தலைமன்னார் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வேரி கிராமத்தில் உள்ள வீடு ஒன்றிலிருந்து நேற்று (28) காலை உயிரிழந்த நிலையில் குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.
சடலமாக மீட்கப்பட்டவர் மரியதாஸ் ரொனால்ட் ரீகன் (வயது 43) இரண்டு பிள்ளைகளின் தந்தையான கூலித் தொழிலாளி என தெரியவந்துள்ளது.
அண்மையில் பெய்து வரும் கனமழை காரணமாக குறித்த கிராமத்தில் உள்ள சுமார் 20க்கும் மேற்பட்ட வீடுகள் மழை வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
இந்நிலையில், மழை வெள்ளம் காரணமாக கடந்த 26ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இரவு மனைவி, பிள்ளைகள் அருகிலுள்ள வீடு ஒன்றில் தங்கியிருக்க, அந்த நபர் தனது வீட்டில் வேலைகளை முடித்துவிட்டு உறக்கத்துக்கு சென்றுள்ளார்.
அதன் பின்னர், நேற்றைய தினமே அவர் உயிரிழந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். உயிரிழந்த நபர் ஏற்கெனவே வலிப்பு நோய் காரணமாக சிகிச்சை பெற்று வந்தவர் ஆவார்.
குறித்த நபரை கடந்த இரண்டு நாட்களாக காணவில்லை என்பதனால் உயிரிழந்த நபரின் நண்பர் ஒருவர் நேற்று குறித்த வீட்டுக்குள் சென்று பார்த்தபோதே, வெள்ளத்தில் சடலம் காணப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளது.
அதனையடுத்து, அந்த நண்பர் உயிரிழந்தவரின் மனைவி, பிள்ளைகள், உறவினர்கள் மற்றும் தலைமன்னார் பொலிஸாருக்கு தகவல் கொடுத்துள்ளார்.
அதன் பின்னர், சடலம் தண்ணீரில் இருந்து மீட்கப்பட்டு, வீட்டின் அருகாமையில் வைக்கப்பட்டுள்ளது.
சம்பவ இடத்துக்கு சென்றிருந்த தலைமன்னார் பொலிஸ் மற்றும் தடயவியல் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வந்த நிலையில், சடலம் மேலதிக பரிசோதனைக்காக மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
இவரது மரணம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலைமன்னார் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.