அது 1948ஆம் ஆண்டு. அரபு-இஸ்ரேல் போர் தொடங்கிய காலகட்டம். அன்று முதல் இன்று வரை பாலத்தீனத்தில் போர் முடிவுக்கு வரவில்லை.
ஐம்பது ஆண்டுகளுக்கு முன் 1973இல் நடந்த மூன்றாவது அரபு-இஸ்ரேல் போருக்குப் பிறகு, அரபு நாடுகளுடன் இஸ்ரேலுக்கு நேரடிப் போர் நடந்ததில்லை. ஆனால் பாலத்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான மோதல் இன்னும் தொடர்கிறது.
இருப்பினும், இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட, ‘இரு நாடு தீர்வு’ (Two-state solution) பல முறை பரிந்துரைக்கப்பட்டது. ஆனால் இது நடைமுறைக்கு வரவே இல்லை.
பாலத்தீனம், இஸ்ரேல் ஆகிய இரண்டு தனித்தனி நாடுகளின் வடிவத்தில் முதல் தீர்வு 1947இல் ஐக்கிய நாடுகள் சபையால் வழங்கப்பட்டது. அப்போது இஸ்ரேல் யூதர்களின் நாடாகவும், பாலத்தீனம் அரேபியர்களின் நாடாகவும் இருக்கும் என்று கூறப்பட்டது.
அப்போது யூதர்களுக்கு மொத்த நிலத்தில் 10 சதவீதம் மட்டுமே இருந்தது. ஆனால் ஐக்கிய நாடுகள் சபையின் ஃபார்முலாவின் கீழ் மொத்த நிலத்தில் பாதி அவர்களுக்கு வழங்கப்பட்டது. இதை அரபு நாடுகள் ஏற்கவில்லை.
இந்தக் கருத்து வேறுபாடு காரணமாக, முதல் அரபு-இஸ்ரேல் போர் நீண்டு கொண்டே சென்றது. இருப்பினும், சில அம்சங்களில் இஸ்ரேலும் பாலத்தீனமும் இரு நாடு தீர்வில் உடன்பட்டன.
ஆனால் இது எப்படி நடந்தது, பின்னர் எப்படி அந்த ‘இரு நாடு தீர்வு’ தோல்வியடைந்தது என்பது ஒரு பெரிய கேள்வி.
1993ஆம் ஆண்டு அமைதி ஒப்பந்தம் – பாலத்தீனத்தின் சார்பாக யாசிர் யராஃபத் கையெழுத்திட்டார்.
‘இரு தனி நாடு தீர்வு’ என்றால் என்ன?
கடந்த 1947ஆம் ஆண்டு ஐ.நா.வில் இருந்து வந்த இந்த இரு நாடு ஃபார்முலா, 1993இல் பாலத்தீனமும் இஸ்ரேலும் முதன்முதலாக அமைதி உடன்படிக்கையில் அமர்ந்து முதன்முறையாக யதார்த்தத்தை நோக்கி நகர்வதற்கான காரணமாக இருந்தது. அந்த அமைதிப் பேச்சுவார்த்தை நடந்த இடம் நார்வேவின் தலைநகரான ஒஸ்லோ.
எனவே, அந்த ஒப்பந்தம் ஒஸ்லோ ஒப்பந்தம் என்று அழைக்கப்படுகிறது. சமாதான உடன்படிக்கையின் கீழ், மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியை ஆள்வதற்கு பாலத்தீன அதிகாரசபை உருவாக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. ஐந்தாண்டுகளுக்குள் உருவாக்குவதாகப் பேசப்பட்டது.
