மைசூரில் மனைவி பிரிந்து சென்று விடுவார் என்ற பயத்தில் 12 ஆண்டுகளாக வீட்டிற்கு 3 பூட்டுகள் போட்டு அடைத்து வைத்திருந்த கணவனை பொலிஸார் கைது செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கர்நாடக மாநிலம், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை அருகே உள்ள ஹரிக்கே கிராமத்தைச் சேர்ந்தவர் சுனாலயா. இவரது மனைவி ஷீலா. இவர்களுக்குக் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்ததுள்ளது.

சுனாலயாவுக்கு இது 3-வது திருமணமாகும். அவர் ஏற்கெனவே 2 பேரைத் திருமணம் செய்திருந்தார். சுனாலயாவின் கொடுமை தாங்க முடியாமல் அவருடைய இரண்டு மனைவிகளும் சுனாலயாவை பிரிந்து சென்றுவிட்டனர்.

இதனால் சுனாலயா, ஷீலாவை 3-வதாக திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு ஒரு மகனும், மகளும் உள்ளனர்.

இந்தநிலையில் 2 மனைவிகள் ஏற்கெனவே தன்னை விட்டுப் பிரிந்து சென்றதால், 3-வது மனைவியான ஷீலாவும் தன்னை விட்டுப் பிரிந்து சென்று விடுவாரோ என்ற பயத்தில் இருந்துள்ளார்.

இதனால், சுனாலயா, தனது மனைவியை வீட்டுக்குள் பூட்டி சிறை வைத்ததாகக் கூறப்படுகிறது. கதவுக்கு 3 பூட்டுகள் போட்டு, ஜன்னல்களையும் அடைத்துள்ளார். இதனால் ஷீலா வெளியே வர முடியாமல் வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்துள்ளார்.

மேலும் அந்த அறையில் கழிவறையும் இல்லை என்பதால், இயற்கை உபாதையை வாளியில் கழித்து வந்ததாகக் கூறப்படுகிறது. இவ்வாறு சுமார் 12 ஆண்டுகள் வீட்டுச் சிறையில் ஷீலா கொடுமைகளை அனுபவித்து வந்துள்ளார்.

இந்தநிலையில் ஷீலா வீட்டுச் சிறையில் இருப்பது குறித்து மெல்ல மெல்ல வெளி உலகிற்குத் தெரியவந்ததுள்ளது.

இச்சம்பவம் குறித்துக் கேள்விப்பட்ட, சுனாலயாவின் முதல் 2 மனைவிகளும், எச்.டி.கோட்டை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

புகாரின் பேரில் சுனாலயாவின் வீட்டுக்கு விரைந்து சென்ற பொலிஸார் வீட்டின் கதவை உடைத்து ஷீலாவை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இச்சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த பொலிஸார் சுனாலயாவை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மனைவி மீது சந்தேகப்பட்டு 12 ஆண்டுகளாக வீட்டில் பூட்டி வைத்துக் கொடுமைப்படுத்திய சம்பவம் அந்த பகுதி முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply