இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி கடந்த அக்.19 ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘லியோ’. இப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்றுள்ளது.
இந்த திரைப்படத்தின் வெற்றி விழா சென்னை நேரு உள் விளையாட்டு அரங்கில் மாலை 6 மணிக்கு துவங்கியது. இதில் இயக்குநர்கள் லோகேஷ் கனகராஜ், கெளதம் வாசுதேவமேனன், மிஷ்கின், நடிகர் விஜய், அர்ஜூன், நடிகை உள்ளிட்ட பலர் பங்கேற்றுப் பேசினர்.
நடிகர் விஜய்
இவ்விழாவில் பேசிய நடிகர் விஜய், சூப்பர் ஸ்டார் பஞ்சாயத்து குறித்து பேசினார். விஜய் பேசுகையில், “இதனை நான் சொல்லியே ஆகணும். பலமுறை இதனை சொல்லிட்டேன். இருந்தாலும் திரும்பவும் பதிவு செய்கிறேன்.
புரட்சித் தலைவர் என்றால் ஒருவர்தான்.
நடிகர் திலகம் என்றால் ஒருவர்தான்.
புரட்சிக் கலைஞர் என்றால் ஒருவர்தான். உலக நாயகன் என்றால் ஒருவர்தான்.
சூப்பர் ஸ்டார் என்றால் ஒருவர்தான்.
தளபதி என்றால்…
மக்களாகிய நீங்கள்தான் மன்னர். நான் உங்களுக்கு உதவியாக இருக்கும் தளபதி.
நீங்கள் ஆணை இடுங்கள்; நான் செய்து முடிக்கிறேன்” என்று சொல்லி முடித்தார்.
இதற்குமுன்பு யார் தமிழகத்தின் அடுத்த சூப்பர் ஸ்டார் என்பது குறித்து பல விவாதங்கள் நடைபெற்று வந்தது. பலரும் இதுகுறித்து கருத்து தெரிவித்து வந்தார்கள். ’வாரிசு’ படநிகழ்ச்சியில்கூட நடிகர் சரத்குமார் இதுகுறித்து பேசியிருந்தார். நீண்டநாட்களாக இந்த விவாதம் நடைபெற்று வந்தபோதும் நடிகர் விஜய் அதுகுறித்து கருத்து தெரிவிக்கவே இல்லை. இந்நிலையில், இன்று அதற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.