இராமாயணத்தில் சீதையை ராவணன் கடத்திச் சென்று, இலங்கையில் சிறை வைத்ததாக கூறப்படும் அசோக வனம், இன்று சீதா எலிய என அழைக்கப்படுகின்றது. அசோக வனம் என்று ராமாயணத்தில் அழைக்கப்பட்ட பகுதி, இலங்கையின் மத்திய மலைநாட்டு பகுதி என்று கருதப்படுகிறது.

மலையகத்தின் நுவரெலியா நகரிலிருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் பதுளை வீதியில் இந்த அசோக வனம் என அழைக்கப்பட்ட சீதா எலிய காணப்படுகின்றது. உலகிலேயே சீதை அம்மனுக்கு கோவில் அமைந்த பகுதியாக இது வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக கூறப்படுகின்றது.

நுவரெலியாவிலிருந்து பதுளை பிரதான வீதி ஊடாக செல்லும் போது, வீதியின் இடது புறத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது. மலையகத் தொடர்கள், கங்கை என இயற்கையுடன் இணைந்ததாகவே இந்த கோவில் அமைந்துள்ளது விசேஷ அம்சமாகும்.

ராவணன் சீதையை கடத்தி, சுமார் 11 மாதங்கள் இந்த அசோக வனத்திலேயே மறைத்து வைத்திருந்ததாக நம்பப்படுகின்றது.

சீதையை தேடி அனுமன் இலங்கைக்கு வருகை தந்து, அசோக வனத்தில் சீதையை கண்டுபிடித்து, அவரை முதல் முதலாக சந்தித்ததாக கூறப்படும் பகுதியில் இந்த சீதை அம்மன் ஆலயம் அமைந்துள்ளது.

அனுமன் பாதம் என கூறப்படும் அடையாளமொன்று, சீதை அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள கல்லொன்றில் காணப்படுகின்றது. அந்த இடத்தில் சீதையை, அனுமன் சந்திக்கும் வகையிலான உருவச் சிலை அமைக்கப்பட்டு, வழிபாடுகள் நடத்தப்பட்டு வருகின்றன.

இலங்கை அசோக வனம்

அத்துடன், சீதை நீராடியதாக கூறப்படும் அழகிய கங்கையொன்று ஆலயத்தை அண்மித்து செல்கின்றது. ஆலயத்திற்கு வருகைத் தரும் பக்தர்கள், இந்த புனித கங்கையில் நீராடுவது, கை கால்களை கழுவுதல் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்கின்றனர்.

ஆலயத்திற்கு முன்பாக காணப்படும் மலைத் தொடரில் அனுமனின் முகத்தை போன்றதொரு தோற்றம் தென்படுகின்றது. அனுமன் சஞ்சீவி மலையை கொண்டு செல்லும் போது அதிலிருந்து வீழ்ந்த பகுதி என்று பக்தர்களால் நம்பப்படுகின்றது.

அசோக வனம் என கூறப்படுகின்ற இந்த பகுதியில், இன்றும் அசோக மரங்களை காண முடிகின்றது என ஆலய நிர்வாகத்தினர் கூறுகின்றனர். ஆலயத்தை அண்மித்த பகுதியில் அசோக மரங்கள் உள்ளன.

குறிப்பாக ஆலயத்தை அண்மித்து காணப்படும் ஆற்றிற்கும், அனுமன் சீதையை சந்தித்ததாக கூறப்படும் இடத்திற்கும் அருகில் இந்த அசோக மரத்தை காண முடிகின்றது. மேலும், இந்த இடத்தில் அதிகளவிலாக குரங்குகள் நடமாடி வருகின்ற நிலையில், அது அனுமனின் அவதாரங்களாக இருக்கக் கூடும் என்று பக்தர்கள் நம்புகின்றனர்.

 

ஆலயத்திலுள்ள சிலைகள்
இலங்கை சீதை கோவில்

இந்த ஆலயத்தின் மூலஸ்தானத்தில் ராமர், சீதை, லக்ஷ்மன் ஆகியோரின் சிலைகள் இருக்கின்றன. அத்துடன், விநாயகர், அனுமன் உள்ளிட்ட பல சிலைகள் காணப்படுவது இதன் விசேஷ அம்சமாகும்.

