நடப்பு உலகக்கோப்பையில் ஆச்சர்யங்களை நிகழ்த்தி வரும் ஆப்கானிஸ்தான் அணி பலமிக்க ஆஸ்திரேலியாவுக்கும் ஆட்டம் காட்டி விட்டது.

ஒரு கட்டத்தில் ஆப்கானிஸ்தான் எளிதில் வெற்றி பெற்று விடும் என்று கருதப்பட்ட நேரத்தில், அதிரடி வீரர் கிளென் மேக்ஸ்வெல் தனி ஒருவனாக களத்தில் நின்று இரட்டை சதம் அடித்து ஆஸ்திரேலியாவை வெற்றி பெறச் செய்தார்.

இதன் மூலம் ஆஸ்திரேலியாவின் அரையிறுதிக்கும் தகுதி பெற்றுள்ளது. வாய்ப்பு பிரகாசமாகியுள்ளது-

தொடக்க வீரர் இப்ராகிம் ஜாட்ரன் அடித்த சதத்தின் உதவியுடன் 291 ரன்களை குவித்த ஆப்கானிஸ்தான் அணி வெற்றி கைக்கெட்டும் தூரத்தில் இருந்தும் தவறவிட்டுவிட்டது.
ஆப்கானிஸ்தான் டாஸ் வென்று முதல் பேட்டிங்

இந்தியா – இலங்கை அணிகள் மோதிய அதே மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் ஆஸ்திரேலியா – ஆப்கானிஸ்தான் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. எதிர்பார்க்கப்பட்ட படியே ஆப்கானிஸ்தான் அணி டாஸ் வென்றதுமே சற்றும் தயங்காமல் பேட்டிங்கை தேர்வு செய்துவிட்டது.

ரமானுல்லா குர்பாஸ், இப்ராகிம் ஜாட்ரன் ஆகிய இருவரும் தொடக்க ஆட்டக்காரர்களாக களமிறங்கினர்.

உலகின் அபாயகரமான வேகப்பந்துவீச்சாளர்களான மிட்செல் ஸ்டார்க், ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோரது பந்துவீச்சை ஆப்கன் வீரர்கள் அச்சமின்றி ஆடினர். இதனால் ஆப்கானிஸ்தான் அணிக்கு ஓரளவு நல்ல தொடக்கம் கிடைத்தது.

இருவரது சிறப்பான ஆட்டத்தால் மிட்செல் ஸ்டார்க் தனது முதல் 3 ஓவர்களிலேயே 19 ரன்களை கொடுக்க நேரிட்டது. குர்பாஸ் 21 ரன்கள் சேர்த்து ஹேசில்வுட் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார். இந்த உலகக்கோப்பையில் பவர் பிளேயில் அவர் எடுத்த முதல் விக்கெட் இதுவாகும்.

அடுத்துவந்த ரஹ்மத் ஷா களத்தில் நிலைத்து நின்று, ஜாட்ரனுடன் நல்ல பார்ட்னர்ஷிப்பை உருவாக்க முயற்சித்ததார். அதில் ஓரளவு வெற்றியும் கிடைத்தது.

மறுமுனையில் நிலைத்து ஆடிய தொடக்க வீரர் இப்ராகிம் ஜாட்ரன் 62 பந்துகளில் அரைசதம் அடித்தார். இந்த ஜோடி தொடர்ந்து அபாரமாக ஆடியது. இதனால், ஆப்கன் அணி 20 ஓவர்களில் ஒரு விக்கெட் இழப்பிற்கு 99 ரன்களை சேர்த்தது.

இப்ராகிம் ஜாட்ரன் அபார சதம்

நிலைத்து ஆடிய இப்ராகிம் ஜாட்ரன் – ரஹ்மத் ஷா ஜோடி 83 ரன்கள் சேர்த்தது. அணியின் ஸ்கோர் 121 ரன்னாக இருந்த போது ரஹ்மத் ஷா 30 ரன்களில் ஆட்டமிழந்தார். அவரது விக்கெட்டை சுழற்பந்துவீச்சாளர் மேக்ஸ்வெல் வீழ்த்தினார்.