மறுபுறம், பாலத்தீனமும் தனி இஸ்ரேலை அங்கீகரித்தது. மேற்குக் கரை மற்றும் காஸா பகுதியை ஆளுவதற்கு பாலத்தீன அதிகார சபை விரைவில் உருவாக்கப்பட வேண்டும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் அமைதி நடவடிக்கைகள் மெதுவாகவே நகர்ந்தன. இதில் எல்லாவிதமான தடைகளும் வர ஆரம்பித்தன. இருப்பினும், ‘இரு நாடு தீர்வு’ ஒஸ்லோ ஒப்பந்தத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால் அவை எப்போது உருவாக்கப்படும் என்பதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயிக்கப்படவில்லை.
இஸ்ரேலில் இருந்து தனி நாடாக பாலத்தீனம் உருவாவதற்குக் காரணமாக இருந்த நான்கு பிரச்னைகளுக்குக் கூட தீர்வு காணப்படவில்லை. அந்த நான்கு பிரச்னைகளில் முதன்மையானது, இரு நாடுகளுக்கும் இடையிலான எல்லை எங்கே, எப்படி தீர்மானிக்கப்படும் என்பது.
இரண்டாவது பிரச்னை – ஜெருசலேம் யாருடைய கட்டுப்பாட்டில் இருக்கும்?
மூன்றாவது பிரச்சனை பாலத்தீன பகுதிகளில் குடியேறிய இஸ்ரேலிய குடிமக்கள் எப்படி அகற்றப்படுவார்கள்?
நான்காவது பிரச்னை இஸ்ரேலுக்குள் இடம்பெயர்ந்த பாலத்தீனர்களை பற்றியது. அவர்கள் எப்படித் திரும்புவார்கள் என்பதைப் பற்றியது.
இந்தப் பிரச்னைகள் தொடர்பாக, பாலத்தீன அதிகாரசபை உருவாக்கப்பட்டு ஐந்தாண்டுகளுக்குப் பிறகு, இந்தப் பிரச்னைகள் அனைத்தும் விவாதிக்கப்படும் என்று ஒப்பந்தத்தில் கூறப்பட்டிருந்தது. ஆனால் அது ஒருபோதும் நடக்கவில்லை.
இஸ்ரேலின் டெல் அவிவ் பல்கலைக்கழகத்தின் மத்திய கிழக்கு ஆய்வுகள் பேராசிரியர் மீர் லிட்வாக் கூறுகையில், ஒப்பந்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப் படாததற்கு இரு தரப்புமே பொறுப்பு என்றார்.
பிபிசியிடம் பேசிய பேராசிரியர் லிட்வாக், “இரு தரப்பிலும் சமாதான உடன்படிக்கைக்கு எதிரான எதிர்ப்புக் குழுக்கள் இருந்தன. அவர்கள் ஒருமித்த கருத்தை நிராகரித்தனர். இந்த இரண்டு குழுக்களும் முழுப் பகுதியும் தங்களுக்குச் சொந்தமானது என்றும் அது தங்கள் நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் கூறினர்.
இந்த எதிர்ப்பானது பாலத்தீனத்தின் தரப்பில் ஹமாஸ் குழு மற்றும் இஸ்லாமிய ஜிஹாதிகளிடையே இருந்தது. இஸ்ரேலில் இந்த எதிர்ப்பு அடிப்படைவாத யூத மத மற்றும் தேசியவாத குழுக்களிடம் இருந்தது. இதன் விளைவாக ஒஸ்லோ உடன்படிக்கை முன்னோக்கி நகரவில்லை.”
“இரு தரப்பிலும் சமாதான உடன்படிக்கைக்கு எதிர்ப்புக் குழுக்கள் இருந்தன. அவர்கள் ஒருமித்த கருத்தை நிராகரித்தனர். இந்த இரண்டு குழுக்களும் முழுப் பகுதியும் தங்களுக்குச் சொந்தமானது என்றும் அது தங்கள் நாட்டுக்கு மட்டுமே சொந்தமானது என்றும் கூறின.”
