இலங்கை விமானப் படைக்குச் சொந்தமான பயிற்சி விமானம் சீனன்குடாவில் விழுந்து விபத்துக்கு உள்ளானது என இலங்கை விமானப் படை அறிவித்துள்ளது.
இதன்போது, விமானத்தில் பயணித்த இருவர் உயிரிழந்துள்ளதாக விமானப்படை ஊடகப் பேச்சாளர் குரூப் கேப்டன் துஷான் விஜேசிங்க தெரிவித்தார்.
இந்த விபத்து சீனக்குடா முகாம் அமைந்துள்ள பிரதேசத்திலேயே இடம்பெற்றுள்ளது.
இலங்கை விமான படையின் சீனக்குடா இலக்கம் 1 விமான பயிற்சி பிரிவுக்கு சொந்தமான PT 6 வகையைச் சேர்ந்த விமானமே இவ்வாறு விபத்துக்கு உள்ளாகியுள்ளது.
திங்கட்கிழமை (07) காலை 11.25 க்கு புறப்பட்ட விமானம், 11.27க்கு விபத்துக்கு உள்ளாகியுள்ளது. இதன்போது விமானத்தில் பயணித்த இரண்டு அதிகாரிகள் உயிர் இழந்துள்ளதாக தகவல் கிடைக்கப்பெற்றுள்ளதாக ஊடகப்பேச்சாளர் கூறினார்.
இதனையடுத்து, இந்த சம்பவம் தொடர்பில் விசேட விசாரணைகளை முன்னெடுப்பதற்காக விசேட குழுவொன்று விமானப்படை தளபதி ஏயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவினால் நியமிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.