உலகில் எந்தவொரு சமூகமும் எதிர்நோக்காத துயரங்களை காஸா மக்கள் இன்று எதிர்நோக்கி வருகின்றனர். உண்ண உணவின்மை, பசி, பட்டினி, கண்முன்னே மரணங்கள் என அவர்கள் எதிர்நோக்கும் துயரங்கள் சொல்லுந்தரமன்று, அனைத்துக்கும் மேலாக சுமார் 3 இலட்சத்துக்கும் அதிகமான மக்கள் சிறிதளவு உணவுடன் வெறுந் தண்ணீரை மாத்திரமே உணவாக உட்கொண்டு வருகின்றனர்.
அரபு நாடுகள் மாத்திரமன்றி , சமாதானத்தை விரும்பும் உலகின் பல்வேறு நாடுகளும் இந்த துயரத்துக்கு முடிவுகாண முடியாத நிலையில், நடப்பதைப் பார்த்துக் கொண்டிருக்கின்றன.
அனைத்துக்கும் மேலாக கையில் ஏந்தி இருக்கும் பச்சிளம் குழந்தைகள் கதறிய நிலையில் கண்முன்னே இறப்பதை எந்த பெற்றோரால் பார்த்துக் கொண்டிருக்க முடியும்.
இஸ்ரேலைப் பொறுத்தமட்டில் எந்தவிதமான தயவு தாட்சண்யமின்றி, தனது பழிவாங்கும் நடவடிக்கைகளை தொடர்ந்து கொண்டேயிருக்கின்றது. இந்தவிதமான சூழலில் கடந்த வியாழனன்று காஸாவில் நிவாரணப்பொருட்களைஅவசரமாக ஏற்றிச் சென்ற தொடரணியை நெருங்கிய மக்கள் மீது இடம்பெற்ற தாக்குதல் சம்பவமொன்றில் 70 துக்கும் அதிகமானோர் கொல்லப்பட்டதுடன் 200 கும் அதிகமானவர்கள் காயமடைந்துள்ளனர்.
இந்நிலையில் , குறித்ததொடரணியை நெருங்கிய மக்கள் மீது பாதுகாப்பின் நிமித்தம் ஆகாயத்தை பார்த்து எச்சரிக்கை வேட்டுக்களைத் தீர்த்ததாகவும், வழமையாக நிவாரண தொடரணிகள் இடைநடுவில் சூறையாடப்படுவதாகவும் அதனைப் பாதுகாப்பாக கொண்டு செல்ல முடியாதுள்ளதாகவும், இஸ்ரேல் கூறுகின்றது ஆனால் இஸ்ரேல் கூறுவது முற்றிலும் தவறானது. முன்னர் அவ்வாறு நடந்துள்ளது, ஆனால் இந்த தடவை சனநெருக்கடியைப் பார்த்து வேட்டுக்கள் தீர்க்கப்பட்டன என்று மக்கள் கூறுகின்றனர் .
இந்த நிலையில், காயங்களுக்கு சிகிச்சை பெற்றவர்களில் பலர் தோட்டாக் காயங்களுக்கு ஆளானதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.
மேலும், அல்-ஷிஃபா வைத்தியசாலலைக்குச் சென்று, சுமார் 200 பேரளவில் இன்னும் சிகிச்சை பெற்று வருவதையும் ஐ நா சுட்டிக்காட்டியுள்ளது .
இதேவேளை , பொதுமக்கள் மீது இஸ்ரேல் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது . ஆனால் இஸ்ரேல் தனது துருப்புக்கள் எச்சரிக்கை
வேட்டுக்களைத் தீர்த்தத்தைய டுத்து “நெரிசல்” ஏற்பட்டதாகக் கூறுகின்றது . எதுவாக இருந்த போதிலும் உணவுக்காக ஏங்கிய அப்பாவி மக்களுக்கு இறுதியாகக் கிடைத்தது மரணமே . இதனை உலகத் தலைவர்கள் பலரும் கண்டித்துள்ளதுடன் முழு விசாரணைக்கும் அழைப்பு விடுத்துள்ளனர்.
இதேவேளை , உலக உணவுத் திட்டம் வடக்கு காஸா வில் உணவுப் பஞ்சம் நெருங்கி வருவதாக எச்சரித்துள்ளது, இது அண்மைய வாரங்களில் மிகக் குறைந்த நிவாரண உதவிகளையே பெற்றுள்ளது, மேலும் 300,000 மக்கள் ஒரு கைப்பிடியளவு உணவு அல்லது சுத்தமான தண்ணீருடன் வாழ்கின்றனர் என்றும் சுட்டிக்காட்டப்படுகிறது .
