முகநூலில் பெண் போல உரையாடி ஏமாற்றி நபரொருவரிடம் பணம் மற்றும் உடைமைகளை கொள்ளையிட்ட இருவர் நெல்லியடி பகுதியில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காங்கேசன்துறை பிராந்திய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாரால் யாழ்ப்பாணம் – நெல்லியடியைச் சேர்ந்த இருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.

திருகோணமலையைச் சேர்ந்த ஒருவருரை நெல்லியடியைச் சேர்ந்த ஒருவர் பெண் போல பழகி காதல் வலையில் வீழ்த்தி நெல்லியடிக்கு வரவழைத்துள்ளார். இதனை நம்பி நெல்லியடிக்கு சென்ற திருகோணமலையைச் சேர்ந்தவரை கத்தி முனையில் அச்சுறுத்தி பணம், உடைமைகள் என்பவற்றை இரண்டு பேர் இணைந்து கொள்ளையிட்டுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.

சம்பவம் தொடர்பாக திருகோணமலை நபர் நெல்லியடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார் இரண்டு சந்தேகநபர்களை கைது செய்ததுடன் கொள்ளையடித்துச் செல்லப்பட்ட பணம் உடமைகளையும் மீட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் இருவரிடமும் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்ற நிலையில் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Share.
Leave A Reply