“டிசம்பர் 30,2006 அன்று காலை 3 மணிக்கு எழுந்த சதாம் உசேனிடம் இன்னும் சில மணி நேரத்தில் தூக்கிலிடப்பட போகிறார் என்று தெரிவிக்கப்பட்டது. அவர் ஏமாற்றத்துடன் காணப்பட்டார். பின் அமைதியாக சென்று குளித்துவிட்டு, தூக்குமேடைக்கு தயாரானார்.”

இந்த குறிப்புகளை சதாம் உசேனின் கடைசி நாட்கள் குறித்து தான் எழுதிய “தி ப்ரைஸன் இன் இஸ் பேலஸ்” என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார் வில் பார்டன்வெர்பர். சதாம் உசேனின் காவலுக்காக நியமிக்கப்பட்டிருந்த 12 அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகளில் இவரும் ஒருவர்.

அவரது கூற்றுப்படி, தனது இறுதி நாட்களில், தான் தூக்கிலிடப்பட மாட்டோம் என்று முன்னாள் இராக் சர்வாதிகாரியான சதாம் உசேன் நம்பினாராம்.

இராக்கை 20 ஆண்டுகளுக்கும் மேலாக ஆண்டு வந்த சதாம் உசேனின் ஆட்சி 2003ம் ஆண்டு முடிவுக்கு வந்தது.


சதாம் உசேன் ஏன் தூக்கிலிடப்பட்டார்?

1982ல் துஜைல் நகரில் தனது எதிராளிகளான 148 பேரை கொலை செய்த குற்றத்திற்காக 2006ம் ஆண்டு நவம்பர் மாதம் இராக் நீதிமன்றத்தால் சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டது.

நீதிமன்ற ஆவணங்களின்படி, கொல்லப்பட்ட அனைவருமே ஷியா சமூகத்தை சேர்ந்தவர்கள். மேலும் இவர்கள் அனைவரும் சதாம் உசேனை கொல்ல முயற்சித்து தோல்வியடைந்தவர்கள்.

சதாம் உசேன் தூக்கிலிடப்படும் இடம் மற்றும் நேரம் இறுதி வரை ரகசியமாகவே வைக்கப்பட்டிருந்தது.

இராக் தலைநகர் பாக்தாத்துக்கு அருகில் உள்ள ‘காத்மியா’ பகுதியின் இராக் வளாகத்தில் உள்ள கான்கிரீட் அறையில் சதாம் தூக்கிலிடப்பட்டார். அமெரிக்கர்கள் இந்த இடத்தை ‘கேம்ப் ஜஸ்டிஸ்’ என்று அழைக்கின்றனர்.

அந்த சமயத்தில் இராக்கை சேர்ந்த சிறு குழு ஒன்றும் அந்த இடத்தில் இருந்தது.

அந்த குழு தகவலின்படி, தூக்கிலிடப்படுவதற்கு முன்பு நீதிபதி மரண தண்டனையை வாசித்த போது சதாம் உசேன் தனது கையில் குரானை வைத்திருந்தாக கூறியுள்ளனர்.

பின்னர் அந்த குரானின் நகலை அவரது நண்பர்களில் ஒருவருக்கு சதாம் கொடுக்க சொன்னாராம்.

தூக்குமேடையில் தூக்கிலேற்றும்போது, கைதிகளுக்கான உடையை அணிவதற்கு பதிலாக, 61 வயது சதாம் உசேன் வெள்ளை சட்டையும், அடர் நிற கோட்டையும் அணிந்திருந்தார்.

இராக் தொலைக்காட்சியில் முகமூடி அணிந்த நபர்கள் குழுவால் சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட செயல்பாடுகள் ஒளிபரப்பப்பட்டன. ஆனால், தூக்கிலிடப்பட்டது காட்டப்படவில்லை.

தூக்கு மேடையில் சதாம் என்ன பேசினார்? கடைசி நிமிடங்களில் நடந்தது என்ன?

தூக்கு மேடைக்கு சென்ற பிறகு, சதாம் உசேனின் கழுத்து மற்றும் தலையை சுற்றி கருப்பு துணி (வழக்கமாக தூக்குத்தண்டனை கைதிகளுக்கு அணியப்படும் துணி) மூடப்பட்டது. அதன் பின்னர் அவர் தூக்கிலிடப்பட்டார். ஆனால், அந்த துணியை போர்த்த தூக்கிலிடுபவர் முன்வந்த போது, சதாம் அதை மறுத்துள்ளார். காரணம், அந்த துணியை அணியாமல் தூக்கிலிடப்பட அவர் விரும்பினார்.

சதாம் தூக்கிலிடப்பட்ட பிறகு கசிந்த வீடியோ ஒன்றில், சதாமின் கழுத்தில் தூக்குக் கயிறை மாட்டியபோது, ​​“இந்தத் துணிச்சலை நினைத்து பார்ப்பாயா…” என்று சிரித்துக் கொண்டே கத்துவது போல் காட்சிகள் இருந்தன.

