இலங்கை கிரிக்கெட்டின் கோரிக்கைக்கு அமைவாகவே சர்வதேச கிரிக்கெட் பேரவையினால் இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கிரிக் இன் போ செய்தி வெளியிட்டுள்ளது.
இந்த தீர்மானத்தை எடுப்பதற்காக கூடிய கூட்டத்தில் இந்தியாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கை கிரிக்கெட்டின் தலைவர் ஷமி சில்வா, கலந்துகொண்டிருந்ததாகவும் கிரிக் இன் போ அந்த செய்தியில் மேலும் குறிப்பிட்டுள்ளது.
இந்தியாவின் அஹமதாபாத்தில் எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதி முதல் 21 ஆம் திகதி வரை கூடவுள்ள சர்வதேச கிரிக்கெட் பேரவையின் கூட்டத்திலும் ஷமி சில்வா கலந்துக்கொள்ளவுள்ளதாக அந்தி செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இலங்கையில் 2014 முதல் 2015ம் ஆண்டு வரையான காலத்திற்குள் கிரிக்கெட் இடைகால குழுவொன்று செயற்பட்டமையை, சர்வதேச கிரிக்கெட் பேரவை ஏற்றுக்கொண்டிருந்ததாக கிரிக் இன் போ செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை இலங்கை கிரிகெட்டில் அரசாங்கம் தலையிடுவதைத் தடுக்கும் முகமாக இலங்கை கிரிக்கெட்டின் உறுப்புரிமையை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடைநிறுத்தியமை குறிப்பிடத்தக்கது.