உறுதியற்ற தலைமையால் உருக்குலைந்த இயக்கம் – ஓடினார்கள் – ஓடினார்கள்…. பேசியதை மறந்து ஓடினார்கள்  குறியைத் தேடி பிரபா கொழும்பு வந்தார்

(பொலிஸ் அதிகாரி குருசாமியின் வீடு யாழ்ப்பாணத்தில் ஓட்டுமடம் எpiraba-and-umaன்ற இடத்தில் இருந்தது. 1977 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் பொலிசார் வன்முறை நடவடிக்கைகள், துப்பாக்கிப் பிரயோகங்கள் போன்றவற்றில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாண நகரமே சுடுகாடாக மாறியது. பொலிசாரின் மீது யாழ்.மக்கள் தீராத வெறுப்புக் கொள்ளக் காரணமாக அமைந்த சம்பவங்களில் 1977 ஆம் ஆண்டின் அத்துமீறல்கள் முக்கியமானவை…..

சன்சோனிக் கமிஷன்
ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தலைமையிலான அரசு சன்சோனிக் கமிஷனை நியமித்தது.

விசாரணை நடப்பதாக காட்டவும் மக்களது கோபத்தை தணிக்கவும் உபயோகமான ஒரு தந்திரம் கமிஷன் அமைப்பது தான்.  இலங்கை , இந்தியா போன்ற நாடுகளில் அநேகமான விசாரணைக்கமிஷன்களின் நோக்கம் அது தான்.

கமிஷன் அமைக்கும் செய்திக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படும்.

கமிஷனின் விசாரணையில் கண்டறியப்படும் உண்மைகள் மட்டும் ஒரு ஓரத்தில் தூக்கிப் போடப்பட்டு விடும்.

சன்சோனிக் கமிஷனும் அவ்வாறான நோக்கத்தில் நியமிக்கப்பட்ட ஒன்று தான்.எனினும் சன்சோனிக் கமிஷன் முன்பாக சொல்லப்பட்ட சாட்சியங்கள் பத்திரிகைகளில் வெளிவந்தன.

குருசாமியின் சாட்சி

பொலிசார் எப்படியெல்லாம சட்டத்தை மீறி நடந்து கொண்டனர் என்பதையெல்லாம் மக்கள் அறிந்து கொள்ளக்கூடியதாக அது அமைந்தது.  அந்த வகையில் சன்சோனிக்கமிஷன் விசாரணை அரசு மீதான – அதன் பொலிஸ் படையினர் மீதான அதிருப்தியை உருவாக்க உதவியது தான் போராட்டத்திற்கு கிடைத்த இலாபம்.

பொலிஸ் அதிகாரிகளும் விசாரிக்கப்பட்டனர். இன்ஸ்பெக்டர் தாமோதரம்பிள்ளை நியாயமாக சாட்சி சொன்னார்.

சீருடையில் – இலக்கத்தகடுகள் இல்லாத பொலிசார் தீ வைப்புக்கள் போன்ற அத்துமீறல்களில் ஈடுபட்டதாக அவர் சாட்சி சொன்னார்.

இன்ஸ்பெக்டர் குருசாமியும் சன்சோனிக் கமிஷனால் அழைக்கப்பட்டார்.

பொலிசார் அத்துமீறல் எவற்றிலும் ஈடுபடவில்லை என்று நிரூபிக்கும் விதமாக சாட்சி சொன்னார் குருசாமி.

பத்திரிகைகளில் குருசாமியின் சாட்சியத்தைப் படித்தவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

தீவிரவாத இளைஞர்கள் அவரை ஒரு துரோகி என்று குறித்துக் கொண்டனர்.

அரசு குருசாமிக்குரிய பாதுகாப்பை அதிகரித்தது.

தானியங்கி இயந்திரத் துப்பாக்கி ஒன்றுடன் யாழ்ப்பாணத்தில் நடமாடினார் குருசாமி.

 

குட்டிமணி குழுவினர் குருசாமி வீட்டிற்கு சென்றபோது எதிர்பாராத ஒரு வாய்ப்பு அவர்களுக்கு சாதகமாக அமைந்தது.  குருசாமியின் வீட்டுக்கு அருகில் திருமண வைபவம் ஒன்று நடந்து கொண்டிருந்தது. திருமண வீட்டார் பட்டாசுகளை கொழுத்தி ஆரவாரித்துக் கொண்டிருந்தனர்.

இன்ஸ்பெக்டர் குருசாமி வீட்டிற்குள் சென்ற குட்டிமணி குழுவினரில் ஒருவர் ஒபரோய் தேவன்.

