இலங்கையில் குழந்தைகளை கடத்தி வெளிநாட்டவர்களுக்கு விற்பனை செய்யும் கும்பல் தொடர்பான விசாரணையில் இவ்வாறு 13 குழந்தைகள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.

இதேவேளை, மலேசியா ஊடாக பிரான்ஸ் மற்றும் பிரித்தானியாவுக்கு இலங்கை சிறுவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் ஆட்கடத்தல் மற்றும் கடல்சார் குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதுவரையில் 13 சிறுவர்கள் மலேசியாவிற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் இதில் இடைத்தரகர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

இந்த குற்றங்கள் தொடர்பாக குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் கொழும்பு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸிடம் கடந்த நவம்பர் மாதம் 23 ஆம் திகதி அறிவித்திருந்த நிலையில் இது தொடர்பான விசாரணைகளை விரைவாக மேற்கொண்டு சந்தேக நபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு உயர் நீதிமன்ற நீதிவான் பிரசன்ன அல்விஸ் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் தெரிவித்திருந்தார்.

அதிகளவிலான குழந்தைகள் கண்டி பிரதேசத்தில் இருந்து கடத்தப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த கடத்தல் தொடர்பாக நோர்வேயில் இருக்கும் இலங்கை பிரஜை ஒருவரிடம் இருந்து முறைப்பாடு கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply