`என்னுடன் பணிபுரியும் சக வீரர்கள், பாதுகாப்பு அறைக் கதவைப் பூட்டிக்கொண்டார்கள். நான் எவ்வளவு தட்டியும் அவர்கள் திறக்கவில்லை.’ – ராணுவ வீராங்கனை

இஸ்ரேல் – ஹமாஸ் குழுவுக்கு மத்தியில் கடந்த அக்டோபர் மாதம், 7-ம் தேதி தொடங்கிய போர் இன்னும் நீடிக்கிறது.

இந்தச் சூழலில், தற்போது, ஹமாஸின் தாக்குதலின்போது தாக்குதலுக்குள்ளாக்கப்பட்ட ராணுவ வீராங்கனை இடன் ஆர் (Eden R) October7.org எனும் வலைப் பக்கத்தில் பகிர்ந்திருக்கும் செய்தி, சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது. அவரது பதிவில்,“முதல் நாள் இரவு இசை விழா முடிந்து அக்டோபர் 7-ம் தேதி வழக்கம்போல் அமைதியாகவே எங்கள் நாள் தொடங்கியது.

நாங்கள் 13 பேர் பாதுகாப்புப் பணியிலிருந்தோம். திடீரென சைரன் சப்தம். அது என்னவாக இருக்கும் எனக் கணிப்பதற்குள் தொடர்ந்து துப்பாக்கிச் சுடும் சத்தம். எங்களை நோக்கி ஹமாஸ் குழு வந்துகொண்டிருக்கிறது.

ஆயுதங்கள் ஏதும் இல்லாததால், நாங்கள் பாதுகாப்பு அறையை நோக்கி ஓடத் தொடங்கினோம். அப்போது, எனது காலில் ஒரு துப்பாக்கிக்குண்டு பாய்ந்தது. தடுமாறி விழுந்த நான், சமாளித்துக்கொண்டு எழுந்து ஓட முயன்றேன்.

அதற்குள், என்னுடன் பணிபுரியும் சக வீரர்கள், பாதுகாப்பு அறைக் கதவைப் பூட்டிக்கொண்டார்கள். நான் எவ்வளவு தட்டியும் அவர்கள் திறக்கவில்லை.

நான் அங்கிருந்து நகர்ந்து பின்வாசல் கதவைத் தட்டினேன், சிறிது நேரத்தில் கதவு திறக்கப்பட்டது. உள்ளே விழுந்து, மேசைக்குக் கீழே ஒருவர்மீது ஒருவராகப் பதுங்கிக்கொண்டோம்.

எனது துப்பாக்கிக்குண்டு காயத்துக்கு, சக பணியாளர் ஒருவர் துணி ஒன்றைக் கொடுத்துக் கட்டிக்கொள்ளக் கூறினார். ஆனால், அதற்குள் எங்கள் அறைக்கதவு உடைக்கப்படும் சத்தம் கேட்டது.

தெற்கு காஸா

மிகுந்த பதற்றத்துடன், அவ்வளவுதான் எங்கள் வாழ்க்கை முடிந்தது என மனதால் எனது அன்புக்குரியவர்களை நினைத்துக்கொண்டிருந்தேன். கதவு உடைக்கப்பட்டது.

உள்ளே வந்த சில ஹமாஸ் குழுவினர், எங்களை நோக்கிச் சரமாரியாகச் சுட்டார்கள். நான் மொத்தம் 12 முறை சுடப்பட்டேன்.

இறந்த சடலங்களுக்கு மத்தியில் நானும் சடலம்போலக் கிடந்தேன். என் இறுதிக்குண்டுக்காக காத்துக்கொண்டிருந்தேன். ஹமாஸ் போராளிகள், நாங்கள் இறந்துவிட்டோமா எனச் சோதித்துவிட்டு, எங்கள் அறையிலிருந்த கோப்புகளைச் சோதனை செய்துவிட்டுப் புறப்பட்டார்கள்.

நான் கொஞ்சம் கொஞ்சமாக இறந்துகொண்டிருந்தேன். சில நிமிடங்களில், என் தோழி சஹா மூச்சுவிடுவதை அறிந்தேன். என்னால், பார்க்க முடிந்தது, கேட்க முடிந்தது அவ்வளவுதான்.

ஆனால், என் தோழி நானும் உயிருடன் இருப்பதை அறிந்து, அவளது சட்டையைக் கழற்றி என் உடலிலிருந்து வெளியேறும் ரத்தத்தை நிறுத்தத் கொடுத்தாள். என் உடலில் எந்த இடங்களிலெல்லாம் காயம் இருக்கிறது என்பதை அறிவதற்குள் நான் இறந்துவிட்டேன் என்றே நினைத்தேன்.

சுமார் நான்கு மணி நேரத்துக்குப் பிறகு மீட்புக்குழு வடிவில் தேவதைகள் வந்தார்கள். அப்போதே அவர்களிடம் என் குடும்பத்தாருக்கு என் நிலையைத் தெரிவிக்கக் கேட்டுக்கொண்டேன்.

இடன் ஆர் சிகிச்சையின் போது

அதன் பிறகு நான் கண் விழித்துப் பார்த்தபோது, மருத்துவமனையில் இருந்தேன். இரண்டு அறுவை சிகிச்சைகள் முடிந்திருக்கின்றன.

மருத்துவமனையில் முதல் 48 மணி நேரம் கடினமானதாக இருந்தது. அடுத்த மூன்று நாள்களுக்கு மருத்துவர்கள் என்னை மயக்கநிலையில் வைத்திருந்தனர்.

என்னுடன் உயிர் பிழைத்த தோழியும் குணமடைந்துவருகிறார். இவ்வளவுக்கு பிறகும் நான் உயிர் பிழைத்திருப்பது அதிசயம்தான். இந்தச் சம்பவம் என் வாழ்வில் திகில் நிறைந்த திரைப்படத்தைப் போன்றது” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Share.
Leave A Reply