மது போதையில் மோட்டார் சைக்கிளை செலுத்தியவர், எதிரே வந்த மோட்டார் சைக்கிளில் மோதியதால், அதில் பயணித்த குடும்பஸ்தர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்த சம்பவம் முல்லைத்தீவில் இடம்பெற்றுள்ளது.

முல்லைத்தீவு – குமுழமுனை, செம்மலை பகுதியைச் சேர்ந்த 56 வயதுடையவரே விபத்தில் உயிரிழந்துள்ளார்.

அந்த நபர் குமுழமுனை நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்றுகொண்டிருந்தபோது, எதிரே வந்த மோட்டார் சைக்கிளால் மோதுண்டு விபத்தில் சிக்கியுள்ளார்.

விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் மது போதையில் இருந்ததாகவும், அவர்களில் மோட்டார் சைக்கிளை செலுத்திய நபர் தவறான முறையில் வாகனத்தை செலுத்தியதாலேயே இவ்விபத்து ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

விபத்தில் சிக்கி படுகாயமடைந்த குடும்பஸ்தர் மாஞ்சோலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர், அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் மாற்றப்பட்டு, சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவரின் உடலானது உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

அதேவேளை, விபத்தை ஏற்படுத்திய மோட்டார் சைக்கிளில் பயணித்த இருவரும் படுகாயமடைந்து வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் ஒருவர் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும், மற்றையவர் மாஞ்சோலை வைத்தியசாலையிலும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Share.
Leave A Reply