இந்த 1993 ஒப்பந்தத்தை எதிர்த்து, ஹமாஸ் மற்றும் இஸ்லாமிய ஜிஹாதி குழுக்கள் யூதர்களை தாக்கத் தொடங்கின. மறுபுறம், ஒரு யூத அடிப்படைவாதி அப்போதைய இஸ்ரேலிய பிரதமர் ஐசக் ராபினை படுகொலை செய்தார். ஐசக் ராபின் சமாதான உடன்படிக்கைக்கு ஆதரவாக இருந்தார்.
இதற்குப் பிறகு 1996இல், தீவிர தேசியவாத சித்தாந்தத்தில் நம்பிக்கை கொண்ட வலதுசாரிக் கட்சிகள் இஸ்ரேலில் ஆட்சிக்கு வந்தன. இந்த அரசுகள் சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்ல விரும்பவில்லை.
இருப்பினும், அடுத்தடுத்த ஆண்டுகளில் இரு தரப்பினரும் பலமுறை சந்தித்தனர். ஆனால் தீர்வு கிடைக்கவில்லை. இந்தக் காலகட்டத்தில், இஸ்ரேலின் முழு கவனமும் பாலத்தீன பகுதிகளில் யூதர்களின் குடியிருப்புகளை விரிவுபடுத்துவதிலேயே இருந்தது. வலதுசாரி அரசாங்கம் ஜெருசலேமை இஸ்ரேலின் தலைநகராகவும் அறிவித்தது.
இவ்வாறானதொரு நிலையைக் காணும்போது, நிலவியல் ரீதியாகப் பார்த்தால் தனி பாலத்தீன நாடு என்ற கனவு நனவாகுமா என்ற சந்தேகம் பலரது மனதிலும் எழுகிறது.
தனி பாலத்தீனத்தின் பாதையில் ஒரு பெரிய தடையாக இருப்பது அதன் பகுதியில் நிறுவப்பட்ட யூதர்களின் குடியிருப்புகள் ஆகும்.
சுதந்திர பாலத்தீனம் என்ற கனவு நனவாகுமா?
எந்தவொரு நாட்டையும் நிறுவுவதற்கு முதல் தேவை நிலம். இதுதான் பாலத்தீனத்தின் தேவையும் கூட. ஆனால் பாலத்தீனமாகக் கருதப்பட்ட மேற்குக் கரை போன்ற பகுதிகளில் இப்போது ஆயிரக்கணக்கான யூதர்களின் குடியிருப்புகள் நிறுவப்பட்டுள்ளன.
இது தவிர அரபு ஆதிக்கத்தில் உள்ள ஜெருசலேமை தலைநகராக இஸ்ரேல் அறிவித்ததை அமெரிக்கா போன்ற பல நாடுகள் அங்கீகரித்துள்ளன. இதனாலேயே நிலவியல் ரீதியாக தனி பாலத்தீன அரசை அமைப்பது கடினம் என்று பலர் நினைக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் ஷாஹீன் பெரென்ஜி, அவர் அமெரிக்காவில் மத்திய கிழக்கு பிரச்னைகள் குறித்து ஆராய்ச்சி செய்கிறார். தனி பாலத்தீன நாடு அமைப்பது மிகவும் சவாலானதாக இருக்கும் என்று ஷஹீன் கருதுகிறார்.
பிபிசியிடம் பேசிய ஷாஹீன், “1990களுடன் ஒப்பிடும்போது, தனி பாலத்தீன நாடு அமைப்பது இன்று கடினமாகிவிட்டது. மேற்குக் கரை மற்றும் ஜெருசலேமில் யூதர்களின் குடியேற்றங்கள் பன்மடங்கு அதிகரித்துள்ளன.
அவர்களது எண்ணிக்கை 1993 ஒப்பந்தத்தின்போது 1 லட்சத்து 20 ஆயிரமாக இருந்தது. ஆனால், தற்போது 7 லட்சத்தை தாண்டியுள்ளது. இன்று, யூத குடியேற்றங்களும் அங்கு நிறுவப்பட்டுள்ளன. ஆனால் அது இஸ்ரேலிய சட்டங்களின்படியே சட்டவிரோதமானதுதான்.