காஸா நகருக்கு அருகே உதவி பெறுவதற்காகக் காத்திருந்த பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து, ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் ஜோசப் பொரெல், “இந்த துயர சம்பவம் குறித்து பாரபட்சமற்ற சர்வதேச விசாரணையை” கோரியுள்ளார் .
“எவ்வாறாயினும், சர்வதேச சட்ட விதிகளுக்கு இணங்குவது மற்றும் பொதுமக்களுக்கு மனிதாபிமான உதவிகளை விநியோகிப்பதைஉறுதி செய்வது இஸ்ரேலின் பொறுப்பாகும்” என்றும் அவரது அலுவலகம் விடுத்துள்ள அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது .
மேலும் “இந்தச் சம்பவத்திற்கான பொறுப்பு இஸ்ரேலிய இராணுவம் , மற்றும் மனிதாபிமான உதவிகளை வழங்குவதற்கு தடையாக இருக்கும் வன்முறையாளர்கள் அனைவரும் பொறுப்பு கூற வேண்டும் என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.”இந்தமோசமான சம்பவம், மனிதாபிமான உதவிகளை அனுப்பிவைப்பது மீதான கட்டுப்பாடுகள் பற்றாக்குறை, பசி மற்றும்நோயை மேலும் உருவாக்குவதுடன் விரக்தி காரணமாக ஏற்படும் வன்முறையையும் வெளிப்படுத்துகிறது.” என்று சுட்டிக்காட்டப்படுகிறது.
இதனிடையே , இஸ்ரேலிய பாதுகாப்பு படை அதிகாரியான லெப்டினன்ட் கேர்னல் பீட்டர் லெர்னர் கூறுகையில் , “ஒரு கும்பல் தொடரணி மீது தாக்குதல் நடத்தியது” என்றும் இஸ்ரேலிய துருப்புக்கள் “சில எச்சரிக்கை வேட்டுகளுடன் கும்பலைக் கலைக்க முயற்சி செய்தனர் ” என்றும் கூறியுள்ளார்.
இஸ்ரேல் பிரதமரின் சிறப்பு ஆலோசகர் மார்க் ரெகெவ் முன்னதாக , இஸ்ரேல் நேரடியாக எந்த வகையிலும் ஈடுபடவில்லை என்றும், “பாலஸ்தீனிய ஆயுதக் குழுக்களால்” துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது என்றும் அவர் கூறியிருந்தார் .
மனிதாபிமான விவகாரங்களுக்கான ஐ நா ஒருங்கிணைப்பாளரின் (OCHA) காசா துணை அலுவலகத்தின் தலைவர் ஜியோர்ஜியோஸ் பெட்ரோபௌலோஸ்கூறுகையில் அல்-ஷிஃபா மருத்துவமனைக்கு கொண்டுவரப்பட்ட அதிக அளவிலான மக்கள் துப்பாக்கிச் சூட்டு காயங்களுடன் இருப்பதைக் கண்டறிந்தனர் என்று கூறியுள்ளார். எனினும் சம்பவத்தின் போது ஐ.நா. பணியாளர்கள் இருக்கவில்லை, என்ன நடந்தது என்பதைத் துல்லியமாக அறிந்து கொள்வது மிகவும்கடினமாக இருந்தது என்றும் கூறியுள்ளார்.
அல்-அவ்தா மருத்துவமனையின் இடைக்கால மருத்துவமனை பணிப்பாளர் டாக்டர் மொஹமட் சல்ஹா கூறுகையில் , காயமடைந்த 176 பேர் வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், பலர் துப்பாக்கிச் சூட் டு காயங்களுடன் காணப்பட்டதுடன் மற்றவர்கள் கை கால் உடைந்து நிலையில் காணப்படுவதாகவும் அவர் கூறினார்.
இச்சம்பவம் குறித்து பதிலளித்த இங்கிலாந்து வெளியுறவுத்துறை செயலர் கெமரூன், இந்த மரணங்கள் “பயங்கரமானது” என்று கூறியதுடன், “அவசர விசாரணை மற்றும் பொறுப்புக்கூறல் இருக்க வேண்டும்” என்று கூறியுள்ளார் .
