யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறையில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவரின் வீடு உள்ளிட்ட சில இடங்களில் இடம்பெற்ற களவுச் சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் பெண்ணொருவர் உள்ளிட்ட 7 பேர் பொலிஸாரால், நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டதுடன் அவர்களிடம் இருந்து 16 பவுண் நகைகளும் மீட்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 4 பேர், மன்னாரைச் சேர்ந்த 2 பேர் மற்றும் முல்லைத்தீவைச் சேர்ந்த ஒருவர் என 7 பேரே கைது செய்யப்பட்டு, வல்வெட்டித்துறை தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த 20ம் திகதி வல்வெட்டித்துறை பகுதியில் வசிக்கும் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவரின் வீட்டில் நடந்த களவுச் சம்பவத்தில் ஐந்தரை இலட்சம் ரூபாய் பணமும். 16 பவுண் நகைகளும் களவுபோயுள்ளது.
அது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில் களவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 19 வயதான போதைக்கு அடிமையான இளைஞன் ஒருவரை பொலிஸார் கைது செய்தனர்.
கைது செய்யப்பட்ட நபரிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில், நகை அடகு வைத்தவர், நகையை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டுக்களின் கீழ் பெண் உள்ளிட்ட ஏனையோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபர்களை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.