அடுத்து ஆப்கானிஸ்தான் அணியின் கேப்டன் ஹஷ்மத்துல்லா ஷாகிதி களம் புகுந்தார். அவரும் ஒருமுனையில் நிலைத்து ஆடிய இப்ராகிம் ஜாட்ரனுக்கு ஒத்துழைப்பு கொடுத்தார். அவர் 26 ரன்கள் எடுத்திருந்த போது மிட்செல் ஸ்டார்க் பந்துவீச்சில் கிளீன் போல்டானார்.

ஒருமுனையில் விக்கெட்டுகள் வீழ்ந்த போதும் மறுமுனையில் ஜாட்ரன் மனம் தளராமல் ஆடினார். அவ்வப்போது பவுண்டரிகள் மற்றும் சிக்சர்களையும் அவர் பறக்கவிட்டார். இதனால், ஆப்கானிஸ்தான் அணியின் ஸ்கோர் சீராக உயர்ந்து கொண்டே இருந்தது.

மறுமுனையில் அஷ்மத்துல்லா ஓமர்சாய், முகமது நபி ஆகியோர் குறைந்த ரன்களில் ஆட்டமிழந்தாலும், ஜாட்ரனுக்கு ஒத்துழைப்பு கொடுத்து குறிப்பிடத்தகுந்த பார்ட்னர்ஷிப்பை அமைத்தனர்.

அவர்களின் ஒத்துழைப்புடன் ஜாட்ரன் அபாரமாக சதம் கடந்தார். இதற்காக அவர் 131 பந்துகளை எதிர்கொண்டார்.

கடைசி நேரத்தில் ரஷித்கான் அதிரடி

ஆப்கானிஸ்தானுக்கு கடைசிக்கட்ட ஓவர்களில் ரஷித் கான் அதிரடியில் மிரட்டினார். மேக்ஸ்வெல் வீசிய 47-வது ஓவரில் 16 ரன்களை விளாசிய ரஷித் கான், ஸ்டார்க் வீசிய அடுத்த ஓவரில் 2 சிக்சர்களை விளாசி மிரள வைத்தார். ஸ்டாய்னிஸ் வீசிய கடைசி ஓவரும் கடுமையான அடி வாங்கியது.

ரஷித் கான் – ஜாட்ரன் அதிரடியால் ஆப்கானிஸ்தான் அணி கடைசி 6 ஓவர்களில் மட்டும் 75 ரன்களை குவித்தது. இதன் மூலம் 50 ஓவர்களில் அந்த அணி 5 விக்கெட் இழப்பிற்கு 291 ரன்களை குவித்தது. ரஷித்கான் 18 பந்துகளில் 3 சிக்சர்கள், 2 பவுண்டரிகளுடன் 35 ரன்கள் எடுத்தார். 131 பந்துகளில் சதம் அடித்த ஜாட்ரன், அடுத்த 12 பந்துகளில் 29 ரன்கள் சேர்த்தார்.
ஆப்கானிஸ்தான் vs ஆஸ்திரேலியா


ஆஸ்திரேலியா தொடக்கம் முதலே சரிவு

இந்தியா – இலங்கை போட்டி நடைபெற்ற வான்கடே மைதானத்தில் இரண்டாவது பேட்டிங்கில் 292 ரன்களை எடுப்பது என்பது ஆஸ்திரேலியாவுக்கு கடும் சவாலாக இருக்கும் என்றே கருதப்பட்டது. அடுத்தடுத்த நிகழ்வுகளும் அதனை நிரூபிப்பதாகவே அமைந்தன.

ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர் டிராவிஸ் ஹெட் ரன் கணக்கை தொடங்கும் முன்பே நவீன் உல் ஹக் பந்தில் விக்கெட் கீப்பரிடம் கேட்ச் கொடுத்து பெவிலியன் திரும்பினார்.

அதன் பிறகு உள்ளே வந்த மிட்செல் மார்ஷூம், மற்றொரு தொடக்க வீரர் டேவிட் வார்னரும் சிறிது நேரம் மட்டுமே நிலைத்து நின்றனர்.

அதிரடியாக ஆடிய மிட்செல் மார்ஷ் 11 பந்துகளில் 2 சிக்சர், 2 பவுண்டரிகளுடன் 24 ரன்கள் எடுத்திருந்த நிலையில் நவீன் உல் ஹக் வீசிய பந்தில் எல்.பி.டபிள்யூ ஆனார்.

