வவுனியாவில் பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையில் 16,00 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன், அதனை உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூன்று பெண்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

நேற்று வியாழக்கிழமை (21) இரவு வவுனியா பொலிஸ் விசேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலின் அடிப்படையில் வவுனியா தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி சிரேஷ்ட பொலிஸ் பரிசோதகர் ஜெயக்கொடியின் தலமையில் திடீர் சோதனை ஒன்றினை மேற்கொண்டனர்.

இதன்போது, வவுனியா சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைக்கு முன்பாக உள்ள டயர் திருத்தக வியாபாரநிலையத்தில் மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 16,000 மில்லி கிராம் ஹெரோயின் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதனையடுத்து, அதனை உடைமையில் வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் வியாபார நிலையத்தின் உரிமையாளரான பெண் மற்றும் அவரது மகள்கள் என மூன்று பேர் கைதுசெய்யப்பட்டதுடன், அவர்களது வீடுகளும் பொலிஸாரால் முற்றுகையிடப்பட்டு சோதனை நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டருந்தது.

கைது செய்யப்பட்டவர்கள் மேலதிக விசாரணைகளின் பின்னர் நீதிமன்றில் முற்படுத்துவதற்கான நடவடிக்கையினை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply