ரஷ்யாவின் ராணுவ கூட்டாளியாக மாறுவதால் இரான் அடையப் போகும் பலன்கள்

பிப்ரவரி 2022இல் யுக்ரேன் மீதான தாக்குதலுக்குப் பிறகு ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது.

இரானை ‘ரஷ்யாவின் சிறந்த ராணுவ கூட்டாளி’ என்று அமெரிக்கா கருதுகிறது. இரான் மாஸ்கோவிற்கு பீரங்கி மற்றும் ஆளில்லா வான்வழி வாகனங்கள் (UAVs) உட்படப் பல்வேறு ஆயுதங்களை வழங்குகிறது.

இரானுடனான ராணுவ உறவுகள் ‘நேர்மறை’ திசையில் வளர்ந்து வருவதாக ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். ஆனால் அவர் இரு நாட்டு உறவுகள் குறித்த விவரங்களைத் தெரிவிக்க மறுத்துவிட்டார்.

ரஷ்யாவிற்கு ஆளில்லா விமானங்களை அனுப்பியதை ஒப்புக்கொண்ட இரான், ‘யுக்ரேன் போரில் அவை பயன்படுத்தப்படாது’ என்றும் கூறியுள்ளது.

இருப்பினும், இரான் ரஷ்யாவுடனான ராணுவ ஒத்துழைப்பை மறைக்கவில்லை, மாறாக ரஷ்ய விமானங்களைக் கொண்டு தனது படைகளை நவீனமயமாக்கத் திட்டமிட்டுள்ளது.

 

ரஷ்யா-இரான் பாதுகாப்பு ஒத்துழைப்பின் வரலாறு

கடந்த 1987ஆம் ஆண்டு, ஐ.நா தலைமையகத்தில் இரானின் மூன்றாவது அதிபர் அலி கமெனெய் மற்றும் சோவியத் யூனியனின் துணை வெளியுறவுத்துறை அமைச்சர் விளாதிமிர் பெட்ரோவ்ஸ்கி.

இராக் இரானுடன் 1980 முதல் 1988க்கு இடைப்பட்ட காலத்தில் போரில் ஈடுபட்டபோது, அதற்கு ஆயுதங்களை வழங்கிய முக்கிய நாடுகளில் சோவியத் யூனியனும் ஒன்று. ஆனால் இந்தப் போரின் முடிவு ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையிலான ஒத்துழைப்புக்கு கதவுகளைத் திறந்தது என்றே சொல்ல வேண்டும்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) அளித்துள்ள தகவல்களின்படி, 1989ஆம் ஆண்டில் சோவியத் யூனியனுக்கும் இரானுக்கும் இடையே ஒரு பெரிய வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தானது.

இதன் கீழ், இரான் சுமார் 1.9 பில்லியன் டாலர் மதிப்பிலான உபகரணங்களைப் பெற இருந்தது. 1990 மற்றும் 1999க்கு இடையில், போர் விமானங்கள், டாங்கிகள், நீர்மூழ்கிக் கப்பல்கள் ஆகியவையும் இரானுக்கு வழங்கப்பட்டன.

ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையிலான இந்த பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர்ந்தது. எவ்வாறாயினும், இரானுக்கு எதிராக விதிக்கப்பட்ட பொருளாதாரத் தடைகளை வெளிப்படையாக மீறுவதாக குற்றம் சாட்டப்படக்கூடாது என்பதில் ரஷ்யா எப்போதும் எச்சரிக்கையாக இருந்து வருகிறது. இதன் காரணமாக இரு நாடுகளுக்கும் இடையிலான கூட்டுறவு மட்டுப்படுத்தப்பட்டது.

ஆனால் யுக்ரேன் மீதான ரஷ்யாவின் படையெடுப்பு மற்றும் அதன் சொந்த பொருளாதாரம் மற்றும் பாதுகாப்புத் துறையின் மீது பொருளாதாரத் தடைகளை விதித்த பிறகு, ரஷ்யா தனது போரைத் தொடர ஆயுதங்களைப் பெறுவதற்கான ஒவ்வொரு வாய்ப்பையும் பயன்படுத்த முயன்றது.

பாலிஸ்டிக் ஏவுகணைகளின் வளர்ச்சி, உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி மீதான தடைகள் அக்டோபரில் காலாவதியானபோது, ரஷ்யாவின் பாதுகாப்பு ஒத்துழைப்பு மீண்டும் வேகம் பெற்றது.

ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற மாஸ்கோ கண்காட்சியில், இரான் தனது ஆயுதங்களைக் காட்சிப்படுத்தியது. இது இதுவரை எந்த நாட்டிற்கும் விற்கப்படவில்லை என்பதுடன் குறிப்பாக இரானின் இஸ்லாமிய புரட்சிகர காவலர் படைக்காக (IRGC) வடிவமைக்கப்பட்டது.

இந்த ஆயுதங்களின் பட்டியலில் ஜொஹீர் (Zoheer) மற்றும் அபாபில் (Ababil/Ababil OP) பாலிஸ்டிக் ஏவுகணைகள், ஷஹீத்-129, ஷஹீத்-133 ட்ரோன்கள் மற்றும் நீண்ட தூரம் சென்று தாக்கும் அராஷ் ட்ரோன் ஆகியவை அடங்கும்.

எத்தனை ஆயுத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டன?

200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையே எத்தனை ஆயுத ஒப்பந்தங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன என்பது குறித்து அதிகாரப்பூர்வமாக விரிவான தகவல்கள் எதுவும் கிடைக்கவில்லை.

இருப்பினும், யு.என்.காம்டிரேட் (UN Comtrade) என்ற தரவுதளம் மற்றும் ரஷ்ய சுங்க சேவையின் தரவுகள் இது குறித்து தெளிவற்ற தகவல்களை அளிக்கின்றன.

யு.என்.காம்டிரேட் தரவுகளின்படி, அணுசக்தி ஒப்பந்தத்திற்கு ஒரு வருடத்திற்குப் பிறகு, 2016ஆம் ஆண்டு, ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையிலான ஆயுத வர்த்தகத்தின் அடிப்படையில் ஒரு சாதனை ஆண்டாக அடையாளப்படுத்தப்படுகிறது.

இந்த ஆண்டு இரு நாடுகளுக்கும் இடையே சுமார் 200 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுத ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.

கடந்த 2022ஆம் ஆண்டு அல்லது இந்த (2023) ஆண்டில் ரஷ்யா மற்றும் இரானின் ஆயுத வர்த்தகம் குறித்த விரிவான மதிப்பீடு எதுவும் இதுவரை காணப்படவில்லை.

ஸ்கை நியூஸ் தெரிவித்த தகவல்களின்படி, 2022இல் ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையில் கையெழுத்திடப்பட்ட ராணுவ ஒப்பந்தம் சுமார் 1.7 மில்லியன் டாலர் மதிப்புடையது. இந்த ஒப்பந்தத்தில் வெடிமருந்துகள் மற்றும் ரஷ்ய தயாரிப்பான டி-72 டாங்கிகளின் பாகங்கள் உள்ளடங்குவதாகக் கூறப்படுகிறது.

 

ஆளில்லா விமானங்களின் பெரும் பங்கு

ரஸ்லன் புகோவ் இரானிய ஆளில்லா விமானங்களை ரஷ்யாவுக்கு வழங்கியதை ஒப்புக்கொண்டார்.

யுக்ரேன் போரில் இரானிய ஆளில்லா விமானங்களை ரஷ்யா பயன்படுத்தத் தொடங்கியபோது ரஷ்யாவுக்கும் இரானுக்கும் இடையிலான ராணுவ ஒத்துழைப்பு வலுவடைந்தது. இந்தக் காலகட்டத்தில் பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் ஷஹீத்-131, ஷஹீத் -136, மொஹாஜிர்-6 ஆகியவை அடங்கும்.

ஷஹீத் யுஏவிகள் காமிகேஸ் ட்ரோன்கள், இரானில் தயாரிக்கப்பட்டன. ரஷ்ய ராணுவம் அவற்றை வர்ணம் பூசி ஜெரான் என்று பெயரிட்டது.

நெதர்லாந்தை தளமாகக் கொண்ட ‘ஏர்வார்ஸ்’ என்ற அமைப்பு அளிக்கும் தகவல்களின்படி, செப்டம்பர் 2022 முதல் செப்டம்பர் 2023 வரை யுக்ரேனில் சுமார் 2000 ஷஹீத் ட்ரோன்களை ரஷ்யா பயன்படுத்தியது.

யுக்ரேனில் ரஷ்யாவுக்கு ஆதரவாக ஷாஹீத் ட்ரோன்களை இரான் வழங்கியது என்ற குற்றச்சாட்டை இரானும் ரஷ்யாவும் நிராகரித்துள்ளன.

