இந்தியாவின் பிரபல தமிழ் திரைப்பட நடிகர் ஜூனியர் பாலையா இன்று வியாழக்கிழமை (நவ. 2) அதிகாலை மூச்சுத் திணறல் ஏற்பட்டு தனது 70வது வயதில் காலமானார்.

1953 ஜூன் 28ஆம் திகதி பிறந்த இவர் மறைந்த பழம்பெரும் நடிகரான டி.எஸ். பாலையாவின் மகன் ஆவார். ரகு என்ற இயற்பெயரை கொண்ட இவர், பாலையாவின் திரையுலக வாரிசு என்பதால் ‘ஜூனியர் பாலையா’ என அழைக்கப்பட்டார்.

தந்தையை போலவே பார்வை, உதடுகள் தந்தியடிக்கும் பேச்சு, நடை, தலையசைவும் ஜூனியர் பாலையாவின் நடிப்பையும் அவர் நடித்த பல காட்சிகளையும் தமிழ் சினிமா ரசிகர்கள் மறக்க மாட்டார்கள்.

1975இல் வெளியான ‘மேல்நாட்டு மருமகள்’ என்ற திரைப்படத்தின் மூலம் அறிமுகமான இவர், தொடர்ந்து ‘வாழ்வே மாயம்’, ‘கோபுர வாசலிலே’, ‘கரகாட்டக்காரன்’, ‘சின்னத்தாயி’, ‘அம்மா வந்தாச்சு’, ‘ராசுக்குட்டி’, ‘சுந்தர காண்டம்’, ‘வீட்ல விசேஷங்க’, ‘பாரதி’, ‘ஜெயம்’, ‘சங்கமம்’, ‘சாட்டை’, ‘தனி ஒருவன்’, ‘புலி’, ‘கும்கி’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘சங்க தலைவன்’ என பல படங்களில் நடித்திருக்கிறார்.

‘கரகாட்டக்காரன்’ படத்தில் பிரபலமான வாழைப்பழ நகைச்சுவை காட்சியில் அட்டகாசப்படுத்திய கவுண்டமணி, செந்திலுக்கு நடுவே சம்மணம் போட்டு உட்கார்ந்தபடி, கொஞ்சமாக அசைந்து முன்னே வந்து, “ஒரு பழம் இங்க இருக்கு… இன்னொரு பழம் எங்கருக்கு” என்று கேட்டு, தன் பங்குக்கு குறைவில்லாமல் சிரிக்க வைத்திருப்பார்.

இவருக்கும் நடிகர் பாக்யராஜுக்குமான நெருக்கம் மிக அதிகம். ஏனென்றால், பாக்யராஜ் படங்களில்தான் இவர் அதிகமாக ரசிகர்களால் கவனிக்கப்பட்டார்.

அது மட்டுமன்றி, முகிலன் என்றொரு வெப் தொடரிலும், சித்தி, வாழ்க்கை, சின்ன பாப்பா பெரிய பாப்பா ஆகிய தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வந்தவர் ஒரு கட்டத்தில் ஓய்வெடுத்துக்கொண்டு ஆன்மிக கூட்டங்களில் பங்குபற்றியதோடு, ஆன்மிக சொற்பொழிவாற்றி வந்தார்.

சில வருடங்களுக்குப் பிறகு 2012இல் சாட்டை படத்தில் பள்ளியின் தலைமை ஆசிரியராக நடித்தார்.

பொற்கால தமிழ் சினிமா காலத்தில் டி.எஸ்.பாலையா என்றால் எம்.ஜி.ஆர்., சிவாஜி போன்ற மாபெரும் நடிகர்களுக்கே நடுக்கம் ஏற்படும்.

டி.எஸ்.பாலையாவின் நகைச்சுவை எப்படியோ அதேபோல் ‘திருவிளையாடல்’ படத்தில் வரும் தலைக்கணம் கொண்ட பாணபத்திரராகவும் கண்களை உருட்டி மிரட்டியிருப்பார். அவருக்கு திரையுலகில் செல்வாக்கு இருந்தளவுக்கு அவரது மகனான ஜூனியர் பாலையாவுக்கு இல்லை என்றுதான் சொல்லவேண்டும்.

எனினும், நகைச்சுவை கடந்து குணச்சித்திர கதாபாத்திரங்களிலும் நடித்தவராகவும் பாலையாவின் மகனாகவும் இவர் என்றென்றும் நம் நினைவில் நிற்பார்.

Share.
Leave A Reply