2019ஆம் ஆண்டில் உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்களில் இடம்பெற்ற குண்டு வெடிப்புச் சம்பவங்கள் இலங்கை வரலாற்றில் மறக்கமுடியாத துயரமான சம்பவங்களாகும்.
55 ஆண்டுகளுக்கு முன்னர், 1968ஆம் ஆண்டு நத்தார் தினத்தில் யாழ்ப்பாணம் புனித யாகப்பர் தேவாலயத்தில் (ST.JAMES) கிறிஸ்தவர்கள் மோசமாக பொலிஸாரால் தாக்கப்பட்ட சம்பவமும் கொடூரமான வரலாற்றுப் பதிவாகிறது.
ஐக்கிய தேசிய கட்சி – தமிழரசு கட்சி இணைந்த ‘தேசிய அரசாங்க’த்தின் பதவிக்காலத்தில் கிறிஸ்து பிறப்பு விழா கொண்டாட்ட நாளில் மேற்கொள்ளப்பட்ட பொலிஸாரின் மிலேச்சத்தனமான இச்செயலை என்றுமே மறக்கமுடியாது.
1968ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தன்று இரவு நத்தார் திருப்பலி முடிவில் யாழ். உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) ஆர்.சி.தவராஜா, பொலிஸ் அதிகாரி சீ.டயஸ் உட்பட சில பொலிஸார் தேவாலயத்தின் வெளியிலும் உள்ளேயும் மக்களை எதுவித விசாரணையுமின்றி மிருகத்தனமாக தாக்கியதில் பலர் காயமடைந்தனர்.
அவர்கள் நத்தார் பண்டிகைக்காக அணிந்திருந்த புத்தாடைகளில் இரத்தக்கறைகள் படிந்தன. தேவாலயத்தில் காணப்பட்ட ஏராளமான பொருட்கள் சேதமடைந்தன.
அன்றைய தினம் நத்தார் திருப்பலிக்காக பொலிஸ் அதிகாரி டயஸ் யாழ்ப்பாணம் புனித யாகப்பர் தேவாலயத்துக்கு சென்றபோது, அவருக்கும் சில இளைஞர்களுக்கும் இடையே தகராறு, தாக்குதல், கைகலப்பு ஏற்பட்டது.
உடனே அவர், யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்துக்கு சென்று, தேவாலயத்தில் தன்னை சில இளைஞர்கள் தாக்கியதாக உதவி பொலிஸ் அத்தியட்சகர் தவராஜாவிடம் முறையிட்டார்.
அதனையடுத்து, உதவி பொலிஸ் அத்தியட்சகர் தவராஜா, இன்ஸ்பெக்டர் டயஸ், மேலும் சில பொலிஸார் ஜீப்பில் தேவாலயம் அமைந்துள்ள இடத்துக்கு விரைந்து, தேவாலயத்துக்குள்ளும் வெளியேயும் இவ்வாறு தாக்குதலில் ஈடுபட்டனர்.
இச்சம்பவம் தொடர்பில் ஆயர் இல்லம் கூறுகையில், பொலிஸ் அதிகாரியை தாக்கிய நபர்களை முறையாக கைது செய்யாமல், எதுவித விசாரணைகளும் கேள்விகளுமின்றி பொலிஸார் குரோத உணர்வோடு நடந்துகொண்டமை சட்டத்துக்கு முரணான வன்செயல் என தெரிவித்தது.
இந்த சம்பவம் காட்டுத் தீ போல் குடாநாடு முழுவதும் பரவியது. மறுநாளே பல இடங்களிலிருந்தும் தேவாலயம் நோக்கி விரைந்த மக்கள், தேவாலயத்தை பார்வையிட்டனர்.
அதனை தொடர்ந்து, யாழ்ப்பாண மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் (SP) இரா.சுந்தரலிங்கம் தேவாலயத்துக்கு வந்து விசாரணையை மேற்கொண்டார்.
அந்த காலப்பகுதியில் சமூக வலைத்தளங்கள் இல்லை. ஆங்கில, சிங்கள மொழிப் பத்திரிகைகளில் முன்பக்கத்தில், இந்த தாக்குதல் சம்பவம் தேவாலயத்தில் சேதமடைந்த தளபாடங்களின் படங்களுடன் பிரதான செய்திகளாக பிரசுரமாயின.
கொழும்பு பேராயர் அதி.வண.தோமஸ் குரே ஆண்டகை பொலிஸாரின் தாக்குதல் சம்பவத்தை கண்டித்து நடவடிக்கை எடுக்குமாறு அரசிடம் கோரிக்கை விடுத்தார். அத்தோடு, தெற்கின் கிறிஸ்தவ அரசியல்வாதிகளும் பொலிஸாரின் அராஜகத்தை கண்டித்தனர்.
