“சென்னை:வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் பொன்முடி குற்றவாளி என கடந்த செவ்வாய்கிழமை அறிவிக்கப்பட்ட நிலையில் அவருக்கும், அவரது மனைவிக்கும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து நீதிபதி நேற்று தீர்ப்பளித்தார்.
மேலும் இருவருக்கும் தலா ரூ.50 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது. அபராதம் செலுத்த தவறினால் மேலும் 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று கூறியும், தண்டனையை எதிர்த்து மேல்முறையீடு செய்ய ஏதுவாக 30 நாட்களுக்கு தண்டனை நிறுத்தி வைக்கவும் நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பொன்முடியின் முடக்கப்பட்ட சொத்துக்கள் விடுவிக்கப்பட்டதை எதிர்த்து லஞ்ச ஒழிப்புத்துறை தொடர்ந்த மேல்முறையீட்டு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது.
அதில்:-சிறப்பு நீதிமன்றத்தால் விடுவிக்கப்பட்ட சொத்துக்களை தற்போதைய சூழலில் மீண்டும் முடக்க வேண்டிய அவசியம் இல்லை. சிறப்பு நீதிமன்றத்தின் உத்தரவு தவறாக இருந்தாலும் நீண்ட காலம் ஆகிவிட்டதால் தலையிட முடியாது.
மீண்டும் முடக்குவதற்கான நடவடிக்கை எடுக்க தள்ளுபடி உத்தரவு தடையாக இருக்காது. இதனால் இந்த மேல்முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்வதாக நீதிபதி தெரிவித்தார். “