அப்போது ஆஸ்திரேலிய அணி 5.4 ஓவர்களில் 43 ரன்களை சேர்த்திருந்தது. அதன் பிறகு ஆஸ்திரேலிய வீரர்கள் வருவதும் போவதுமாகவே இருந்தனர். ஆப்கானிஸ்தான் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் ஆஸ்திரேலிய வீரர்கள் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர்.

வார்னர் 18 ரன்களிலும், பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட லபுஷேனே 14 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். விக்கெட் கீப்பர் ஜோஷ் இங்லிஸ் டக் அவுட் ஆகி வெளியேறினார்.

அதிரடி வீரர் மார்கஸ் ஸ்டாய்னிஷ் 6 ரன்களில் வெளியேறியதும் ஆஸ்திரேலிய அணியை தோல்வி பயம் தொற்றிக் கொண்டது. அப்போது ஆஸ்திரேலிய அணி 6 விக்கெட் இழப்பிற்கு 87 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

கூடுதலாக 4 ரன்களை சேர்ப்பதற்குள் ஆஸ்திரேலியா மேலும் ஒரு விக்கெட்டை இழந்தது. மிட்செல் ஸ்டார்க் 3 ரன்கள் மட்டுமே எடுத்து ரஷித் கான் பந்துவீச்சில் விக்கெட்டை பறிகொடுத்தார்.

ஆஸ்திரேலியாவை மீட்ட மேக்ஸ்வெல்

ஆஸ்திரேலிய அணி ஒரு கட்டத்தில் 18.3 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 91 ரன்களை மட்டுமே எடுத்து தத்தளித்தது. 8-வது விக்கெட்டிற்கு மேக்ஸ்வெல்லுடன் ஆஸ்திரேலிய கேப்டன் பேட் கம்மின்ஸ் கைகோர்த்தார். ஒரு புறம் மேக்ஸ்வெல் அடித்து அடி ரன் ரேட்டை பார்த்துக் கொள்ள மறுபுறம் அவருக்கு உறுதுணையாக விக்கெட் விழாதபடி கேப்டன் கம்மின்ஸ் காத்து நின்றார்.

மேக்ஸ்வெல் கிட்டத்தட்ட ஒவ்வொரு ஓவரிலும் ஒரு பவுண்டரி அல்லது சிக்சர் அடித்து ரன் ரேட்டை சிறப்பாக பராமரித்தபடி இருந்தார். ரிவர்ஸ் ஸ்வீப்பில் பவுண்டரி அடித்து அவர் அரைசதத்தை எட்டினார். 51 பந்துகளில் அவர் அரைசதம் கண்டார்.

மேக்ஸ்வெல்லின் அபார ஆட்டத்தால் ஆட்டம் மெல்லமெல்ல ஆப்கானிஸ்தான் பக்கம் இருந்து ஆஸ்திரேலியாவின் கட்டுப்பாட்டிற்குள் வரத் தொடங்கியது. களத்தில் தன்னை நன்றாக நிலைநிறுத்திக் கொண்டுவிட்ட பிறகு மேக்ஸ்வெல் தனது வழக்கமான அதிரடி ஆட்டத்திற்கு மாறினார். அவரது பேட்டில் இருந்து பவுண்டரிகளும், சிக்சர்களும் பறந்த வண்ணம் இருந்தன.

இதனால் 76 பந்துகளிலேயே மேக்ஸ்வெல் சதத்தை எட்டிவிட்டார். முதல் அரைசதத்தை அடிக்க 51 பந்துகளை எடுத்துக் கொண்ட மேக்ஸ்வெல், அடுத்த 25 பந்துகளில் 51 ரன்களை குவித்து மிரட்டிவிட்டார்.

35 ஓவர்களில் 200 ரன்களை தொட்டது ஆஸ்திரலியா. ஆப்கானிஸ்தான் அணியில் யார் பந்து வீச வந்தாலும் அவர்களது பந்துகளை விரட்ட மேக்ஸ்வெல் சிரமப்பட வேண்டிய அவசியமே ஏற்படவில்லை.