காஸா விற்குள் உதவிப் பொருட்கள் நுழையும் “போது” இந்த வகையான சம்பவங்களை தவிர்க்க க முடியாது இருப்பதாகவும் அவர் கவலை தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், அமெரிக்கா, காஸாவிற்கு விமானம் மூலம் வான் வழி யாக உதவிகளைதொடங்கும் என்று அறிவித்துள்ளார். “அப்பாவி மக்கள் ஒரு பயங்கரமான போரில் சிக்கி, தங்கள் குடும்பங்களுக்கு உணவளிக்க முடியாமல் தவிக்கின்றனர். எனவே நாம் அதிகமான உ தவிகளை செய்ய வேண்டும்,என்றும் அவர் குறிப்பிட்டார் .
இது வரையில் காஸா வில் 21,000 குழந்தைகள் மற்றும் பெண்கள் உட்பட 30,000 க்கும்மேற்பட்ட மக்கள்கொல்லப்பட்டுள்ளனர், 7,000 பேர் காணாமல் போயுள்ளனர் மற்றும் குறைந்தது 70,450 பேர் காயமடைந்துள்ளனர்என்று காஸாவில் ஹமாஸ்நடத்தும் சுகாதாரஅமைச்சகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்தியத் தாக்குதலில் 1,200 பேர் கொல்லப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை , போர் நிறுத்தம் வரமாட்டாதா ? என்று காஸா மக்களும், பணயக் கைதிகளாக ஹமாஸ் பிடியில் இருக்கும் இஸ்ரேலியர்களின் உறவினர்களும் ஏங்கிக் கொண்டிருக்கின்றனர். இதேவேளை, ஹமாஸின் பிடியில் சிக்கியிருக்கும் பணயக் கைதிகளை விடுவிக்கும் ஒப்பந்தம் நிறைவேற்றப்பட்டால் இஸ்லாமிய மக்களின் புனித ரமலான்மாதத்தையொட்டி போர் நிறுத்தத்தை மேற்கொள்ள இஸ்ரேல் உடன்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் தெரிவித்துள்ளார்.
மார்ச் 10-ம்திகதி ரமலான் மாதம் தொடங்கவுள்ளது. இஸ்லாமியர்களின் புனித பண்டிகையாக கருதப்படும் இந்த பண்டிகை தினத்தை முன்னிட்டு இஸ்ரேல் – ஹமாஸ் போர் நிறுத்தம் உருவாக வேண்டும் என்பதே அனைவரதும் பிரார்த்தனையாகும்.
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் கடந்த திங்கட்கிழமை கூறுகையில், ரமலான் நெருங்குகிறது.பணயக் கைதிகளை விடுவிக்க எங்களுக்கு நேரம் தரும் பொருட்டு இஸ்ரேலியர்கள் இந்த மாதத்தில் எந்த போர் நடவடிக்கைகளிலும் ஈடுபடபோவதில்லை என தெரிவித்துள்ளனர். தற்காலிக போர் இடை நிறுத்தத்தின் போது, எஞ்சியுள்ள பணயக் கைதிகளை விடுவிப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் தொடரும். அடுத்த திங்கட்கிழமைக்குள் இரு தரப்புக்கும் இடையே நிரந்தர போர்நிறுத்தம் ஏற்படும் என நம்புகிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.
கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் 7-ஆம் திகதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, ஹமாஸ் அமைப்பினர் அதிகம் இருக்கும் பாலஸ்தீன பகுதிகளான காஸா மீது இஸ்ரேல் ராணுவம் கண்மூடித்தனமாகத் தொடர்ந்து தாக்குதலைகளை நடத்தி வருகிறது. இதற்கிடையே அமெரிக்கா, கட்டார் , எகிப்து உள்ளிட்ட நாடுகள் போர் நிறுத்தம் தொடர்பில் மத்தியஸ்தம் செய்து வருகின்றன.ஹமாஸ் தரப்பும் தமது நிலைகளில் இருந்து இறங்கி வந்துள்ளது. இஸ்ரேல் – ஹமாஸ் இடையில் போர் நிறுத்த உடன்படிக்கையில் சுமுக முடிவு எட்டப்பட்டால் பரஸ்பர கைதிகள் விடுவிப்பு, மற்றும் 6 வார காலம் தற்காலிகபோர் நிறுத்தம் ஆகியவை நிறைவேறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
என்னதான் போர் நிறுத்தம் வந்தாலும் , இஸ்ரேல் – காஸா போர் இன்னும் நீடித்து வரும் நிலையில், ஹமாஸ் குழுவை ஒழிக்கும் வரை தாக்குதல் தொடரும் என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்த ள்ளார் இந்த நிலையில் , காஸா போருக்குபிந்திய திட்டம் குறித்த விவரங்களை இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு வெளியிட்டிருக்கிறார். நெதன்யாகு தனது அமைச்சரவையின் ஒப்புதலுக்காக சமர்ப்பித்த திட்டத்தில் இது குறித்த தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி, போருக்குப் பின்னர் நடக்கவிருக்கும் திட்ட வரையறையை நெதன்யாகு முதன்முறையாக பொதுவெளியில் தெரிவித்துள்ளார். இத்திட்டத்தில், காஸாவை நிர்வகிப்பதில் இஸ்ரேலின் பங்கு என்ன என்பதை நெதன்யாகு குறிப்பிட்டுள்ளார். அதாவது, ஹமாஸ் மீதான போர் முடிவடைந்த பின்னர் இராணுவம் விலக்கப்பட்ட காஸா முனையின் பாதுகாப்பு, இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் இருக்கும். சிவில் விவகாரங்களில் இஸ்ரேல் பங்கு வகிக்கும். பாதுகாப்பு அச்சுறுத்தலை முறியடிக்கும் வகையில், காஸா முழுவதும் இஸ்ரேல் ராணுவம் சுதந்திரமாக செயல்படும்.
