பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
மைதேயி இனத்தவரும், குகி இன மக்களும் தங்கள் பகுதிகளில் பதுங்கு குழிகள் அமைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள்.
மணிப்பூர் மாநிலத்தில் மைதேயி சமூகத்தை சேர்ந்தவர்கள் சுமார் 53 சதவீதம் பேர் உள்ளனர். அதுபோல நாகா மற்றும் குகி இனத்தை சேர்ந்தவர்கள் சுமார் 40 சதவீதம் பேர் உள்ளனர்.
இவர்களில் குகி இனத்தவர்களுக்கு பழங்குடியின அந்தஸ்து இருக்கிறது. அதேபோன்று தங்களுக்கும் பழங்குடியின அந்தஸ்து வேண்டும் என்று மைதேயி சமூகத்தினர் போராடி வருகின்றனர்.
மைதேயி சமூகத்தினருக்கு பழங்குடியின அந்தஸ்து கொடுக்கக் கூடாது என்று குகி இனத்தவர்கள் எதிர்ப்பு தெரிவித்ததால் இரு சமூகத்தினர் இடையே கடந்த மே மாதம் 3-ந் தேதி மிகப்பெரிய மோதல் ஏற்பட்டது.
அது மணிப்பூர் மாநிலம் முழுவதும் கலவரமாக மாறியது. அதில் 160-க்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டனர். மறுநாள் (அதாவது மே 4-ந்தேதி) குகி இனத்தவர்கள் வாழும் கிராமங்களுக்குள் புகுந்த சுமார் 1000 பேர் கொண்ட மைதேயி இனத்தவர்கள் மிக மோசமாக வன்முறையில் ஈடுபட்டனர்.
குகி இனத்தை சேர்ந்த 2 பெண்களை ஆடைகள் இன்றி ஊர்வலமாக இழுத்து சென்றனர். அவர்களை அவர்கள் பாலியல் பலாத்காரம் செய்து துன்புறுத்திய கொடூரமும் அரங்கேறியது. அதை தடுத்த 2 பேர் கொல்லப்பட்டனர்.
அதோடு இம்பால் நகரில் மே 4-ந்தேதி தங்கள் சமூகத்தை சேர்ந்த மேலும் 2 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்து படுகொலை செய்யப்பட்டதாக குகி இன தலைவர்கள் அதிர்ச்சி தகவல்களை வெளியிட்டனர்.
இதனால் மணிப்பூரில் கடந்த 4 நாட்களாக பதட்டம் நீடிக்கிறது. நேற்று இரவு பல இடங்களில் வீடுகளுக்கு தீ வைப்பு சம்பவங்கள் நடந்தன. சில இடங்களில் பழங்குடி இனத்தவர்கள் துப்பாக்கி சூடு நடத்தியதாக கூறப்படுகிறது. இதனால் பல கிராமங்களில் மிகப்பெரிய கலவரம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
மணிப்பூரில் வன்முறை சம்பவங்களை கட்டுப்படுத்துவதற்காக போலீசார் மற்றும் ராணுவத்தினர் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இதுவரை 13 ஆயிரம் பேர் விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டுள்ளனர்.
பெண்களிடம் அநாகரிகமாக நடந்துகொண்ட மேலும் பலர் வீடியோ காட்சி பதிவுகள் மூலம் அடையாளம் காணப்பட்டுள்ளனர். அவர்களை கைது செய்யும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஒரு சாரார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
மைதேயி இனத்தவரும், குகி இன மக்களும் தங்கள் பகுதிகளில் பதுங்கு குழிகள் அமைத்து தாக்குதல் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார்கள். அந்த பதுங்கு குழிகளை பாதுகாப்பு படையினர் அழித்து வருகிறார்கள். நேற்றுவரை சுமார் 300 பதுங்கு குழிகள் அழிக்கப்பட்டுள்ளன.
சூரச்சந்த்பூரில் தீ வைத்து பள்ளி எரிக்கப்பட்டதால் ஏற்பட்ட பதட்டம் இன்னும் தணியவில்லை. அங்கு பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு நடத்தினார்கள்.
மணிப்பூரில் கலவரம் செய்து இன குழுக்கள் போலீசாரிடம் இருந்து சுமார் 5 ஆயிரம் ஆயுதங்களை பறித்து சென்று விட்டனர். அவற்றில் 3,400 ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 1,500 துப்பாக்கிகளை மீட்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே மணிப்பூரில் சமூக வலைதளங்கள் மூலம் மீண்டும் வதந்தி பரவுகிறது. எனவே தவறான தகவல்களை நம்பவேண்டாம் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.