இலங்கையில் அதிக ஊழல்களில் ஈடுபடும் நபர்களில் முதலிடத்தில் பொலிஸார் இடம்பிடித்துள்ளனர்.
இந்தத் தகவலை பேராதனை பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை பேராசிரியர்களான வசந்த அத்துகோரள மற்றும் மாலக ரணதிலக்க ஆகியோரால் இணையவழியாக மேற்கொள்ளப்பட்ட ஆய்வொன்றில் இந்த தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கை பொலிஸாரைப் பொறுத்தவரை இன்று நேற்று என்றில்லாமல் என்றுமே இலஞ்சம் மற்றும் ஊழல் குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்கும் பாதுகாப்பு தரப்பினரில் முதலிடத்தைப் பெற்று வருகின்றனர்.
போக்குவரத்து பொலிஸாரிலிருந்து உயர் அதிகாரிகள் வரை ஏதாவதொரு குற்றச்சம்பவத்தை மறைக்க ,குற்றச்சம்பவங்களுடன் தொடர்புடையவர்களை அடையாளப்படுத்தாமலிருக்க அல்லது சம்பவங்களை கண்டுகொள்ளாமலிருப்பதற்காக அவர்கள் இலஞ்சம் பெறுவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கை பிரஜைகள் ஐந்நூறு பேரிடம் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் இந்த தகவல் வெளியாகியுள்ளது. இந்த ஐந்நூறு பேரில் தமிழ், சிங்கள, முஸ்லிம் இன மக்கள் அடங்குகின்றனர்.
இந்த ஆய்வு கணக்கெடுப்பின் படி இரண்டாவது இடத்தில் நாடாளுமன்ற எம்.பிக்கள் இடம்பிடித்துள்ளனர். மூன்றாவது இடத்தில் மாகாண சபை உறுப்பினர்களும் நான்காவது இடத்தில் உள்ளூராட்சி சபை உறுப்பினர்களும், அதற்கு அடுத்த இடங்களில் முறையே கிராம உத்தியோகத்தர்கள், கல்வித்துறை சார்ந்தவர்கள், மின்சாரசபை ஊழியர்கள், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தார், சுங்க திணைக்களத்தார் ஆகியோர் அடங்குகின்றனர்.
இலங்கையில் உள்ள அரச நிறுவனங்களில் தமது தேவைகளை நிறைவேற்ற செல்லும் பொது மக்களில் 94% ஆனோர் ஏதாவதொரு சிரமத்துக்கும் சவாலுக்கும் முகங்கொடுப்பதாக இந்த ஆய்வு கூறுகின்றது.
ஒவ்வொரு அரச நிறுவனத்திலும் ஏதாவதொரு வகையில் ஒரு ஊழல் இடம்பெறுவதாக இந்த 94 வீதமானோர் தெரிவிக்கின்றனர்.
இதில் 22 வீதமானோர் ஏதாவதொரு வகையில் இலஞ்சம் வழங்கியே தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இதில் 49 வீதமானோர் தனிப்பட்ட உறவு முறைகள் . நண்பர்களினூடாக தமது தேவைகளை அரச நிறுவனங்களில் நிறைவேற்றிக்கொண்டதாகவும் ஆறு வீதமானோர் ஏதாவது அன்பளிப்புகளை வழங்கி அதன் மூலம் தமது தேவைகளை நிறைவேற்றிக்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச நிறுவனங்களிலேயே அதிக ஊழல் துஷ்பிரயோகங்கள் மற்றும் இலஞ்ச செயற்பாடுகள் இடம்பெறுவதாக 36 வீதமானோர் கூறியிருக்கின்றனர். இதில் 10 பாலியல் இலஞ்ச வழக்குகள் தொடரப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அரச சேவைகளைப் பெறச்செல்லும் மக்களில் 15 வீதமானோரே திருப்தியடைவதாகவும் 30 வீதமானோர் அதிருப்தியை எதிர்நோக்குவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இலஞ்சம் பெறுதல் மற்றும் ஊழல் செயற்பாடுகளில் பொலிஸ் துறை முதலிடம் பெற்றிருப்பது ஒன்றும் அதிசயமல்ல என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மிக அதிகமாக போக்குவரத்து பொலிஸாரே இலஞ்சம் பெறுவதில் முன்னிலை வகிக்கின்றனர்.
நாடெங்கினும் உள்ள போக்குவரத்து மார்க்கங்களில் பணிபுரியும் போக்குவரத்து பொலிஸார், போக்குவரத்து விதிகளை மீறும் வாகன சாரதிகளிடம் தாராளமாக பணம் பெற்று வருகின்றனர்.
வழக்கு தொடருதல் அல்லது சம்பவ இடத்திலேயே அபரதாத் தொகையை செலுத்துதல் போன்ற செயற்பாடுகளை இவர்கள் முன்னெடுக்காமலிருக்க வாகன சாரதிகளிடம் இலஞ்சம் பெறுவது இவர்களுக்கு சாதாரணமான விடயம்.
அதே வேளை பணம் பெறுவதற்காகவும் வாகனங்களை நிறுத்தி பல காரணங்களை சுட்டிக்காட்டி வழக்கு தொடரப்போவதாக மிரட்டுதல், பின்பு பணத்தை வாங்கிக்கொண்டு அவர்களை விடுவித்தல் போன்ற செயற்பாடுகளை போக்குவரத்து பொலிஸார் முன்னெடுக்கின்றனர். அதே போன்று பாராளுமன்ற உறுப்பினர்களும் ஊழல் செயற்பாடுகளில் இரண்டாமிடத்தில் உள்ளனர்.
சில திட்டங்களை முன்னெடுக்கவும் ஒப்பந்தங்களை மேற்கொள்ளவும் அவர்களின் கையெழுத்துகளை பெறுவதற்கு பலரும் மறைமுகமாக அவர்களின் உதவியாளர்களுக்கு அல்லது நண்பர்களுக்கு இலஞ்சம் வழங்குவதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.
மக்களால் தெரிவு செய்யப்பட்டு நாட்டின் உயரிய சபைகளில் அங்கம் வகிக்கும் இவர்கள் பல சலுகைகளையும் பெறும் நபர்களாக உள்ளனர். அதற்கும் மேலதிகமாக இவர்கள் அப்பாவி மக்களிடம் இலஞ்சம் பெறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.