மேலும், “இது தவிர, இரண்டு தனி நாடுகள் என்ற தீர்வில் இஸ்ரேல் இனி ஆர்வம் காட்டவில்லை. மறுபுறம் பாலத்தீனம், ஹமாஸ் மற்றும் ஃபத்தா என இரண்டு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது. பாலத்தீன மக்களுக்கான சமாதான நடவடிக்கைகளை முன்னெடுத்துச் செல்வதற்கு நம்பகமான தலைவர் எவரும் அவர்களிடம் இல்லை,” என்று ஷாஹீன் கூறுகிறார்.
இந்த விவகாரத்தில் பேராசிரியர் மீர் லிட்வாக் போன்ற சில நிபுணர்கள் இன்னும் முன்னேற்றத்திற்கு இடம் இருப்பதாகக் கருதுகின்றனர். ஆனால் கேள்வி என்னவென்றால், இஸ்ரேல் இந்த முன்னேற்றத்தை விரும்புகிறதா என்பதுதான்.
பேராசிரியர் லிட்வாக்கும் இஸ்ரேல் இதை விரும்பவில்லை என்றே கருதுகிறார்.
அவர் கூறுகையில், “இந்த விஷயத்தில் இஸ்ரேலிய அரசாங்கத்தின் அணுகுமுறையை நான் விமர்சிக்கிறேன். ஏனென்றால், அவர்கள் தீர்வாகக் கருதும் ஒரு சூழ்நிலையை அப்படியே விட்டுவிடுகிறார்கள். மேற்குக் கரையைப் போல.
இங்கு பாலத்தீன அதிகார சபை இருக்க வேண்டும் என்றும், அதையும் தாங்கள் கட்டுப்படுத்த வேண்டும் என்றும் அவர்கள் விரும்புகிறார்கள். அதாவது, பாலத்தீன அதிகார சபை ஒரு பலவீனமான அதிகாரமாகவும், இஸ்ரேலின் விருப்பத்தை முழுமையாகச் சார்ந்ததாகவும் இருக்க வேண்டும் அவர்கள் விரும்புகிறார்கள்.”
இஸ்ரேல் எல்லாவற்றையும் என்றென்றும் கட்டுப்படுத்தும் என்று நினைப்பது மிகவும் தவறான புரிதல் என்றும் இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு வந்தால்தான் தீர்வு கிடைக்கும் என்றும் பேராசிரியர் லிட்வாக் நம்புகிறார்.
மேலும், தனி பாலத்தீனம் அமைப்பதற்கு மிகப்பெரிய தடையாக இருப்பது யூதர்களின் குடியேற்றங்கள் என்று பேராசிரியர் லிட்வாக் கருதுகிறார்.
எனினும், இஸ்ரேல் தனது அனைத்து குடியிருப்புகளையும் காஸாவில் இருந்து அகற்றிவிட்டதாகவும், இங்கு கட்டுப்பாட்டை முழுமையாகக் கைவிட்டதாகவும் அவர் கூறுகிறார். கொஞ்சம் கஷ்டமாக இருந்தாலும் சரி, மேற்குக் கரையிலும் இதை இஸ்ரேல் செய்யலாம்.
அதேபோல, ஜெருசலேம் விவகாரத்தில் இரு தரப்பினரும் தங்கள் நிலைப்பாட்டைத் தளர்த்தினால், அந்த விவகாரத்திலும் ஒருமித்த கருத்தை எட்ட முடியும்.
பாலத்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதிக்கான மிகப்பெரிய நம்பிக்கை அமெரிக்காதான். அமெரிக்கா அமைதிக்கான முன்முயற்சியை எடுத்தால் தீர்வு கிடைக்கும்.
காணொளிக் குறிப்பு,
பாலத்தீன மக்களுக்கு ஆதரவாகப் போராடும் அமெரிக்க யூதர்கள் – ஏன்?
