டிக்கெட் டு ஃபினாலேவில் ஆட முடியாத படி வாக்கெடுப்பில் பின்தள்ளப்பட்ட விஜய் மற்றும் அர்ச்சனாவைப் பரிவுடன் விசாரித்தார் கமல். அவர்களுக்கு உள்ளுக்குள் நிச்சயம் வருத்தம் இருக்கும். என்றாலும் “அதெல்லாம் போராடி வந்துடுவோம்” என்று நம்பிக்கையுடன் பேசினர்.
ஒரு நகைச்சுவைக் காட்சியில் கவுண்டமணியிடம் செந்தில் பரிதாபமாகக் கேட்பார். “ஏண்ணே… எப்பவும் என்னை அடிக்கறீங்க?”. அதற்கு கவுண்டமணி “டேய் தேங்கா மண்டையா… நான் அடிக்கக்கூடாதுன்னுதாண்டா நெனக்கறேன்.
ஆனா அதென்னமோ தெரியல… உன்னைப் பார்த்தவுடனே அடிக்கத்தான் முதல்ல தோணுது” என்று. இது போல கமலுக்கும் பூர்ணிமாவிற்கும் இடையில் ஏதோ ஒரு கெமிஸ்ட்ரி விஷயம் ஒத்துப் போகவில்லை.
தன்னை கமல் தொடர்ந்து திட்டிக் கொண்டேயிருக்கிறார் என்கிற வருத்தமும் புலம்பலும் பூர்ணிமாவிடம் இருக்கிறது.
இதற்கான காரணம் எளிது. ஒரு சிறிய விமர்சனத்தைக் கூட தாங்கும் மனப்பக்குவம் பூர்ணிமாவிடம் இல்லை. உடனே அவரது முகமும் மனமும் சுருங்கிப் போகிறது.
தலை தாழ்ந்து விடுகிறது. அப்போதைக்கு உணர்ச்சிவசப்பட்டாலும் நிதான மனநிலைக்கு வந்த பிறாகவது சுயபரிசீலனையுடன் யோசிக்கிறாரா என்றால் அதுவும் இல்லை. ‘தான் பிடித்த முயலுக்கு மூணே கால்’ என்கிற மாதிரி ‘நான் என்ன தப்பு பண்ணேன்?’ என்று மட்டும்தான் யோசிக்கிறார்.
இது நம்மில் பல பேருக்கு உள்ள கெட்ட பழக்கம்தான். நமக்கு ஒரு பிரச்னை வரும் போது ‘நான் யாருக்குக் கெடுதல் பண்ணேன். எனக்கு மட்டும் ஏன் இதெல்லாம் நடக்குது’ என்று சுயபச்சாதாபத்துடன் கண்ணீர் சிந்துவோம்.
ஆனால் தெரிந்தோ, தெரியாமலோ நாம் எத்தனையோ மனிதர்களை மிதித்து விட்டு சென்றிருப்போம் என்பது மிகச் சௌகரியமாக அந்தச் சமயத்தில் நினைவிற்கு வராது.
விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளும் பக்குவம் பூர்ணிமாவிடம் இருக்கிறதா?
வீடியோ வை பார்வையிட இங்கே அழுத்தவும்: Bigg Boss Tamil Season 7 17-12-2023 Vijay Tv Show- Day 77