கிளிநொச்சி பூநகரி பரமன்கிராய் பிரதேசத்தில் சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பில் ஒருமாதம் கடந்தும் பொலிஸார் இதுவரை எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லையென கடத்தப்பட்ட சிறுமியின் பெற்றோரால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
கிளிநொச்சி பூநகரி பரமன்கிராய் பகுதியில் தரம் பத்தில் கல்வி கற்கும் 15 வயதுடைய சிறுமி ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக அவரது பெற்றோர்களால் கடந்த ஆகஸ்ட் மாதம் 22 ஆம் திகதி பூநகரி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஆனால் இதுவரை பொலிஸார் எந்த விதமான நடவடிக்கைகளையும் எடுக்காதது குறித்து பெற்றோர் கவலை தெரிவித்துள்ளனர்.
கிளிநொச்சியில் சிறுமி கடத்தல் சம்பவம்! பொலிஸார் மீது முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டு | Kidnapping Of 15 Year Old Girl In Kilinochchi
சிறுமி கடத்தல் சம்பவம் தொடர்பில் 27 வயதுடைய இளைஞர் ஒருவர் தொடர்பில் பொலிஸாருக்கு தெரிவிக்கப்பட்டிருந்த போதும் அது தொடர்பில் இதுவரை எந்த விசாரணைகளையும் மேற்கொள்ளவில்லை என்றும் இது தொடர்பாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்.பிராந்திய அலுவலகத்தில் நேற்று முன்தினம் (27-09-2023)முறைப்பாடு செய்துள்ளனர்.
இவ்வாறு கிளிநொச்சி பூநகரி பிரதேசத்தில் அதிகளவான சிறுவர் கடத்தல் சம்பவங்கள் பதிவாகி இருக்கின்ற போதும் இது தொடர்பில் பொலிஸார் எந்த விதத்திலும் நடவடிக்கை எடுப்பதில்லை என பலரும் குற்றஞ்சாட்டியுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் கூறியுள்ளார்.