மட்டக்களப்பு, வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள ஓமடியாமடு பிரதேசத்தில் மாட்டுப்பட்டி பகுதியில் மாடு மேய்க்கச் சென்ற ஆண் ஒருவர் செவ்வாய்க்கிழமை (05) உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாழைச்சேனை, கிண்ணியடி விஷ்ணு கோவில் வீதியைச் சேர்ந்த 49 வயதுடைய கந்தையா மாமாங்கம் என்பவரே உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் திங்கட்கிழமை (4) மாடுகளை மேய்ப்பதற்காக வழமை போல ஓமடியாமடு பகுதியில் அமைந்துள்ள மாட்டுப்பட்டிக்கு வீட்டிலிருந்து சென்றுள்ளார்.
எனினும், அவர் இன்று காலை வரை வீடு திரும்பாத நிலையில், மாட்டுப்பட்டியின் உரிமையாளர், அப்பகுதிக்குச் சென்று அந்த நபரை தேடியுள்ளார்.
அவ்வேளை மாட்டுப்பட்டிக்கு அருகிலுள்ள பகுதியில் அவர் உயிரிழந்து சடலமாக கிடப்பதை பார்த்துவிட்டு பொலிஸாருக்கு அறிவித்துள்ளார்.
அதன் பின்னர், பொலிஸார் மற்றும் தடயவியல் பிரிவு பொலிஸார் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணைகளை மேற்கொண்டுவந்துள்ளனர்.
அத்தோடு, சடலத்தை பிரேத பரிசோதனைக்காக நீதிமன்ற உத்தரவை பெற்று, வைத்தியசாலையில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இது தொடர்பாக வாழைச்சேனை பொலிஸார் விசாரணைகளை தீவிரப்படுத்தியுள்ளனர்.