தாக்குதல் இடம்பெற்று மூன்றாம் நாள், தேவாலயமானது அன்றைய யாழ்ப்பாண ஆயர்.அதி.வண.எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையால் துப்பரவுப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, பின்னர், ஆசீர்வதிக்கப்பட்டு வழிபாட்டுக்காக திறக்கப்பட்டது.
இதனையடுத்து, இச்சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணம் பாராளுமன்ற உறுப்பினர் ஜீ.ஜீ.பொன்னம்பலம், பிரதமர் டட்லி சேனநாயக்காவின் கவனத்துக்கு கொண்டுவந்தார்.
தேவாலயத்தில் மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் விவகாரம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்குமாறு பிரதமர், பொலிஸ்மா அதிபருக்கு உத்தரவிட்டார்.
அதையடுத்து, பொலிஸ் அதிகாரி டயஸ், உதவி பொலிஸ் அத்தியட்சகர் ஆர்.சி. தவராஜா உள்ளிட்ட பொலிஸார் பணியிலிருந்து இடைநிறுத்தப்பட்டனர்.
இவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படுவது குறித்து பாதிக்கப்பட்டவர்களும் ஆயர் இல்லமும் சட்டத்தரணிகளுடன் கலந்தாலோசித்தனர்.
தாக்குதல் மேற்கொண்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுத்தால், அவர்கள் நீதிமன்ற விசாரணைகள், சிறைத்தண்டனை, பாதிக்கப்பட்டவர்களுக்கு நட்ட ஈடு வழங்குவது, பதவி இழப்பது என பல இடர்ப்பாடுகளையும் சிக்கல்களையும் எதிர்கொள்வர் என்பதை அவர்கள் உணர்ந்துகொண்டனர்.
இதனால், பொலிஸ் தரப்பினர் யாழ்ப்பாணம் ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையை நேரில் சந்தித்து, இச்சம்பவத்துக்காக வருத்தமும் மன்னிப்பும் தெரிவித்துக்கொண்டனர். ஆயரும் அவர்களை மன்னித்து, இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி இந்த பிரச்சினையை தீர்த்துவைத்தார்.
அதன் பின்னர், தாக்குதல் நடத்திய பொலிஸார் மீதான விசாரணைகள் நிறுத்தப்பட்டன. இதனால் பணி இடைநிறுத்தப்பட்ட பொலிஸார் மீண்டும் கடமையில் இணைத்துக்கொள்ளப்பட்டனர். இந்த செய்திகளும் அன்றைய பத்திரிகைகளில் பிரதான தலைப்பு செய்திகளாக வெளியாகின.
அதை தொடர்ந்து, தாக்குதலின் காரணகர்த்தாவான பொலிஸார் அதிகாரி டயஸ் பதவி உயர்வு பெற்று, பிரதி பொலிஸ்மா அதிபராகி, பின்னர் ஓய்வு பெற்று, அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வாவின் அமைச்சில் பணியாற்றினார்.
பிறகு, 1996 ஜூலை 4 அன்று யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் கூட்டுறவு மொத்த விற்பனை நிலையத்தை (சதொச) அமைச்சர் நிமால் சிறிபால டீ சில்வா திறந்து வைக்கச் சென்றபோது இடம்பெற்ற குண்டு வெடிப்பில் டயஸ் பலியானார்.
யாழ்ப்பாணம் புனித யாகப்பர் தேவாலயத்தில் பொலிஸார் நடத்திய தாக்குதலும், அதன் பின்னர் நிலவிய அமைதியும் சில காலங்களுக்கு மட்டுமே நிலைத்திருந்தது.
1993 நவம்பர் 13ஆம் திகதி அந்த தேவாலயத்தின் மீது நடத்தப்பட்ட விமான குண்டு வீச்சில் 10 பேர் பலியாயினர். பலர் படுகாயமடைந்தனர். அத்தோடு, இந்த பலத்த தாக்குதலில் தேவாலயமும் முற்றாக சேதமடைந்தது.
தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க 1993ஆம் ஆண்டில் முதன் முதலாக பிரதமராக பதவியேற்றதன் பின்னர், சரியாக ஆறு மாதங்களில் இச்சம்பவம் இடம்பெற்றமை, ஜனாதிபதியின் அரசியல் வாழ்க்கையில் ஒரு பெரும் கறையாக காணப்படுகிறது.
(ம.ரூபன்)Virakesari