ஆனால், இஸ்ரேலுக்கும் பாலத்தீனத்துக்கும் இடையே எழுந்துள்ள புதிய போர்ச் சூழலில், பல நூற்றாண்டுகளாக நிலவி வரும் முட்டுக்கட்டையை யார் மாற்றப் போகிறார்கள் என்பது பெரிய கேள்வி.
அத்தகைய சூழ்நிலையில் அமெரிக்கா மீண்டும் முன்வர வேண்டும் என்று அமெரிக்க ஆராய்ச்சியாளர் ஷாஹீன் பெரென்ஜி நம்புகிறார். “சர்வதேச சமூகத்தின் ஆதரவுடன் அமெரிக்கா அமைதி முயற்சிகளை மேற்கொண்டால், அது வெற்றியடைய முடியும்,” என்று அவர் கருதுகிறார்.
பிபிசியிடம் பேசிய ஷாஹீன், “எப்போதெல்லாம் மத்திய கிழக்கில் அமெரிக்கா எதையாவது செய்ய விரும்புகிறதோ, அப்போதெல்லாம் அது செயல்படுத்தப்பட்டது என்பது வரலாற்று உண்மை.
எகிப்து-இஸ்ரேல் சமாதான ஒப்பந்தம் போல, ஜோர்டான் உடனான ஒப்பந்தம், சமீபத்திய ஆபிரகாம் ஒப்பந்தங்கள்கூட. இவை அனைத்திலும் அமெரிக்காவின் பங்கு உள்ளது.”
ஐ.நா. வின் மூன்றாவது குழுவின் வருடாந்திர கூட்டத்தின் தயாரிப்பு ஆலோசனையின் போது பாலத்தீன தூதர் கதறி அழுத காட்சிகள் அனைவரையும் அதிர்ச்சியடைய வைத்தன.
இப்போது கேள்வி என்னவென்றால், மத்திய கிழக்கில் அமைதியை நிலைநாட்டுவதில் அமெரிக்கா ஆர்வம் காட்டுகிறதா என்பதுதான்.
இந்தக் கேள்விக்கு ஷாஹீன் கூறுகிறார், “9/11 தாக்குதலுக்குப் பிறகு, அமெரிக்காவின் கவனம் ஓஸ்லோ உடன்படிக்கையை அமல்படுத்துவதில் இருந்து பயங்கரவாதத்திற்கு எதிரான போருக்கு மாறியது. பின்னர், இரான், ரஷ்யா மற்றும் சீனா விவகாரங்களில் அமெரிக்க ஆர்வம் காட்டத் தொடங்கியது.
ஆனால் இப்போது அமெரிக்கா மீண்டும் மத்திய கிழக்கு விவகாரங்களில் தீவிரமாகச் செயல்பட வேண்டும். இல்லையெனில் இந்தப் போராட்டத்தின் விளைவுகளை அனைவரும் அனுபவிக்க வேண்டியிருக்கும். சிறிது காலத்திற்குப் பிறகு இந்தப் போராட்டம் பரவலாகிவிடும்.”
அப்படிப் பார்த்தால், பாலத்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையே அமைதிக்கான மிகப்பெரிய நம்பிக்கை அமெரிக்காதான். அமெரிக்கா அமைதிக்காக முன்முயற்சி எடுத்தால், நம்பிக்கையின் கதிர் தோன்றும்.
ஆனால் பிரச்னை என்னவென்றால், இஸ்ரேல் மீதான தாக்குதலுக்குப் பிறகு, பாலத்தீனத்திற்கும் இஸ்ரேலுக்கும் இடையிலான போரின் வீச்சு வீரியமடைந்து வருவதால், அமெரிக்காவோ இஸ்ரேலோ ஹமாஸோ யாரும் அமைதியைப் பற்றிப் பேசுவதாகவே தெரியவில்லை.