மேக்ஸ்வெல்லுக்கு காயம் ஏற்பட்டது. அவரால் ஓட முடியவில்லை. அப்போது அவர் எடுத்த ஆயுதம், தான் ஓட வேண்டிய அவசியமே இல்லாது செய்வது.

மேக்ஸ்வெல் அடித்த அடியில் இருந்து ஆப்கானிஸ்தான் வீரர்கள் மீள்வதற்கு கூட நேரம் கிடைக்கவில்லை. மேக்ஸ்வெல் 104 பந்துகளில் 150 ரன்களை தொட்டார்.

கடைசி நான்கு ஓவர்களில் ஆஸ்திரேலியா 22 ரன்கள் எடுத்தால் வெற்றி எனும் சூழல். முஜீப் பந்து வீச வந்தார். முதல் பந்தில் மேக்ஸ்வெல் ரன் எதுவும் எடுக்கவில்லை. இரண்டாவது பந்து சிக்சருக்கு சென்றது. மூன்றாவது பந்து மீண்டும் சிக்சிருக்குச் சென்றது. நான்காவது பந்து பௌண்டரி. ஐந்தாவது பந்து வின்னிங் ஷாட். அதுவும் எல்லைக்கோட்டுக்கு அப்பால் விழுந்தது.

அப்போது மூன்று விஷயங்கள் அரங்கேறின. ஆஸ்திரேலியா ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றி பெற்றது. ஆஸ்திரேலியா 12 புள்ளிகளை பெற்று இந்த உலகக்கோப்பை தொடரின் அரையிறுதி ஆட்டத்துக்கு தகுதி பெற்றது.

கிளீன் மேக்ஸ்வெல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் இரட்டைச் சதத்தை விளாசினார். 128 பந்துகளில் 21 பௌண்டரிகள், 10 சிக்ஸர்கள் விளாசி 201 ரன்கள் எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்.

முதல் சதத்தை 76 பந்துகளில் அடித்த மேக்ஸ்வெல் அடுத்த 100 ரன்களை வெறும் 52 பந்துகளில் எட்டிவிட்டார். அவரது ஸ்கோரில் 10 சிக்சர்களும், 21 பவுண்டரிகளும் அடங்கும்.

அதாவது, பவுண்டரி, சிக்சர் வகையிலேயே 144 ரன்களை அவர் திரட்டிவிட்டார். மறுமுனையில் அவருக்கு ஒத்துழைப்பு கொடுத்து விக்கெட்டை பாதுகாக்கும் வகையில் விளையாடிய கேப்டன் பேட் கம்மின்ஸ் 68 பந்துகளை சந்தித்து 12 ரன்களுடன் ஆட்டமிழக்காமல் இருந்தார்.

ஆப்கானிஸ்தான் ரசிகர்களின் கனவை நொறுக்கினாலும், கிரிக்கெட் ரசிகர்களின் இதயங்களை தனது விடா முயற்சியால் வென்றெடுத்துவிட்டார் மேக்ஸ்வெல்.
சாதனைத் துளிகள்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் ஒருவர் ஒருநாள் போட்டியில் இரட்டைச் சதம் அடிப்பது இதுவே முதல்முறை. ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் சேஸிங்கில் இரட்டைச் சதம் அடித்த முதல் நபரும் மேக்ஸ்வெல் தான்.

ஒருநாள் கிரிக்கெட் வரலாற்றில் ஏழாவது விக்கெட்டுக்கு பிறகு ஒரு பார்ட்னர்ஷிப் 200 ரன்களுக்கு மேல் குவித்திருக்கிறது எனில் அதுவும் இந்த இணை தான்.

அரையிறுதியில் ஆஸ்திரேலியா – தென் ஆப்ரிக்கா

கொல்கத்தா மண்ணில் ஆஸ்திரேலியா – தென் ஆப்பிரிக்கா அணிகள் அரையிறுதியில் மோதுவது உறுதியாகிவிட்டது. மற்றொரு அரையிறுதியில் இந்தியாவுடன் மோதப் போகும் அணி எது என்பது இன்னும் முடிவாகவில்லை.

புள்ளிகள் பட்டியலில் நான்காவது இடத்தைப் பிடிக்கும் அணி இந்தியாவுடன் மோதும். அந்த இடத்திற்கு பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் போட்டி போடுகின்றன.

Share.
Leave A Reply