ஒட்டாவா: கனடா உடனான மோதல் அடுத்த கட்டத்திற்குச் சென்று வரும் நிலையில், இந்தியாவில் இருக்கும் 40 தூதர்களைத் திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா கூறியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவுக்கும் கனடாவுக்கும் இடையே கடந்த சில காலமாகவே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வருகிறது.
கனடாவில் காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை செய்யப்பட்டத்தில் இந்தியாவுக்குத் தொடர்பு இருந்ததாக அந்நாட்டின் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ சொன்னதே இதற்குக் காரணமாகும்.
இந்தியா இதைத் திட்டவட்டமாக மறுக்கும் நிலையில், ஆதாரத்தை வெளியிடுமாறும் வலியுறுத்தியது. இருப்பினும், எந்தவொரு ஆதாரத்தையும் வெளியிடாமல் கனடா தொடர்ந்து இந்தியாவைக் குற்றஞ்சாட்டி வருகிறது.
இந்தியா கனடா மோதல்: இதைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் மாறி மாறி நடவடிக்கை எடுத்து வருகிறது. மறு அறிவிப்பு வரும் வரை கனடா நாட்டை சேர்ந்தோருக்கு விசா வழங்கப்படாது என இந்தியா அறிவித்துள்ளது.
இதற்கிடையே அடுத்தகட்ட நடவடிக்கையாக அக்டோபர் 10ஆம் தேதிக்குள் சுமார் 40 தூதர்களைத் திரும்பப் பெறுமாறு கனடாவிடம் இந்தியா வலியுறுத்தியதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அக்டோபர் 10க்கு பிறகு கனடா தூதர்கள் நாட்டில் தங்கியிருந்தால், அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அந்தஸ்து நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது இந்தியாவுக்கு மொத்தம் 61 கனடா தூதர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையைக் குறைக்குமாறு இந்தியா வலியுறுத்தியதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியா கனடா இடையே மோதல் போக்கு அடுத்த கட்டத்திற்குச் செல்வதை இது காட்டுவதாக உள்ளது.
பதிலடி தர முடியாது: இது தொடர்பாகக் கனடா நாட்டின் செனட் குழுவின் தலைவர் பீட்டர் போஹம் கூறுகையில், “தூதர்களைத் திருப்பி அனுப்பும் விவகாரத்தில் நாம் கவனமாகச் செயல்பட வேண்டும்.
இந்த விவகாரத்தில் கனடாவை இந்தியா எளிய இலக்காகப் பார்க்கிறது. கனடாவில் இப்போது சிறுபான்மை அரசு இருக்கும் நிலையில், அவர்களால் கடுமையான பதிலடி தர முடியாது என்பதை இந்தியா அறிந்தே வைத்திருக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
கனடாவில் கடைசியாகக் கடந்த 2021ஆம் ஆண்டில் தேர்தல் நடைபெற்றது. அங்கே மொத்தம் 338 இடங்கள் இருக்கும் நிலையில், பெரும்பான்மைக்கு 170 இடங்கள் தேவை.
ட்ரூடோவின் லிபரல் கட்சி 160 இடங்களில் வென்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த போதிலும் அவர்களுக்குப் பெரும்பான்மை கிடைக்கவில்லை. இதையடுத்து 25 சீட்களில் வென்ற கனடா வம்சாவளியைச் சேர்ந்த ஜக்மீத் சிங்கின் புதிய ஜனநாயகக் கட்சியின் ஆதரவுடன் அவர் ஆட்சியை அமைத்தது குறிப்பிடத்தக்கது.
காலிஸ்தான் ஆதரவாளர்கள்: இதன் காரணமாகவே காலிஸ்தான் ஆதரவாளர்கள் விவகாரத்தில் ட்ரூடோவால் கடும் நடவடிக்கைகள் எடுக்க முடியவில்லை என்று கூறப்படுகிறது.
தொடர்ந்து பீட்டர் போஹம் கூறுகையில், “இந்தியா இந்த விவகாரத்தில் பின்வாங்காது. கனடாவில் மைனாரிட்டி அரசு இருப்பதால் கடும் நடவடிக்கை எடுக்க முடியாது என்பது இந்தியாவுக்குத் தெரியும்.
மேலும், இந்தியாவில் தேர்தலும் விரைவில் நடைபெற உள்ளதால் இரு நாடுகளுக்கும் இடையேயான மோதல் தொடரவே செய்யும்” என்றார்.
இந்தியா- கனடா இடையே மோதல் ஆரம்பித்த போதே, இங்கே இருக்கும் கனடா தூதர்கள் செயல்கள் சந்தேகம் எழுப்பும் வகையில் இருப்பதாக இந்தியா தெரிவித்து.
மேலும், கனடாவில் இருக்கும் இந்தியா தூதர்களைக் காட்டிலும், இங்குள்ள கனடா நாட்டை சேர்ந்த தூதர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாகவும் இதில் ஒரு சமநிலை வேண்டும் என்று அப்போதே இந்தியா கூறியது குறிப்பிடத்தக்கது.