கொழும்பில் உள்ள ஒபரோய் ஹோட்டலில் பணியாற்றியவர் என்பதால் அப்படி அழைக்கப்பட்டார்.

ஒபரோய் தேவன் தான் குருசாமியை சுடவேண்டும் என்பது தான் திட்டம்.

குருசாமி எதிரில் வர ஒபரோய் தேவனைப் பார்த்து ‘சுடடா’ என்றார் குட்டிமணி.

முதல் சம்பவம்,முதல் அனுபவம் என்பதால் தேவனுக்குப் பதட்டம் தயங்கி நின்றார்!

“சுடடா டேய்|| என்றார் இரண்டாவது தடவையாக குட்டிமணி.

‘சுட்டார்;’ ஒபரோய் தேவன்.

வெளியே – திருமண வைபவத்தில் கேட்ட பட்டாசு சத்தங்களோடு சத்தமாக துப்பாக்கி வேட்டொலிகளும் சேர்ந்து கொண்டன. எவ்வித இடையூறும் இல்லாமல் குட்டிமணி குழுவினர் தப்பிச் சென்றுவிட்டனர்.

‘இன்ஸ்பெக்டர் குருசாமி கொலை’! என்ற செய்தி மறுநாள் ‘ஈழநாடு’பத்திரிகையில் தலைப்புச் செய்தியாக வெளிவந்தது!

குருசாமி கொலைக்குப் பின்னர் குட்டிமணி குழுவினரால் மேற்கொள்ளப்பட்ட மற்றொரு நடவடிக்கை குமார் கொலை!

குமார் ஓய்வு பெற்ற ஒரு பொலிஸ் அதிகாரி.

வடமராட்சியில் உள்ள தீவிரவாத இளைஞர்கள் பற்றிய விபரங்களை ஓய்வு பெற்ற பின்னரும் திரட்டிவந்தார் என்று சந்தேகிக்கப்பட்டு கொல்லப்பட்டார்.

இந்த நடவடிக்கைகளையடுத்து குட்டிமணி பொலிசாரால் தீவிரமாகத் தேடப்பட்டார்.

சிறைக்குள் பிரிவுகள்

ஏற்கனவே பொலிசாரால் கைது செய்யப்பட்டு குட்டிமணி சிறையில் இருந்திருக்கின்றார்.

குட்டிமணி பற்றிய ஒரு சம்பவம் – சிறையில் இருந்தபோது குட்டிமணியிடம் சிறkuddimani2ையில் கூட இருந்த ஏனைய தமிழ் இளைஞர்களுக்கு பயம்.

குத்துச்சண்டை போன்றவற்றில் குட்டிமணி சூரன் என்று பேர் எடுத்திருந்தார்.

அச்சமயம் ஆனந்தன் என்னும் தமிழ் இளைஞரும் தீவிரவாத நடவடிக்கைகள் காரணமாக சந்தேகிக்கப்பட்டு சிறையில் இருந்தவர்.

குட்டிமணி ஒரு பயில்வான் போன்ற தோற்றத்தோடு இருப்பார்.

ஆனந்தனுக்குப் பலவீன உடல் போன்ற தோற்றம்.

ஒரு நாள் குட்டிமணிக்கும் ஆனந்தனுக்கும் தகராறு. தகராறு முற்றி கைகலப்பாகி விட்டது. ஆனந்தன் குட்டிமணியை அடித்து வீழ்த்திவிட்டார்.

குட்டிமணி அதனை எதிர்பார்க்கவில்லை. சிறையை விட்டு வெளியே சென்றவுடன் ஆனந்தனை ஒரு வழி பண்ணப் போவதாகக் குட்டிமணி சபதம் செய்தார்.

ஒரே இலட்சியத்திற்காக சிறைசென்ற போதும் உள்ளே முரண்பாடுகளும் மோதல்களும் மட்டுமல்ல@ சாதிப்பிரிவுகள் கூட தலைதூக்கியிருந்தன என்பது தான் மாபெரும் வேதனை.

தமிழர் விடுதலைக் கூட்டணியின் இளைஞர் பேரவையில் முக்கியமான மூவர் காசி ஆனந்தன், மாவைசேனாதிராஜா, வண்ணை ஆனந்தன்.

காசி ஆனந்தனும் வண்ணை ஆனந்தனம் வாய்த்தர்க்கப்பட்டுக் கொள்வார்கள். சோற்றுக் கோப்பைகளும் பறக்கும். மாவைசேனாதிராஜா மட்டுமே பிரச்னைகளில் பட்டுக்கொள்ளாமல் இருந்தவர்.

