கொண்டிருக்கிறார். இவர், இன்று வழக்கம்போல கல்லூரி முடித்துவிட்டு, அப்பகுதியில் உள்ள தனது வீட்டுக்கு திரும்பிக்கொண்டிருந்தார்.
மாணவி வரும் வழியில் அதே பகுதியைச் சேர்ந்த நவீன் என்ற இளைஞர் மாணவியை வழிமறித்துப் பேசியிருக்கிறார்.
அந்த மாணவியிடம் தன்னை காதலிக்க வற்புறுத்தியிருக்கிறார். அதற்கு மாணவி மறுப்பு தெரிவிக்கவே நவீன் தொடர்ந்து வற்புறுத்தியிருக்கிறார்.
ஒருகட்டத்தில், ஆத்திரமடைந்த அந்த இளைஞர் தான் மறைந்துவைத்திருந்த கத்தியை எடுத்து மாணவியைக் கழுத்தில் குத்திவிட்டு அங்கிருந்து தப்பித்துச் சென்றுள்ளார்.
மாணவியின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர், ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவியை மீட்ட சிகிச்சைக்காகத் தனியார் மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.
மேலும், சம்பவமறிந்து வந்த அந்த பகுதி போலீஸார் தப்பி ஓடிய இளைஞரைத் தீவிரமாகத் தேடிவந்தனர்.
அருகிலிருந்த காவலர் குடியிருப்பு பகுதியில் நவீன் பதுங்கியிருந்தது தெரியவந்தது. அவனைப் பிடிக்க முற்படும்போது, நவீன் அங்கிருந்து தப்பித்து ஓடியிருக்கிறான்.
Durairaj G
தப்பியோடியவனை காவல்துறையினர் துரத்தி பிடித்திருக்கிறார்கள். மேலும், அவனைக் காவல்நிலையம் அழைத்துச் சென்று தீவிர விசாரணை செய்துவருகின்றனர்.
படுகாயமடைந்த மாணவிக்குத் தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கல்லூரி மாணவி ஒருவர் கழுத்தில் கத்தியால் குத்திய சம்பவம் அந்த பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.