ஐரோப்பிய நாடுகளில் கடந்த ஆண்டு மாத்திரம் வெப்பத்தினால் 61,000 பேர் உயிரிழந்துள்ளதாக அதிர்ச்சியூட்டும் தகவல் வௌியாகியுள்ளது.

உலக நாடுகள் அனைத்தும் காலநிலை மாற்றத்தால் இயற்கை பேரழிவுகளை சந்தித்து வருகின்றன.

ஒரு புறம் அதீத மழையால் ஏற்படும் வெள்ளம், நிலச்சரிவில் சிக்கி மக்கள் உயிரிழக்கும் நிலையில், மற்றொரு புறம் வெப்பம் தாங்காமல் மக்கள் மரணிக்கின்றனர்.

இந்நிலையில், ஐரோப்பிய ஒன்றியத்தின் 35 நாடுகளில் கடந்த ஆண்டு கோடைக்காலமான மே 30 முதல் செப்டம்பர் 4 வரை வெப்பத்திற்கு பலியானோரின் எண்ணிக்கை குறித்து Barcelona Institute for Global Health (ISGlobal) ஆய்வு ஒன்றை நடத்தியது.

இந்த ஆய்வில், குறிப்பிட்ட காலகட்டத்தில் மட்டும் 61,000-க்கும் அதிகமானோர் பலியானது தெரியவந்துள்ளது. அதிகபட்சமாக ஜூலை 18 முதல் 24 வரையில் மட்டும் 11,637 பேர் உயிரிழந்துள்ளனர்.

பெரும்பாலானோர் இத்தாலி, கிரீஸ், ஸ்பெயின் மற்றும் போர்ச்சுகல் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

உயிரிழந்தவர்களில் பெரும்பாலானோர் 80 வயதைக் கடந்த பெண்கள். இளம் வயதினரை பொறுத்தவரை ஆண்களே அதிகளவில் உயிரிழந்துள்ளனர்.

வெப்பத்தை தாங்க முடியாமல், இதயம், நுரையீரல் தொடர்பான கடுமையான நோய்களால் பாதிக்கப்பட்டு பலர் உயிரிழந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்துள்ளது.

கடந்த 2003-ஆம் ஆண்டு ஐரோப்பிய ஒன்றியத்தில் ஏற்பட்ட வெப்பத்தால் 70,000 பேர் பலியானதைத் தொடர்ந்து, கோடை காலங்களை சமாளிக்க பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. எனினும், கடந்த ஆண்டு 61,000 பேர் பலியாகியுள்ளனர்.

மேலும், காலநிலை மாற்றம் தொடரும் பட்சத்தில் வெப்பம் தாங்காமல் உயிரிழப்போரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிக்கும் என ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த ஆண்டை பொறுத்தவரை ஏற்கெனவே ஜூலை முதல் வாரம், உலகின் அதிக வெப்பம் பதிவான வாரமாக உலக வானிலை மையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், ஐரோப்பிய நாடுகளில் வெப்பத்தை சமாளிக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

முதியவர்கள் இருக்கும் வீடுகளுக்கு மருத்துவக் குழுவினர் சென்று பரிசோதிப்பது, பொது இடங்களில் குளிரூட்டப்பட்ட அறைகள் அமைப்பது, பொது இடங்களில் குளிர்பானம் அளிப்பது போன்ற நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

Share.
Leave A Reply