ஈழ விடுதலை இயக்கம்

குட்டிமணியும் அவரது ஆதரவாளர்களும் தனி ஒரு பிரிவு.

இளைஞர் பேரவையினர் மற்றொரு பிரிவு. இதற்குள் ஈழவிடுதலை இயக்கத்தைச் சேர்ந்த இளைஞர்கள் தனி ஒரு பிரிவு.

இளைஞர் பேரவையில் இருந்து பிரிந்தது தான் தமிழ் ஈழ விடுதலை இயக்கம். (இன்றைய ரெலோ அல்ல)

இதன் தலைவராக இருந்தவர் த.முத்துக்குமாரசாமி.ஈழவிடுதலை இயக்க இளைஞர்கள் மத்தியில் சிறைக்குள் சாதி முரண்பாடுகள்.

தமக்குள்ளாகவே முரண்பட்டுக் கொண்டு முட்டி மோதினார்கள்.

1976ல் புலோலி வங்கிக் கொள்ளையை நடத்தியது ஈழ விடுதலை இயக்கம் தான்.

இன்ஸ்பெக்டர் பத்மநாதனால் கொள்ளையில் ஈடுபட்ட அனைவருமே மடக்கிப் பிடிக்கப்பட்டார்கள்.

ஈழ விடுதலை இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் வாய்வீச்சில் கெட்டிக்காரர்களாக இருந்தார்களே தவிர செயல் முனைப்பு இருக்கவில்லை.

இதனால் புலிகளோ, குட்டிமணி குழுவினரோ அவர்களை நம்பவில்லை. நல்லுறவுகளும் இருக்கவில்லை.

காலக்கிரமத்தில் ஈழ விடுதலை இயக்கம் தானாகவே அழிந்தது. அதன் முக்கியஸ்தர்கள் மக்களையும் தமது உறுப்பினர்களையும் கைவிட்டு ஒதுங்கினார்கள்.

வியாபாரிகளான போராளிகள்

சிலர் நாட்டை விட்டு சென்று வெளிநாடுகளில் வியாபாரிகளானார்கள்.சிலர் உள்நாட்டிலேயே வியாபாரம் செய்தார்கள்.

தமிழர் கூட்டணியை விமர்சித்து ஈழ விடுதலை இயக்கம் உருவாகியபோது அதில் முக்கியமான ஒருவர் ஹென்ஸ் மோகன். புலோலி வங்கிக் கொள்ளையிலும் சம்பந்தப்பட்டவர்.

இதே ஹென்ஸ் மோகன் பின்னர் யாழ்.பா.உறுப்பினராக இருந்த யோகேஸ்வரனுடன் தன்னை நெருக்கமானவராக காட்டிக்கொண்டார். அதன் மூலம் யாழ்ப்பாணம் வெலிங்டன் தியேட்டருக்கு முன்புறம் கடை ஒன்று நிறுவி சொந்த வியாபாரத்தை வளப்படுத்திக் கொண்டார்.

இப்போது வெளிநாட்டில் இருக்கின்றார்.

மற்றொருவர் சந்திரமோகன். இவரும் புலோலிக் கொள்ளையில் பங்கு கொண்டவர். பின்னர் யாழ்ப்பாணத்தில் கைக்கடிகார கடை நடத்திவிட்டு வெளிநாடு பறந்துவிட்டார்.

தங்கமகேந்திரன் என்று ஒருவர். திருமலையைச் சேர்ந்தவர். புலோலி வங்கிக் கொள்ளையில் கிடைத்த நகையில் ஒரு பகுதியை விழுங்கியவர். பின்னர் ஈ.பி.ஆர்.எல்.எவ் அமைப்பில் சேர்ந்து கொண்டார்.

அவர் தங்குவதற்காக வீடொன்று ஏற்பாடு செய்து கொடுக்கப்பட்டது. அது ஒரு பீடிக்கம்பனி உரிமையாளரது வீடு. மானிப்பாயில் இருந்தது. அங்கு ஒரு அறையில் இருந்த பெறுமதியான உடமைகள், மறைத்துவைக்கப்பட்டிருந்த வீட்டு உரிமையாளரது நகைகள் போன்றவற்றை இயக்கத்திற்கே தெரியாமல் கையாடினார்.

நடவடிக்கை எடுக்க விசாரித்தபோது ‘கொள்ளை முரண்பாடு’ என்று விலகிவிட்டார்.

பெண்களும் போராட்டத்திற்கு வந்து விட்டார்கள் என்று கூட்டணி தலைவர்களாலும் சுட்டிக்காட்டப்பட்ட ஒருவர் அங்கையற்கண்ணி.