மேலும், காஸாவுக்குள் ஒருபாதுகாப்பு வலையம் நிறுவப்படும், பயங்கரவாதத்தை ஆதரிக்கும் நாடுகள் அல்லது அமைப்புகளுடன் தொடர்பில் இல்லாத மற்றும் அவர்களிடமிருந்து நிதியுதவி பெறாத உள்ளூர் அதிகாரிகளால் காஸா நிர்வகிக்கப்படும் என்றும் இந்த திட்டத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இந்த திட்டத்தை அரபு நாடுகள், பாலஸ்தீனியர்கள் மற்றும் அமெரிக்கா ஒப்புக் கொள்ளுமா என்பது கேள்விக்குறியாகும்.
மேலும் காஸாவில் பல ஆண்டுகளாக, தேர்ந்தெடுக்கப்பட்டஉள்ளூர் பாலஸ்தீன ஆளும் அமைப்புகளை உருவாக்க இஸ்ரேல் பலமுறை முயற்சி செய்து தோல்வியடைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஹமாஸ் அமைப்பினர் பாலஸ்தீன சமூகத்தில் ஆழமாக வேரூன்றிவிட்டனர் எனக் கூறப்படுகின்றது . இதன் காரணமாக அதீத நம்பிக்கை கொண்ட ஹமாஸ் அமைப்பினர், , இஸ்ரேலின் மீது தாக்குதலைத் தொடுத்தால் , அரபுலகம் குறிப்பாக ஈரான் , லெபனான் போன்ற நாடுகள் தமக்கு சாதகமாக செயல்படும் எனவே இஸ்ரேலை இலகுவாக கையாளலாம் என்று தப்புக்கணக்கு போட்டனர். ஆனால் அவை உதவ முன்வரவில்லை. இது மறுபுறம் அப்பாவிகளின் உயிரிழப்புகளுக்கும், பொருளிழப்புகளுக்கும் காரணமாகி விட்டது என ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
அதேவேளை சந்தர்ப்பம் பார்த்துக் கொண்டிருந்த இஸ்ரேல், ஹமாஸை ஒடுக்குவதிலும் காஸா வை தனது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் முனைகின்றது. இதுவரை குறித்த மக்களின் 80 சதவீதமான குடியிருப்புக்கள் வேலைத் தலங்கள் ,மற்றும் பொருளாதாரம் போன்றவை முற்றாக நிர்மூலமாகி விட்டன என்பதே யதார்த்தம்.
வான் வழியாக காஸாவுக்குள் நிவாரணம்
இதேவேளை ,அமெரிக்கா மூன்று இராணுவ விமானங்கள் மூலம் 30,000க்கும் அதிகமான உணவுப் பொதிகளை பாராசூட் மூலம் வான் வழியாக காஸாவுக்குள் இறக்கியுள்ளது. இதன் வாயிலாக அமெரிக்கா தனது முதல் மனிதாபிமான உதவியை காசாவுக்கு வழங்கியுள்ளது. ஜோர்டானின் விமானப்படையுடன் இணைந்து மேற்கொள்ளப்பட்ட இந்த நடவடிக்கை ஜனாதிபதி ஜோ பைடனால் அறிவிக்கப்பட்ட பலவற்றில் முதன்மையானது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆர். பி என்.Virakesari