ராமர், சீதை மற்றும் லக்ஷ்மனன் ஆகியோரின் சுயம்பு விக்கிரகங்கள் காணப்படுவதாக ஆலயத்தின் பூசகர் சுதர்ஷன சர்மா தெரிவிக்கின்றார்.

”ராமாயணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு வசனம், கண்டேன் சீதையை. அதாவது ஆஞ்சநேயர் சீதையை முதல் முதலாக கண்ட இடம் என்று இதனை சொல்வார்கள்.

சீதை அசோக வனத்தில் இருக்கும் போது சீதையை தேடி வருகின்றார் அனுமன். முதல் முதலாக அசோக வனத்தில் இங்கு தான் அவரை காண்கின்றார்.

அதனால் தான் கண்டேன் சீதையை முதல் முதலாக கண்ட இடம் என்றும் பிரசித்தி பெற்று காணப்படுகின்றது” என அவர் கூறினார்.

மேலும், “அந்த இடத்தில் தான் அனுமனின் பாதம் இங்கு இருக்கின்றது. அனுமன் சீதையை கண்ட பின்னர் தனது விஸ்வரூபத்தை எடுத்து காட்டி, நமஸ்காரம் செய்த இடம் என்றும் இதனை சொல்வார்கள். அதனால், விஸ்வரூப பாதம் இங்கு இருக்கின்றது.” என ஆலயத்தின் பூசகர் சுதர்ஷன சர்மா தெரிவிக்கின்றார்.

புனித கங்கை

”இந்த இடத்தில் புனிதமான இடமாக இந்த கங்கையை சொல்வார்கள். அதாவது சீதை வாழ்ந்த காலம் கிருதாயுகம் என்றும் சொல்வார்கள்.

கிருதாயுகத்தில் சீதை இருந்தபடியால், இந்த கங்கையில் அவர் நீராடியிருக்கலாம் என்று சிறப்பித்து சொல்வார்கள்.

அதனால், இந்த நதி கூட சீதா தேவியின் நாமத்தில் இன்றும் அழைக்கப்படுகின்றது. சீதா பவித்ர கங்கா என்ற நாமத்தில் இந்த கங்கை அழைக்கப்படுகின்றது.” என ஆலயத்தின் பூசகர் குறிப்பிடுகின்றார்.

அசோக மரங்கள்

”சீதை இங்கு இருந்ததற்கு சான்றாக அந்த அசோக மரங்கள் இன்றும் இங்கு இருந்துக்கொண்டே இருக்கின்றது. அதுவொரு உன்னதமான சிறப்பாகும்.” எனவும் அவர் கூறுகின்றார்.

மூல மூர்த்திகள்

”அசோக வனத்தில் இந்த மூர்த்திகள் எல்லாம் சுயம்பு விக்கிரமாக கண்டு எடுக்கப்பட்டது. சுயம்பு என்றால் தன்னிலையாக உருவானவை. ராமர், சீதா, லக்ஷ்மன் ஆகியோரின் சிலைகள் சுயம்பு விக்கிரகங்களாக எடுக்கப்பட்டன. அது இங்கு பிரசித்தியாக காணப்படுகின்றது.

ஏனைய ஆலயங்களில் விக்கிரகங்கள் பிரதிஷ்டை செய்யப்பட்டிருக்கும். ஆனால் எங்களுடைய ஆலயத்தில் இரண்டு மூலஸ்தானங்கள். ஒன்று பிரதிஷ்டா மூர்த்தியாகவும், மற்றையது சுயம்பு விக்கிரகமாகவும் காணப்படுகின்றது.” என ஆலயத்தின் பூசகர் சுதர்ஷன சர்மா தெரிவிக்கின்றார்.