இவரும் ஈழ விடுதலை இயக்கத்தில் முக்கியமான ஒருவராக நடந்து கொண்டவர்.

அங்கையற்கண்ணிக்கு பெண் விடுதலை பற்றியும் தெரியாது. இயக்கத்தில் எப்படி நடந்து கொள்ளவேண்டும் என்றும் தெரியாது.

ஈழ விடுதலை இயக்கம் அழிந்த பின் புலிகள்,ஈபிஆர்எல்எவ், ஈபிடிபி போன்ற பல இயக்கங்களோடு இழுபட்டார். எங்கும் நிரந்தரமாக தங்க அவரது குணவிசேஷம் இடமளிக்கவில்லை.

தற்போது புலிகளுக்கு ஆதரவாக லண்டனில் பேசித் திரிவதாக தகவல். இவரைப் புலிகள் நம்புவதில்லை என்பது வேறு விவகாரம்.

ஈழவிடுதலை இயக்கத்தில் இருந்தவர்களில் க. பத்மநாபா மட்டுமே தொடர்ச்சியாகப் போராட்டத்தில் பங்கு கொண்டார். பின்னர் ஈபிஆர்எல்எவ் செயலதிபராக இருந்தவரும் அவரே!

ஈழவிடுதலை இயக்கம் பற்றியும் அதன் முக்கியஸ்தர்கள் பற்றியும் இங்கே குறிப்பிடக் காரணம் இருக்கின்றது.

ரெலோ தலைவர் சிறீ சபாரத்தினம்

செயலிழந்த இயக்கம்

அந்த இயக்கம் மட்டுமே ஆயுதப் போராட்டம் பற்றிய வாய்வீச்சுக்களோடு உருவாகி அழிந்து போன வரலாற்றைக் கொண்டதாகும்.

அந்த இயக்கத்தில் இருந்தவர்களில் பலர் பிரபலமான பெயர்கள் உடையவர்களாக இருந்தார்கள்.

அந்தக் காலத்தில் புலிகளில் இருந்தவர்கள் பற்றியோ குட்டிமணி குழுவில் இருந்தவர்கள் பற்றியோ வெளியே தெரியாது.

ஆனால் அவர்கள் காரியத்தில் கண்ணாக இருந்தார்கள்.

ஈழவிடுதலை இயக்கத்தில் பத்துப் பேர் இருந்தால் 9 பேர் தலைவர்கள்.

யாரை யார் கட்டுப்படுத்துவது என்பதுதான் பிரச்சனை.

ஒரே ஒரு கொள்ளை நடவடிக்கையோடு சுருண்டு போனார்கள்.

உறுப்பினர்கள் விலகிச் சென்றமை சகல இயக்கங்களிலும் நடந்திருக்கிறது.

ஆனால் இயக்கத்தின் தலைவர் உட்பட முக்கியமானவர்களே விலகி ஓடியது ஈழ விடுதலை இயக்கத்தில் மாத்திரமே நடந்தது.

அதுவும் போராட்டம் பற்றிய நம்பிக்கைகள் நிலவிய வளர்ச்சிக் கட்டத்தில் கஷ்டங்களைத் தாங்காமல் ஓடினார்கள் என்பது முக்கியமானது.

அந்த தமிழீழ விடுதலை இயக்கம் செயலிழந்த பின்னர் குட்டிமணி – தங்கத்துரை குழுவினர் அந்தப் பெயரை தமது குழுவுக்கு சூட்டிக் கொண்டனர்.

தற்போதுள்ள தமிழீழ விடுதலை இயக்கம் (ரெலோ) குட்டிமணி – தங்கத்துரை குழுவினரால் உருவாக்கப்பட்டதாகும்.

ஆனால் இன்றைய ரெலோ அமைப்பினர் தமது பிரசார பாடல் கசெட் ஒன்றில் ‘முதன் முதல் தோன்றிய இயக்கம் தமிழீழ விடுதலை இயக்கம்’என்று ஒரு வரியையும் சேர்த்துக் கொண்டது தான் வேடிக்கை.

கொழும்பில் பிரபாகரன்

குட்டிமணி குழுவினர் பொலிசாரால் தேடப்பட்டுக் கொண்டிருந்த போது,புலிகள் துரோகிகள் பட்டியலில் இருந்த ஒருவரை குறி வைத்தனர்.

பிரபாகரன் குறியைத் தேடி கொழும்புக்கு வந்தார்.

கொழும்பில் அவருக்காக இன்னொருவர் காத்திருந்தார்.

(தொடரும்)

Share.
Leave A Reply