மியான்மரின் தாய்லாந்து எல்லைப்பகுதியில் தீவிரவாத குழுவினால் நடத்தப்படும் சைபர் கிரைம் என்ற இணையக்குற்ற நிலையங்களில் தொடர்ந்தும் ஐம்பத்தாறு இலங்கை இளைஞர்கள் சிக்குண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அண்மைய அறிக்கைகளின் படி இந்திய இளைஞர்கள் பலரும் இந்த நிலைக்குள் சிக்கியுள்ளனர்.
சீனக்குழு ஒன்றே இந்த தீவிரவாத நிலையத்துக்கான ஆட்சேர்ப்பில் ஈடுபடுவதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
தாய்லாந்தில் இலாபகரமான தகவல் தொழில்நுட்ப வேலைகள் மற்றும் சலுகைகள் என்று கூறி, அழைத்துச்சென்று, மியான்மர் எல்லையைத் தாண்டியதும் இலங்கையர்கள் உட்பட்டவர்கள் தம்மை அறியாமலேயே சைபர் கிரைம் என்ற இணையக்குற்றச் சிறைக்கு விற்கப்படுகிறார்கள்.
பொருளாதார நெருக்கடியை பயன்படுத்திக்கொண்டு முகவர்கள், இந்த மனித மூலதனத்தின் சட்டவிரோத இயக்கத்தை மேற்கொண்டு வருகின்றனர்.
உள்நாட்டு குற்றங்கள் ஒடுக்கப்படுவதை அடுத்து, சீனாவிலிருந்து வெளியேற்றப்பட்ட இந்தக் குழுக்கள், மியான்மர், லாவோஸ் மற்றும் கம்போடியா போன்ற நாடுகளில் தமது நிலையங்களை அமைத்துள்ளன.
அதிநவீன இணைய மோசடிகள் மற்றும் நிதி மோசடிகளை மேற்கொள்ள “சைபர் அடிமைகள்” அல்லது இணைய அடிமைகள் எனப்படும் கடத்தப்பட்ட இலங்கையர்கள் உட்பட்டவர்களின் பரந்த வலையமைப்பை இந்த நிலையங்கள் பயன்படுத்துகின்றன.
ஆண்கள், பெண்கள் மற்றும் இளம் பருவத்தினர் உட்பட இலட்சக்கணக்கானவர்கள், இந்த நடவடிக்கைகளுக்காக கடத்தப்படுவதாகவும், மனிதாபிமானமற்ற நிலைமைகளின் கீழ் பணிபுரிய நிர்பந்திக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.
அவர்களின் கல்வி மற்றும் திறமை இருந்த போதிலும், பாதிக்கப்பட்டவர்கள் அடிமைகளாகவே நடத்தப்படுகிறார்கள்.
உலகளவில் உள்ளவர்களுக்கு எதிராக குற்றங்களைச் செய்ய நிர்பந்திக்கப்படுகிறார்கள்.
அமெரிக்காவின் அறிக்கையும், ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் அலுவலகத்தின் ஆகஸ்ட் 2023க்கான அறிக்கையும், இந்தக் குற்றவியல் வலைப்பின்னல்களை அகற்றுவதற்கும், அவற்றில் சிக்கியுள்ள பாதிக்கப்பட்டவர்களை விடுவிப்பதற்கும் ஒருங்கிணைந்த சர்வதேச நடவடிக்கையின் அவசரத் தேவையை எடுத்துக்காட்டுகின்றன.
இந்த நிலையில் இலங்கையர்களை இந்த இடத்துக்கு பணிகளுக்கு அனுப்புவதில், துபாயில் இயங்கும் சீனக் குழு ஈடுபட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்காக இலங்கையின் உள்ளூர் தரப்பினர் சிலர் முகவர்களாக செயற்படுகின்றனர், இலாபகரமான வெளிநாட்டு வேலைகள் என்ற பொய்யான வாக்குறுதிகளை அளித்து பாதிக்கப்பட்டவர்களை அவர்கள் கவர்ந்திழுக்கின்றனர் என்று ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.