இருப்பினும், நவம்பர் 2022இல், இரானிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன் பேசியபோது, ‘போர் தொடங்குவதற்கு சில மாதங்களுக்கு முன்பு’ இரான் ‘ வரையறுக்கப்பட்ட’ ட்ரோன்களை ரஷ்யாவிற்கு அனுப்பியதாக உறுதிப்படுத்தினார்.

இருந்தபோதிலும், யுக்ரேன் போரில் பயன்படுத்த ரஷ்யாவுக்கு எந்த ஆயுதமும் வழங்கவில்லை என்று இரான் தொடர்ந்து ஆணித்தரமாகக் கூறி வருகிறது.

மேலும் இரானிய ஆளில்லா விமானங்களைப் பயன்படுத்தியது தொடர்பாக யுக்ரேனால் இதுவரை எந்த ஆதாரத்தையும் முன்வைக்க முடியவில்லை என்றும் இரான் கூறியுள்ளது.

ரஷ்ய ஊடகங்களும், இணையதளப் பதிவர்களும் இரானிடம் இருந்து ட்ரோன்களை பெறுகிறார்கள் என்பதை அமைதியாக ஒப்புக் கொள்கிறார்கள்.

ஷாஹீத்-136 ட்ரோனுடன் ஜெரான்-2 ட்ரோன் பொருந்துகிறது என்று பாதுகாப்பு அமைச்சகத்தின் ஜர்னல் ஜூலை 2023இல் ஒப்புக்கொண்டது.

ரஷ்ய ராணுவ நிபுணரும் பாதுகாப்பு அமைச்சகத்திற்கு நெருக்கமானவருமான ரஸ்லன் புகோவ், அக்டோபர் 2022இல் ஆர்.பி.சி. தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில், இரானிய ஆளில்லா விமானங்களை ரஷ்யாவிற்கு வழங்கியதை ஒப்புக்கொண்டார்.

ஜூலை மாதம், ஒரு ரஷ்ய டெலிகிராம் சேனல் ரஷ்ய-இரானிய ஜெரனியம் யூஏவியின் புகைப்படங்களை வெளியிட்டது. இந்த ஆளில்லா விமானங்களில் ரஷ்ய தயாரிப்பு பாகங்கள் இருப்பதாகக் கூறப்பட்டது.

 

ரஷ்யாவும் இரானும் எதை அடைய விரும்புகின்றன?

யுக்ரேனில் நடந்து வரும் போரின்போது பெரும்பாலான ரஷ்ய ஆய்வாளர்கள் இரானிய யூஏவிகளின் முக்கியத்துவத்தை அடிக்கோடிட்டுக் காட்டியுள்ளனர்.

இந்த மாதம் நடைபெற்ற அதிபர் விளாதிமிர் புதினின் வருடாந்திர செய்தியாளர் கூட்டத்தில் ஆளில்லா விமானங்கள் பற்றாக்குறை பிரச்னை எழுப்பப்பட்டது. இது குறித்து புதின் கூறுகையில், நிலைமை சீராகி வருகிறது என்றார்.

இருப்பினும், சில நாட்களுக்குப் பிறகு, பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குநர்கள் குழுவில் பேசிய புதின், யூவிஏகளின் உற்பத்தியை அதிகரிக்க இன்னும் நிறைய செய்ய வேண்டும் என்று ஒப்புக்கொண்டார்.

சர்வதேச விவகாரங்களுக்கான ரஷ்ய கவுன்சிலின் நிபுணரான ஆண்டன் மர்தசோவ், யூஏவிகளின் ‘பெரிய அளவிலான விநியோகம்’ ரஷ்யாவை நோக்கிய இரானிய தலைமையின் மிகவும் ‘குறிப்பிடத்தக்க நடவடிக்கை’ என்று கூறுகிறார்.

வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்தியின்படி, யூஏவி உற்பத்தியை உள்ளூர்மயமாக்குவது தொடர்பாக ரஷ்யாவிற்கும் இரானுக்கும் இடையில் ஒப்பந்தம் எட்டப்பட்டுள்ளது. இதன்கீழ் இரானின் உதவியுடன் ரஷ்யா தனது நாட்டில் சுமார் 6000 ஆளில்லா தாக்குதல் விமானங்களைத் தயாரிக்கவுள்ளது.

இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு 151 பில்லியன் ரூபிள் அதாவது சுமார் 1.7 பில்லியன் அமெரிக்க டாலர்கள். ரஷ்ய ஊடக இணையதளமான புரோட்டோகால்படி , இந்த ஒப்பந்தம் 1.3 முதல் 1.4 பில்லியன் டாலர்கள் வரை செய்யப்பட்டுள்ளது எனத் தெரிய வருகிறது.

இதன் கீழ், முதற்கட்டமாக 600 ட்ரோன்கள் முழுக்க முழுக்க இரானிய பாகங்களால் தயாரிக்கப்பட்டு, அவை ரஷ்யாவில் ‘அசெம்பிள்’ செய்யப்படும். படிப்படியாக ரஷ்ய பாகங்கள் அதில் பயன்படுத்தப்படத் தொடங்கும்.

இதற்காக ரஷ்யா தனது சிறப்பு பொருளாதார மண்டலமான அலபுகாவில் ஆளில்லா விமானம் தயாரிக்கும் தொழிற்சாலையை உருவாக்கி வருகிறது. இந்தத் தொழிற்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருவதாக அறிவியல் மற்றும் சர்வதேச பாதுகாப்பு நிறுவனம் சில செயற்கைக்கோள் படங்களின் அடிப்படையில் நவம்பர் மாதம் தெரிவித்திருந்தது.

ரஷ்ய வணிக வலைத்தளமான ‘தி பெல்’ தெரிவித்துள்ள தகவல்களின் படி, ஆளில்லா விமானங்களை இரான் தயாரிப்பதற்காக ரஷ்யாவிற்கு முழு உரிமையையும் விற்றுள்ளது.

அதேநேரம், ரஷ்யாவுக்கு ட்ரோன்களை கொடுத்து, இரான் உள்நாட்டு ஆயுதங்களுக்கு விளம்பரம் பெறுகிறது. சில பெரிய வல்லரசுகள் இரானிய ஆயுதங்களை வாங்கத் தயாராக இருப்பதாக இரானின் சில மூத்த தளபதிகளும் இப்போது கூறி வருகின்றனர்.

ரஷ்யாவிடம் இருந்து Su-35 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது இரான்.

இதற்கு மேல் இரான் தனது ராணுவ உபகரணங்களை நவீனமயமாக்க விரும்புகிறது. குறிப்பாக, காலாவதியான ராணுவ விமானத்தை ரஷ்ய தொழில்நுட்பத்தின் உதவியுடன் நவீனப்படுத்துவதில் ஆர்வம் காட்டி வருகிறது.

மத்திய கிழக்கிற்கு வெளியே ஒரு போருக்கு பங்களிக்கும் அசாதாரண நடவடிக்கையை இரான் எடுத்ததற்கான காரணங்களில் ரஷ்ய விமானங்களை வாங்குவதும் ஒன்று.

ரஷ்யாவிடம் இருந்து Su-35 ஜெட் விமானங்களை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதை இரான் மார்ச் மாதம் உறுதிப்படுத்தியது. ஆனால் இந்தச் செயல்முறை தாமதமானது. இதற்கிடையில், இரான் செப்டம்பர் மாதத்தில் ரஷ்யாவில் தயாரிக்கப்பட்ட பல Yak-130 பயிற்சி ஜெட் விமானங்களைப் பெற்றது.

எல்லாவற்றுக்கும் மேலாக, இரானின் முதல் துணைப் பாதுகாப்பு அமைச்சர் மெஹ்தி ஃபராஹி நவம்பரில், ரஷ்யாவில் இருந்து Mi-28 தாக்குதல் ஹெலிகாப்டர்கள், Su-35 போர் விமானங்கள் மற்றும் Yak-130 பயிற்சி விமானங்களுக்கான ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டு, அவற்றை இறக்குமதி செய்வதற்கான செயல்முறையும் நடந்து வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

இந்த விமானங்களைப் பெறுவது இரானுக்கு மிகப்பெரிய சாதனையாக இருக்கும். இருப்பினும், யுக்ரேன் போரில் இரானின் அதிகரித்து வரும் தேவைகளுக்கு மத்தியில் ரஷ்யா எத்தனை விமானங்களை இரானுக்கு வழங்க விரும்புகிறது என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும் என்று கருதப்படுகிறது.

 

Share.
Leave A Reply