இந்திய பக்தர்களின் வருகை அதிகரிப்பு

சீதை அம்மன் கோவிலில் வழிபாடுகளை நடத்துவதற்காக உள்நாட்டு பக்தர்கள் மாத்திரமன்றி, வெளிநாட்டு பக்தர்களும் அதிகளவில் வருகைத் தருவதை காண முடிகின்றது. இந்திய பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு அதிகளவில் வருகைத் தருகின்றார்கள்.

குறிப்பாக இந்தியாவின் வடப் பகுதியைச் சேர்ந்த பக்தர்கள் அதிகளவில் வருகைத் தருவதை காண முடிகின்றது. இவ்வாறு வருகைத் தந்த பக்தர்கள் பிபிசி தமிழுடன், கோவில் தொடர்பான தமது எண்ணங்களை பகிர்ந்து கொண்டனர்.

”நாங்கள் ராமர், சீதை, மற்றும் அனுமனைப் பற்றி நிறைய கேட்டிருக்கின்றோம். நாங்கள் ராமாயணம், அதிலுள்ள சுந்தர காண்டம் ஆகியவறைப் படித்திருக்கிறோம்.

எனக்கு சிறுவயதிலிருந்தே இலங்கைக்கு வந்து அசோகவனம் ஆகிய இடங்களைப் பார்வையிட வேண்டும் என்ற ஆவல் இருந்தது. இப்போது அந்த கனவு நிறைவேறியிருகிறது.”

“இப்போது அசோகவனத்தைப் பார்த்தேன். இங்கு மிக நல்ல ‘பாசிட்டிவ் எனர்ஜி’ கிடைத்தது. நான் இங்கு வந்து அரைமணி நேரத்திற்கு மேல் ஆகிறது.

ஆனால் இங்கிருந்து செல்வதற்கு மனமே வரவில்லை. நாங்கள் அனுமனின் காலடிகளைக் கண்டு அதில் கை வைத்து வணங்கினேன். என் கண்களில் நீர் திரண்டது. நாங்கள் ராமர், சீதை, அனுமன் ஆகியோரிடம் வேண்டுவதை அவர்கள் பூர்த்தி செய்வர்.” என இந்திய பக்தராக ரோணு மஹத்தா தெரிவித்தார்.

இந்த கோவிலுக்கு வருகைத் தந்த மற்றுமொரு பக்தரான விஜயவாடாவைச் சேர்ந்த மதன் குமார் பிபிசி தமிழிடம் பேசுகையில், ”நாங்கள் அசோகவனத்தை தரிசிப்பதற்காக வந்திருக்கிறோம்.

சீதை ஒரு வருட காலம் ராமனுக்காகக் காத்திருந்த இடம் இது. இந்த இடத்திற்கு வந்து தரிசித்ததை பாக்கியமாகக் கருதுகிறோம். சீதா தேவி எங்களை ஆசீர்வதித்ததாகக் கருதுகிறோம். அரக்கர்களுக்கு மத்தியில் காட்டில் தைரியமாக இருந்து பெண்களுக்கு உதாரணமாகத் திகழ்ந்தார்.”

“எத்தனை இன்னல்கள் வந்தாலும் சீதா தேவியைப் போல தைரியமாக இருந்து நாம் வாழ்வில் சாதிக்க வேண்டும்.

அனுமன் அவ்வளவு தூரத்தில் இருந்து இங்கு வந்து சீதையின் நிலையைத் தெரிந்துகொண்டு ராமருக்குத் தெரியப்படுத்திய இந்த இடத்தை தரிசித்தது பாக்கியமாகக் கருதுகிறோம்.” என அவர் கூறினார்.

மேலும், ஆந்திராவைச் சேர்ந்த கங்காதர் சீதை கோவில் குறித்து தனது கருத்தைப் பகிர்ந்து கொண்டார்.

”சீதை அசோகவனத்தில் இருந்த இடத்தை இங்கு கோவிலாகக் கட்டியிருக்கிறார்கள். இங்குதான் அனுமன் சீதையைச் சந்தித்து, அவர் கொடுத்த செய்தியை ராமரிடம் கொண்டு சென்றார். இங்கிருக்கும் நதி சீதை குளித்த நதி. அதில் நீர் மிகவும் குளிர்ந்திருக்கிறது. இந்த இடம் மிகவும் அற்புதமாக உள்ளது.” என அவர் குறிப்பிட்டார்.

