ஆப்கனில் பெண்கள் வேலைக்குச் செல்லத் தடை விதிக்கப்பட்ட பிறகு, பெண்களால் நிர்வகிக்கப்பட்டு வந்த குடும்பங்கள் மிக மோசமான நிலையை அடைந்துள்ளன.
“நான் சம்பாதிக்கவில்லை என்றால் என் குழந்தைகளுக்கு எப்படி உணவளிப்பேன்” என்று தாலிபன் சகோதரர் ஒருவரிடம் கேட்ட பெண்ணிடம், அவர் “அவர்களுக்கு விஷம் கொடுங்கள். ஆனால் நீங்கள் வீட்டிற்கு வெளியே வரக்கூடாது” என்று பதிலளித்ததாக பெயர் குறிப்பிட விரும்பாத அந்தப் பெண் கூறுகிறார்.
அவரைப் போலவே பல இன்னல்களைச் சந்தித்து வருகிறார் சோஹைலா நியாசி. “நான் கடைசியாக என் குழந்தைக்கு பால் வாங்கி இரண்டு மாதம் ஆகிறது. பொதுவாக குழந்தையின் பால் பாட்டிலில் தேநீரைத்தான் நிரப்பி வைப்பேன், அல்லது தேநீரில் ரொட்டியை ஊற வைத்து, அதை அவளுக்கு ஊட்டுவேன்,” என்கிறார் அவர்.
அவர், கிழக்கு காபூலில் உள்ள ஒரு மலையில் மண் செங்கலால் ஆன வீட்டில் வசிக்கிறார். அவர் வீட்டிற்குச் செல்ல சாலை வசதிகள் இல்லை. செங்குத்தான மண் பாதையில் பயணித்துதான் அவரது வீட்டிற்குச் செல்ல வேண்டும்.
கணவரை இழந்த சோஹைலாவிற்கு மொத்தம் ஆறு குழந்தைகள். அவர்களில் இளையவரான ஹுஸ்னா ஃபக்கீரி என்ற பெண் குழந்தை பிறந்து 15 மாதங்கள் ஆகின்றது. தன் குழந்தைக்கு கொடுப்பதாக சோஹைலா குறிப்பிடும் தேநீர், ஆப்கானிஸ்தானில் பாரம்பரியமாகக் குடிக்கப்படும் பச்சை இலைகளை வெந்நீரில் போட்டு தயாரிக்கப்படும் தேநீர், அவற்றில் பால் மற்றும் சர்க்கரை சேர்க்கப்படுவதில்லை. இதனால், சோஹைலாவின் குழந்தைக்கு ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளது.
கடந்த ஆண்டில் ஐக்கிய நாடுகள் சபை உலக உணவுத் திட்டத்தின் (WFP) அவசரகால உணவு உதவியை நிறுத்தியதால் பாதிக்கப்பட்ட 10 மில்லியன் மக்களில் சோஹைலாவும் ஒருவர். இது ஆப்கானிஸ்தானில் பெண்களால் நடத்தப்படும் இருபது லட்சம் குடும்பங்களில் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது.
ஆப்கானிஸ்தானில் நடக்கும் தாலிபன் ஆட்சியால், சோஹைலா வேலைக்குச் சென்று தனது குடும்பத்தைக் காப்பாற்ற முடியாது எனக் கூறுகிறார்.
“எங்களுக்குச் சாப்பிட எதுவுமே இல்லாத இரவுகள் இருந்துள்ளன. இந்த இரவில் நான் எங்கு போய் பிச்சை எடுக்க முடியும் என நான் என் குழந்தைகளிடம் கேட்டுள்ளேன். அவர்கள் பசியுடன் தூங்குவார்கள். ஆனால், அவர்கள் எழுந்தவுடன் நான் என்ன செய்யப் போகிறேன் என்பதுதான் என் யோசனையாக இருக்கும்.
அக்கம் பக்கத்தில் இருப்பவர்கள் உணவு கொண்டு வந்தால், எங்கள் குழந்தைகள் எனக்குக் கொடு என அவர்களிடம் சண்டையிடுவார்கள். அந்த உணவை நான் அவர்களுக்குப் பங்கிட்டுக் கொடுத்தால்தான் அவர்கள் சமாதானமடைவார்கள்,” என்கிறார் சோஹைலா.
பசியால் வாடும் தன் பெண் குழந்தையை அமைதிப்படுத்த, சோஹைலா “தூக்க மருந்து” தருவதாகக் கூறுகிறார்.
“அவளுக்குக் கொடுக்க என்னிடம் பால் இல்லாததால் அவள் எழுந்து பால் கேட்கக்கூடாது என்பதற்காக, நான் அதைக் கொடுக்கிறேன். அவளுக்கு அந்த மருந்தைக் கொடுத்த பிறகு, அவள் ஒரு நாள் காலையில் இருந்து அடுத்த நாள் வரை தூங்குகிறாள். சில நேரங்களில் அவள் உயிருடன் இருக்கிறாளா அல்லது இறந்துவிட்டாளா என்று நான் சோதித்து பார்த்துக்கொள்வேன்,” என்கிறார் சோஹைலா.
சோஹைலா தன் மகளுக்குக் கொடுக்கும் மருந்தைப் பற்றி பிபிசி விசாரித்தது. அதுவொரு பொதுவான ஆண்டிஹிஸ்டமைன் அல்லது ஒவ்வாமை எதிர்ப்பு மருந்து என்பதைக் கண்டறிந்தோம்.
சில ஆப்கானிஸ்தானிய பெற்றோர்கள் பசியால் வாடும் குழந்தைகளுக்கு இந்த மருந்தை அதிகளவு கொடுப்பதால், சுவாசக் கோளாறுகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக மருத்துவர்கள் பிபிசியிடம் தெரிவித்தனர்.
கடந்த 2022ஆம் ஆண்டு பஞ்ச்ஷிர் மாகாணத்தில் தாலிபன் படைகளுக்கும் தாலிபன் ஆட்சியை எதிர்ப்பவர்களுக்கும் இடையே நடந்த சண்டையில், தனது கணவர் கொல்லப்பட்டதாக சோஹைலா கூறுகிறார். அவரது மரணத்திற்குப் பிறகு, WFP வழங்கிய மாவு, எண்ணெய் மற்றும் காய்கறிகளை அவர் பெரிதும் நம்பியிருந்தார்.
சோஹைலா தற்போது முழுக்க முழுக்க உறவினர்கள் மற்றும் அக்கம் பக்கத்தில் உள்ளவர்களை நம்பியிருக்கிறார். நாங்கள் அங்கிருந்த பெரும்பாலான நேரம், குழந்தை ஹுஸ்னா அமைதியாகவும் செயலற்றும் இருந்தார்.