தொழில் இல்லாத காரணத்தால் நத்தார் பண்டிகைக்கு பிள்ளைகள், மனைவிக்கு ஆடை வாங்கிக் கொடுக்க வழியின்றி, மனமுடைந்த நிலையில், 5 பிள்ளைகளின் தந்தை ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (24) இரவு கல்லடி பாலத்திலிருந்து வாவியில் குதித்துள்ளார். எனினும், அவர் அதிர்ஷ்டவசமாக காப்பாற்றப்பட்டுள்ளார்.

இந்த சம்பவம் மட்டக்களப்பில் நேற்றிரவு 11 மணிக்கு இடம்பெற்று, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியிருந்தது.

இயேசு நாதரின் பிறந்த தினம் எனது இறந்த தினமான அமைய வேண்டும் என்று கருதியே இந்த தந்தை தற்கொலைக்கு முயற்சித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் பிரிவைச் சேர்ந்த கிறிஸ்தவரான 42 வயதுடைய இந்த தந்தைக்கு 5 பிள்ளைகள் உள்ளனர்.

இவர் மேசன் வேலை செய்துவந்துள்ள நிலையில், தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக கட்டடத் தொழிலையும் இழந்துள்ளதால் பொருளாதார ரீதியில் பல்வேறு சிரமங்களை எதிர்நோக்கி வந்துள்ளார்.

இந்நிலையில் வருடத்தில் ஒரு தடவை வருகிற நத்தார் தினத்தை கொண்டாடுவதற்காக பிள்ளைகளுக்கு ஆடை வாங்கிக் கொடுக்க முடியாத சூழ்நிலை அவருக்கு ஏற்பட்டுள்ளது.

பிள்ளைகளுக்கும் மனைவிக்கும் ஆடை வாங்கிக் கொடுக்க முடியாமை, மனைவியின் வெறுப்புப் பேச்சு போன்ற காரணங்களால் வேதனை அடைந்துள்ளார்.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நேற்றிரவு வீட்டை விட்டு வெளியேறிய அந்த நபர், இயேசுநாதரின் பிறந்த தினம் எனது இறந்த தினமான அமைய வேண்டும் என கல்லடி பாலத்தில் இருந்து வாவியில் குதித்து தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார்.

குதித்தவர் நீரில் தத்தளித்தபோது ஏற்பட்ட பயத்தில் பாலத்தின் தூணை பிடித்துக்கொண்டு காப்பாற்றுமாறு கத்தியுள்ளார்

அவ்வேளை அங்கு தோணி மூலம் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் அவரை காப்பாற்றி கரை சேர்த்து, பொலிஸாருக்கு அறிவித்ததாக பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த நபரை பொலிஸார் கைது செய்து தற்கொலை செய்ய முயற்சித்த குற்றச்சாட்டில் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இதேவேளை இவரின் இந்த நடவடிக்கையானது, நாட்டின் பொருளாதார நெருக்கடியால் வாழ முடியாமல் இன்னலில் தள்ளப்பட்டுள்ள மக்களின் நிலையை உணர்த்துவதாக பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

Share.
Leave A Reply