இலங்கையின் அனேகமான மீனவர்கள் நீச்சல்திறன் அற்றவர்கள் என இலங்கை உயிர்காப்பு சங்கம் தெரிவித்துள்ளது.

இலங்கை உயிர்காப்பு சங்கத்தின் தலைவர் அசங்கநாணயக்கார இதனை தெரிவித்துள்ளார்.

அனேகமான மீனவர்கள் தங்களால் நீந்த முடியும் என்ற நம்பிக்கையுடன் உள்ளனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனினும், கடலில் அவர்களின் உயிர்களை காப்பாற்றும் அளவிற்கு அவர்களிடம் நீச்சல் திறமை இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மீனவர்களிற்கு தொடர்ச்சியாக பத்து நிமிடங்களிற்கு 200 மீற்றர் நீந்தக்கூடிய திறன் அவசியம் இதுவே சர்வதேச தராதரம் என குறிப்பிட்டுள்ள அவர் உயிர்காக்கும் பணியில் ஈடுபட்டுள்ளவர்களிற்கு ஆறுநிமிடங்களில் 200 மீற்றர் நீந்தக்கூடிய திறன் அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.

ஆழ்கடல் போன்றவற்றில் உயிர்காக்கும் பணிகளில் ஈடுபடுபவர்கள் ஒன்பது நிமிடங்களி;ல் 400 மீற்றர் நீந்தவேண்டும்,எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மீனவர்கள் உயிர்காக்கும் அங்கிகளை அணிவதில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அனைத்து படகுகளுக்கும் உயிர்காக்கும் அங்கிகள் போன்றவற்றை வழங்கியுள்ளோம்,ஆனால் அனேகமானவர்கள் அவற்றை பயன்படுத்துவதி;ல்லை பேரிடர் முகாமைத்துவ நிலையம் வழங்கியுள்ள உயிர்காக்கும் அங்கிகள் சிறந்த தரத்திலானவை ஆனால் மீனவர்கள் எவரும் அவற்றை பயன்படுத்துவதில்லை அவர்கள் எந்த கடலிலும் தங்களால் நீந்த முடியும் உயிர்காக்கும் அங்கிகள் அவசியமில்லை என கருதுகின்றனர் எனவும் நாணயக்கார தெரிவித்துள்ளார்.

இலங்கையில் நாளாந்தம் மூவர் கடலில் மூழ்கி உயிரிழக்கின்றனர் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply