துல்லியமான பந்துவீச்சுத் தாக்குதல்… அடுத்தடுத்த அவுட் ஸ்விங்கர் பந்துகள்… ஒரே ஓவரில் 4 விக்கெட்கள்.. இப்படியாக ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் சக இந்திய வீரர்களுக்கு பெரிய சிரமங்களைக் கொடுக்காமல் தனி ஆளாக ஆட்டத்தை முடித்துக் கொடுத்துவிட்டார் முகமது சிராஜ்.
அவரது நேர்த்தியான பந்துவீச்சால், இலங்கையை அதன் சொந்த மண்ணிலேயே வீழ்த்தி 8வது முறையாக ஆசிய கோப்பையை உச்சி முகந்திருக்கிறது இந்தியா.
ஒருநாள் உலகக்கோப்பை நெருங்கும் வேளையில், இந்தியாவின் இந்த அபார வெற்றி கவனிக்கப்பட வேண்டிய ஒன்றாகவே மாறியிருக்கிறது. ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் நடந்தது என்ன?
டாஸ் வென்ற இலங்கை
கிரிக்கெட்டில் இறுதிப்போட்டியின்போது டாஸ் முக்கியப் பங்கு வகிக்கும். ஆசிய கோப்பை இறுதிப்போட்டியில் டாஸ் இலங்கைக்கு கைகூடியது.
பேட்டிங்கை தேர்வு செய்தபோதிலும் மழை குறுக்கிட்டதால் ஆட்டம் சற்று தாமதமாகவே துவங்கியது.
இந்த ஆசிய கோப்பை தொடர் தொடங்கியதிலிருந்து பல போட்டிகள் மழையால் பாதிக்கப்பட்டது. இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆடிய முதல் போட்டியே மழையால் ரத்து செய்யப்பட்டது.
இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகள் மோதிய இரண்டாவது போட்டியும் மழையின் காரணமாக ரிசர்வ் டேக்கு ஒத்தி வைக்கப்பட்டது. எனவே இறுதிப் போட்டியிலும் மழை வரக்கூடும் என எதிர்பார்க்கப்பட்டது. அதற்கேற்றாற்போல இன்று மழை வந்தது.
முதல் ஓவரை பும்ரா வீசினார். 3வது பந்திலேயே குசால் பெரேரே அவுட். 2வது ஓவரை சிராஜ் வீசினார். அதனை சதீரா சமர விக்ரம எதிர்கொண்டார். கச்சிதமான அவுட் ஸ்விங்கர் பந்துகள் என்பதால் ஒரு ரன்கூட எடுக்க முடியாமல் திணறினார் சதீரா. அந்த ஓவரிலேயே சிராஜ்ஜின் நேர்த்தி மீது வெளிச்சம் பாய்ந்தது.
தனது 2வது ஓவரை வீச வந்தார் சிராஜ். முதல் பந்தில் பதும் நிஷன்கா விடைபெற்றார். 3வது பந்தில் சதீரா, 4வது பந்தில் அசலன்கா, கடைசி பந்தில் தனஞ்சயா டி சில்வா என ஒரே ஓவரில் இலங்கையின் டாப் ஆர்டர்களை வெளியேற்றினார் சிராஜ்.
அப்போதே இந்திய அணியின் வேலை பாதி முடிந்திருந்தது. அசல்ன்கா, தசுன் சனகா என மேலும் இருவர் சிராஜ்ஜின் விக்கெட் வலையில் வீழ்ந்தனர்.
16வது ஓவர் வரை மட்டுமே தாக்குப்பிடிக்க முடிந்த இலங்கையால் வெறும் 50 ரன்களை மட்டுமே சேர்க்க முடிந்தது. இந்தியா 7 ஓவர்களிலேயே மிக எளிதாக இலக்கை அடைந்து ஆசிய கோப்பையை தட்டிச் சென்றது.
ஒருநாள் இறுதிப்போட்டியில் வரலாற்றில் அதிக பந்துகளை மீதம் வைத்து வெற்றி வாகை சூடியிருக்கிறது இந்தியா.
அதுமட்டுமல்லாமல் தென் ஆப்ரிக்காவுடன் இதற்கு முன்பு 43 ரன்கள் எடுத்ததே இலங்கை அணியின் குறைந்த பட்ச ஸ்கோராகவுள்ளது. எனவே இது இலங்கை அணியின் இரண்டாவது குறைந்தபட்ச ரன்னாகும்.
இலங்கை அணியில் குசல் மெண்டிஸ் அதிகபட்சமாக 17 ரன்கள் எடுத்தார்.
துஷன் ஹேமந்தா அவுட் ஆகாமல் 13 ரன்களை எடுத்தார். இதுதான் இலங்கையின் அதிகபட்ச ரன்கள்.
அந்த அணியில் கிட்டதட்ட ஐந்து வீரர்கள் ரன் ஏதும் எடுக்காமல் பெவிலியன் திரும்பினர்.
இன்றைய போட்டியின் சிராஜை தவிர்த்து பும்ரா ஒரு விக்கெட்டையும், பாண்ட்யா மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
விக்கெட்டை இழக்காமல் இலக்கை அடைந்த இந்திய அணி
51 ரன்கள் எடுத்தால் வெற்றி என மிக எளிதான ஒரு இலக்குடன் இந்திய அணியின் தொடக்க ஆட்டக்காரர்களாக இஷாந்த் கிஷன் மற்றும் சுஷ்பன் கில் களமிறங்கினர்.
இருவரும் சேர்ந்து வெறும் 6 ஓவரில் 51 ரன்கள் இலக்கை அடைந்தனர்.
இந்தியாவின் சார்பாக இஷான் கிஷன் 18 பந்துகளில் 23 ரன்களையும், ஷுப்மன் கில் 19 பந்துகளில் 27 ரன்களை எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஆசிய கோப்பை தொடரில் தனது எட்டாவது வெற்றியை பதித்துள்ளது.
யார் இந்த சிராஜ்?
ஐதாராபாத்தைச் சேர்ந்த முகமது சிராஜ் மிக எளிய குடும்பத்தில் வளர்ந்தவர். தந்தை ஆட்டோ ஓட்டுநர். பதின்ம வயதில் கிரிக்கெட் விளையாடத் தொடங்கிய சிராஜ்,
2015-ம் ஆண்டு தனது 21-வது வயதில்தான் கிரிக்கெட் பந்தில் முறையாக பந்துவீசத் தொடங்கினார். தனக்கிருந்த சிறப்பான பந்துவீசும் திறனால் அடுத்த இரண்டே ஆண்டுகளில், அதாவது 2017-ம் ஆண்டு ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணியால் வாங்கப்பட்டார்.
முதல் ஐ.பி.எல். தொடரிலேயே திறம்பட செயல்பட்டு, கவனிக்கப்படும் வீரராக மாறிய முகமது சிராஜ் அந்த ஆண்டே சர்வதேச இருபது ஓவர் போட்டிகளில் இந்திய அணிக்காக தடம் பதித்தார்.
இருபது ஓவர் போட்டிகளில் தொடர்ச்சியாக சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய அவருக்கு 2019-ம் ஆண்டு ஒருநாள் போட்டிக்கான இந்திய அணிக்கான வாய்ப்பும் கதவு தட்டியது.
2019-ம் ஆண்டு தொடக்கத்தில் ஆஸ்திரேலியாவுக்கு எதிராக சர்வதேச போட்டிகளில் அறிமுகமான பிறகு முகமது சிராஜூக்கு கிரிக்கெட் உலகில் தொடர்ந்து ஏறுமுகம்தான். சர்வதேச கிரிக்கெட்டில் அவர் கால் பதித்த கால கட்டத்தில் இந்திய அணியில் வேகப்பந்துவீச்சு துறையில் ஜஸ்பிரித்சிங் பும்ராவும், முகமது ஷமியும் ஆதிக்கம் செலுத்தினர்.
ஒருநாள் போட்டிகளில் ஜஸ்பிரித்சிங் பும்ரா, முகமது ஷமி ஆகியோர் பிரதான வீச்சாளர்களாக இருக்க, மூன்றாவது வேகப்பந்து வீச்சாளராகவே அணியில் நுழைந்தார் முகமது சிராஜ்.
ஆனால் சர்வதேச கிரிக்கெட்டில் தடம் பதித்த மிகக் குறுகிய கால கட்டத்திலேயே பந்துவீச்சை தொடர்ந்து மெருகேற்றி அடுத்தடுத்த கட்டங்களுக்கு அவர் முன்னேறியுள்ளார்.
பந்தை வீசும் போது அவர் கைக்கொள்ளும் முறை, வேகமாகவும் துல்லியமாகவும் தொடர்ச்சியாகவும் வீசும் திறன், சரியான லைன் மற்றும் லெந்தில் பந்தை வீசுவது, பேட்ஸ்மேன் எதிர்பாராத நேரத்தில் ஷார்ட் பிட்ச் பந்துகளை வீசுவது போன்றவையே சர்வதேச கிரிக்கெட்டில் முகமது சிராஜை அபாயகரமான வேகப்பந்துவீச்சாளராக மாற்றியுள்ளன.
குவியும் பாராட்டுகள்
முகமது சிராஜ் சிம்பிளி அவுட் ஸ்டேன்டிங் என குறிப்பிட்டு இந்திய முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் பாராட்டியுள்ளார். இதேபோன்று
பல விளையாட்டு நட்சத்திரங்கள் சிராஜை பாராட்டி வருகின்றனர்.
சர்வதேச கிரிக்கெட்டில் முகமது சிராஜின் செயல்பாடுகள் இந்திய அணியின் தவிர்க்க முடியாத வீரர்களில் ஒருவராக அவரை மாற்றியிருப்பதாகவும், வரும் உலகக்கோப்பையில் இந்திய அணிக்கான பிரம்மாஸ்திரமாக அவர் திகழ்வார் எனவும் இந்திய முன்னாள் வீரர்களின் பாராட்டுகளை முன்பே பெற்றவர் முகமது சிராஜ்.
ட்ரோல்களையும் எதிர்கொண்டவர்
தற்போது பாராட்டுகளை வாங்கி குவித்து வரும் சிராஜ் ஒருகாலத்தில் ஐபிஎல்லில் சில மோசமான பந்துவீச்சால் கடுமையான டிரோல்களையும் எதிர்கொண்டிருக்கிறார்.
இதுகுறித்து ஒருமுறை மனம் திறந்து பேசிய சிராஜ், “நன்றாக விளையாடினால் பாராட்டுகிறார்கள். சொதப்பிவிட்டால் கிரிக்கெட் ஆடுவதை நிறுத்திவிட்டு ஆட்டோ ஓட்டச் செல் எனக்கூறி மோசமான வசைகளை மொழிகிறார்கள்.
வாழ்க்கையில் ஏற்ற இறக்கம் சகஜம்தான். ஆதரவு கொடுங்கள். யாரையும் அவமதிக்காதீர்கள். சக மனிதனாக நான் இதைக் கேட்கிறேன். அனைவரையும் மதித்து நடப்போம்.” என்றார்.