இந்தியாவில் கடந்த மே மாதம் 4ஆம் திகதி பழங்குடியினப் பெண்கள் இருவர் வீதியில் நிர்வாணமாக அழைத்துச் செல்லப்பட்டு, கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம், பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது.

மணிப்பூரில் பெரும்பான்மையாக இருக்கக்கூடிய சமூக மக்கள், தங்களைப் பழங்குடியினர் பட்டியலில் சேர்க்க வேண்டுமென அரசை வலியுறுத்தி வருகின்றனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கடந்த மே மாதம் 3ஆம் திகதி அந்த மாநிலத்தின் சிறுபான்மையினரான பழங்குடியின மக்கள் அமைதிப் பேரணி நடத்தினர்.

ஆனால் அந்த அமைதிப் பேரணியில் இரு சமூக மக்களுக்கிடையே ஏற்பட்ட மோதலானது, மிகப்பெரிய அளவில் கலவரமாக வெடித்தது. அதைத் தொடர்ந்து குக்கி பழங்குடியினரும், மைதேயி சமூக மக்களும் ஒருவருக்கொருவர் மோதிக்கொண்டனர். அதன் காரணமாக மாநிலம் கலவர பூமியாக மாறியது. வீடுகள், கடைகள், தேவாலயங்கள், கோயில்கள் இந்த வன்முறையில் தீக்கிரையாகின.

கடந்த இரண்டு மாதங்களுக்கு மேலாகப் பற்றியெரிந்துகொண்டிருக்கும் மணிப்பூரில், இதுவரை 140இற்கும் மேற்பட்டோர் இந்தக் கலவரங்கள் காரணமாக உயிரிழந்திருக்கின்றனர். இந்த வன்முறையில் இரு தரப்பினருக்கும் பாதிப்புதான் என்றாலும், குக்கி பழங்குடியினர் அதிக அளவில் பாதிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த மே மாதம் 4ஆம் திகதி நடந்த மிகக் கொடூரமான சம்பவம் ஒன்று தற்போது வெளிச்சத்துக்கு வந்திருக்கிறது.

மைதேயி சமூகத்தைச் சேர்ந்த இளைஞர்கள் சிலர், குக்கி பழங்குடியின சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் செல்லும் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கிறது. குக்கி சமூகத்தைச் சேர்ந்த இரண்டு பெண்களை நிர்வாணமாக்கி இழுத்துச் சென்ற இளைஞர்கள் சிலர், அந்தப் பெண்களின் பாலியல்ரீதியாகத் துன்புறுத்தியிருக்கின்றனர். பின்னர், அவர்களைப் கூட்டுப் பாலியல் வன்கொடுமையும் செய்திருக்கின்றனர்.

மே 4ஆம் திகதி மணிப்பூரின் பி பைனோம் கிராமத்தில் நடந்த இந்தச் சம்பவத்தின்போது பாதிக்கப்பட்ட பெண்களின் குடும்பத்தினர் இருவரும், அந்தக் கும்பலால் கொலைசெய்யப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கடத்தல், கூட்டுப் பாலியல் வன்கொடுமை, கொலை உள்ளிட்டப் பிரிவுகளில் வழக்கு பதிவுசெய்திருக்கும் பொலிஸார் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு குற்றவாளிகளைக் கைதுசெய்ய தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்திருக்கின்றனர்.

பிரதமர் நரேந்திர மோதி கூறியது என்ன?

மணிப்பூர் வன்முறை தொடர்பாக பேசிய பிரதமர் நரேந்திர மோதி

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின் முதல் நாளான இன்று மணிப்பூர் வீடியோ தொடர்பாக பிரதமர் நரேந்திர மோதி தனது கருத்தைக் கூறியுள்ளார்.

மணிப்பூரில் நடந்த சம்பவத்தால் தனது இதயம் சோகத்தில் மூழ்கியுள்ளது என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். “இந்த சம்பவம் வெட்கக்கேடானது. நாடு அவமதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தாய்மார்களையும் சகோதரிகளையும் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு முதலமைச்சர்களிடம் கேட்டுக்கொள்கிறேன்.” என்று அவர் கூறியிருக்கிறார்.

“குற்றவாளிகள் யாரும் விடுவிக்கப்படமாட்டார்கள். சட்டம் அதன் கடமையைச் செய்யும். மணிப்பூரின் மகள்களுக்கு நடந்தது ஒருபோதும் மன்னிக்கப்படாது” என்று பிரதமர் மோதி கூறினார்.

இந்த ஈவுஇரக்கமற்ற கொடூரச் சம்பவத்துக்கு அனைத்து தரப்பினரும் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

 

Share.
Leave A Reply