 


அயோத்திக்கு சீதை கோவிலில் இருந்து வந்த கல்

அயோத்தியில் தற்போது நிர்மாணிக்கப்பட்டுள்ள ராமர் கோவிலுக்கு, சீதை அம்மன் கோவிலிருந்து கல்லொன்று அனுப்பி வைக்கப்பட்டது.

சீதை கோவிலின் தலைவராக செயற்படும் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன், கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் ஊடாக இந்த கல்லை அனுப்பி வைத்திருந்தார்.

2021ஆம் ஆண்டு மார்ச் மாதம் 18ஆம் தேதி இந்த கல் இந்திய உயர்ஸ்தானிகரிடம், நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் கையளித்திருந்தார்.

இந்தியாவிற்கும், இலங்கைக்கும் இடையில் இராமாயண வரலாறு காணப்படுகின்ற நிலையிலேயே, இலங்கையிலிருந்து கல்லொன்று அயோத்தி ராமர் கோவிலுக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக சீதை அம்மன் கோவிலின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

இந்திய அரசாங்கத்தின் உதவிகளுடன், சீதை அம்மன் ஆலயத்தின் புனர் நிர்மாணப் பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறுகின்றார்.

”இந்த கோவிலுடைய புனர் நிர்மாணப் பணிகள் இடம்பெற்று வருகின்றது. இந்த இடமானது இராமாயணத்தின் சுந்தர காண்டத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற இடமாக காணப்படுகின்றது.

இந்த கோவிலினுடைய கும்பாபிஷேகம் எதிர்வருகின்ற ஏப்ரல் மாதம் 17ம் தேதி நடைபெறவுள்ளது. ராமர் நவமி அன்று நடத்தப்படவுள்ளது. அண்மையில் அயோத்தியில் அங்குரார்ப்பணம் செய்யப்பட்ட கோவிலுக்கு இங்கிருந்து கற்கள் அனுப்பி வைக்கப்பட்டன.”

“இந்த கோவில் பிரசித்தமான கோவில் என்ற அடிப்படையில் இந்திய நாட்டு பிரஜைகளின் வருகை இன்று அதிகமாக காணப்படுகின்றது.

அதேபோன்று, இந்திய பிரதமர் அவர்களை கோவிலின் கும்பாபிஷேகத்திற்கு வருகைத் தருமாறு அழைத்திருக்கின்றோம்.” என சீதை அம்மன் கோவிலின் தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர் வீ.இராதாகிருஸ்ணன் தெரிவிக்கின்றார்.

வரலாற்று பேராசிரியர்களின் பார்வை

அசோக வனத்தில் சீதை சிறை வைக்கப்பட்டு தடுத்து வைக்கப்பட்ட இடமாக நுவரெலியாவின் சீதா எலிய பகுதி கூறப்பட்டு வருகின்ற நிலையில், அது தொல்லியல் ரீதியில் இன்று வரை உறுதிப்படுத்தப்படவில்லை என இலங்கையைச் சேர்ந்த வரலாற்றுத் துறை போராசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.

ஐதீக அடிப்படையிலேயே இந்த இடத்தில் சீதை அம்மன் தடுத்து வைக்கப்பட்டிருக்கலாம் என நம்பப்படுவதாகவும் அவர்கள் கூறுகின்றனர்.

அதைத் தவிர, இராமாயணத்தில் கூறப்படுகின்ற விதத்தில் இலங்கையில் அவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றமை தொடர்பான தொல்லியல் ஆதாரங்கள் இன்று வரை கிடைக்கவில்லை என வரலாற்றுத் துறை போராசிரியர்கள் குறிப்பிடுகின்றனர்.

கட்டுரை தகவல்

எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்
பதவி, பிபிசி தமிழுக்காக

Share.
Leave A Reply