அதன் பின், அங்கு நின்றிருந்தவர்களில் ஒருவர், “நரகத்திற்குப் போ…” என்று கத்த, எதிரி நாட்டினர் தனது நாட்டை அழித்ததாக குற்றம் சாட்டும் சதாம், “அந்த நரகம் இராக்கா?” என்று கேட்டுள்ளார்.

பிபிசி உலக செய்தியாளர் ஜான் சிம்ப்ஸன் கூற்றுப்படி, சதாம் உசேன் தூக்கிலிடப்படும் அந்த வீடியோவில், “ அவர் மன்னிப்பு கேட்டு கெஞ்சாமல் மிக பொறுமையாக நின்று கொண்டிருந்தாராம்”.

மேலும் அந்த வீடியோவில், சதாம் உசேன் குரான் வசனங்களை படித்துக்கொண்டே தூக்குமேடைக்கு வருவதும் உள்ளது.

அந்த நேரத்தில், இராக்கின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மாவ் வஃபிக் அல் ரிபாயும் அந்த இடத்தில் உடனிருந்தார். அதற்கு பின்னர் பிபிசியிடம் பேசிய அவர், சதாம் தூக்கு மேடைக்கு அமைதியாக நடந்து வந்ததாக கூறினார்.

“அவரை நாங்கள் தூக்கு மேடைக்கு அழைத்து சென்றோம். அவர் சில முழக்கங்களை எழுப்பினார். மேலும் அவர் மிகவும் உடைந்து போயிருந்தார்.”

2013 ஆம் ஆண்டு வெளியான ஒரு புகைப்படத்தில் சதாமின் வெண்கலச் சிலை மற்றும் அதன் கழுத்தில் அவர் தூக்கிலிடப்பட்ட அதே கயிறு இருந்தது. அந்த புகைப்படத்தில் இருந்த நபர் மாவ் வஃபிக் அல் ரிபாய் தான்.

அந்த புகைப்படம் வெளியான பிறகு, பல நாடுகளை சேர்ந்த நபர்களும் அந்த கயிறை ஏலத்தில் கேட்டனர். ஆனால், மாவ் வஃபிக் அல் ரிபாய் சதாம் உசேனின் அந்த சிலை மற்றும் கயிறை அருங்காட்சியகத்தில் வைக்கப்போவதாக கூறிவிட்டார்.

இந்த வழக்கே ஒரு நகைச்சுவை..

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட பிறகு அவரது உடலின் புகைப்படங்கள் இராக் தொலைக்காட்சியில் வெளியிடப்பட்டது. அதில் வெள்ளைநிற மேலங்கிக்கு பதில் அவர் கோட் அணிந்திருந்தார் மற்றும் அவரது உடல் வெள்ளை தாளால் மூடப்பட்டிருந்தது.

சதாம் உசேன் தூக்கிலிடப்பட்டு அவரது உடல் வெளியே கொண்டுவரப்பட்ட போது அங்கு கூடியிருந்த மக்கள் அவர் மீது எச்சில் உமிழவும், திட்டவும் செய்தனர்.

“தி ப்ரைஸன் இன் இஸ் பேலஸ்” என்ற தனது புத்தகத்தில் சதாமின் 12 காவலர்களில் ஒருவர் அந்த கூட்டத்தை கட்டுப்படுத்த முயற்சித்த போது, மற்றவர்கள் அவரை பிடித்து இழுத்து விட்டனர் என்று எழுதியுள்ளார் பார்டன்வெர்பர்.

அந்த 12 காவலர்களில் ஒருவரான ஆடம் ராதர்சன், “ சதாம் உசேன் தூக்கிலிடப்பட்ட போது, நாங்கள் அவருக்கு துரோகம் இழைத்து விட்டதாக உணர்ந்தோம். நாங்கள் எங்களையே கொலைகாரர்களாக கருதிக்கொண்டோம். எங்களுக்கு நெருக்கமான ஒருவரை நாங்கள் கொலை செய்துவிட்டதாக நாங்கள் உணர்ந்தோம்” என்று பார்டன்வெர்பரிடம் கூறியுள்ளார்.

டிசம்பர் 13, 2003 அன்று சதாம் உசேன் கைது செய்யப்பட்ட பின்னர், அவர் மூன்று ஆண்டுகள் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டார். பின்னர் நவம்பர் 5, 2006 அன்று நீதிமன்றத்தால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.

சதாம் உசேனுக்கெதிரான வழக்கின் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன்பு நீதிபதியிடம் அங்கிருந்த முன்னாள் அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரிம்சி கிளார்க் “இந்த விசாரணை ஒரு நகைச்சுவை” என்று எழுதப்பட்ட ஒரு சீட்டைக் கொடுத்துள்ளார். இதனால் அவரை நீதிமன்ற அறையை விட்டு வெளியேறுமாறு உத்தரவிட்டார் நீதிபதி.

பிபிசி தமிழ்

Share.
Leave A Reply