ஈராக் தலைநகரில் அமெரிக்கா மேற்கொண்ட ஆளில்லா விமானதாக்குதலில் ஈரான்சார்பு ஆயுதகுழுவின் தளபதியொருவர் கொல்லப்பட்டுள்ளார்.

கட்டாப் ஹெஸ்புல்லா அமைப்பின் தலைவர் ஒருவரும் அவரது இரண்டு மெய்ப்பாதுகாவலர்களும் பயணம் செய்துகொண்டிருந்த வாகனம் ஆளில்லா விமானதாக்குதலிற்கு இலக்காகியது எனவும் பக்தாத் தலைநகரிலிருந்து கிழக்கே உள்ள பகுதியொன்றில் இடம்பெற்ற தாக்குதலில் மூவர் கொல்லப்பட்டனர் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பிராந்தியத்தில் அமெரிக்க படையினருக்கு எதிரான தாக்குதல்களை வழிநடத்திய தளபதியே ஆளில்லா விமானதாக்குதலில் கொல்லப்பட்டுள்ளார்.

ஜோர்தானில் அமெரிக்க தளம் மீது மேற்கொள்ளப்பட்ட ஆளில்லா விமானதாக்குதலிற்கும் இந்த குழுவிற்கும் தொடர்புள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது.

பக்தாத்தின் மஸ்டால் என்ற பகுதியிலேயே இந்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது பல வெடிப்புச்சத்தங்கள் கேட்டுள்ளன.

சனசந்தடி நிறைந்த வீதியில் கார் துல்லியமாக தாக்கப்பட்டது இதனால் கார் முற்றாக எரியுண்டுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

அபுபக்கிர் அல் சடாடி என்ற தளபதியே கொல்லப்பட்டுள்ளார்.

பிராந்தியத்தில் அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களை திட்டமிட்டு முன்னெடுப்பதற்கு பொறுப்பான தளபதியே கொல்லப்பட்டுள்ளார் என அமெரிக்க மத்திய கட்டளைபீடம் தெரிவித்துள்ளது.

பாரிய அழிவோ பொதுமக்களிற்கு உயிரிழப்போ ஏற்படவில்லை என அமெரிக்க மத்திய கட்டளைப்பீடம்தெரிவித்துள்ளது.

அந்த பகுதிக்கு பிபிசி செய்தியாளர்கள் சென்றவேளை அமெரிக்காவே பெரும் தீமை என மக்கள் கூச்சலிட்டுள்ளனர்.

பிபிசி செய்தியாளர்கள் அந்தவாகனத்தை நெருங்க முயன்றவேளை அங்கிருந்தவர்கள் பத்திரிகையாளர்களிற்கு அனுமதியளிக்க முடியாது என தெரிவித்து அவர்களை அங்கிருந்து துரத்தியுள்ளனர்.

நீங்கள் வெளிநாட்டவர்கள் வெளிநாட்டவர்களே இதற்கு காரணம் என ஒருவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்த தாக்குதலை தொடர்ந்து பக்தாத்தில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply