கடந்த 2019ஆம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தல் பிரசாரங்களில், அரசியல் கொள்கை, பொருளாதார கொள்கை நிலைப்பாடுகளை விட, ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் தான் முக்கிய இடத்தைப் பிடித்திருந்தது.

ஜனாதிபதி தேர்தலுக்கு சரியாக ஏழு மாதங்களுக்கு முன்னதாக, 2019 ஏப்ரல் 21ஆம் திகதி ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல்கள் இடம்பெற்றிருந்தன.

அதற்குப் பின்னர், ராஜபக்ஷவினர் தங்களுக்குச் சார்பான சூழலை உருவாக்கத் தொடங்கினர். கோட்டாபய ராஜபக்ஷவினால் மட்டுமே, தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்த முடியும் என்று பிரசாரம் செய்தனர்.

விடுதலைப் புலிகளுக்கு எதிரான போரை முடித்து வைத்தவர் தான், இதற்குப் பொருத்தமானவர் என்ற விம்பம் கட்டியெழுப்பப்பட்டது.

அதன் மூலம், சிங்களத் தேசியவாத சக்திகள் மத்தியில் அவருக்கு ஆதரவு பெருகியது. அதன் விளைவாக, 69 இலட்சம் வாக்குகளுடன்- அதுவும் சிங்கள பௌத்த வாக்குகளுடன் அவரால் ஜனாதிபதியாக முடிந்தது.

கோட்டாவின் வெற்றியில், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலுக்கு இருந்த பங்கை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது.

கோட்டாவை ஆட்சிக்கு கொண்டு வருவதற்காக ராஜபக்ஷவினரால் அரங்கேற்றப்பட்ட சதித் திட்டம் தான், ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் என்று சில மாதங்களுக்கு முன்னர், சனல் -4 தொலைக்காட்சிக்கு செவ்வியளித்திருந்தார், பிள்ளையான் எனப்படும், சிவநேசதுரை சந்திரகாந்தனின் சகாவான ஆசாத் மௌலானா.

சிறையில் இருந்த பிள்ளையான் ஊடாக, இராணுவப் புலனாய்வுப் பிரிவினர் இந்த சதித் திட்டத்தை செயற்படுத்துவதற்கு உதவிகளைப் பெற்றனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

அதனை இராணுவமும், பிள்ளையானும் மறுத்திருந்த போதும், அந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக எந்த விசாரணைகளும் முன்னெடுக்கப்படவில்லை.

இவ்வாறான நிலையில், பிள்ளையான் அண்மையில் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பான நூல் ஒன்றை எழுதி வெளியிட்டிருக்கிறார்.

அதேவேளை, இந்த தாக்குதல் நடந்த காலகட்டத்தில் ஜனாதிபதியாகப் பதவி வகித்த மைத்திரிபால சிறிசேன ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் சூத்திரதாரி யார் என்பது தனக்குத் தெரியும் என்று வெளிப்படுத்தியிருந்தார்.

தனக்கு பாதுகாப்பு வழங்கப்பட்டால் நீதிமன்றத்தில் அது தொடர்பான உண்மைகளை வெளிப்படுத்த தயாராக இருப்பதாகவும் அவர் பொது நிகழ்வு ஒன்று கூறியிருந்தார்.

அதை அடுத்து அவரை கைது செய்ய வேண்டும் என்று சிலர் கோரிக்கை விடுத்தனர். இன்னும் சிலர் அவர் நீதிமன்றம் அழைக்கும் வரை காத்திராமல் உண்மையை வெளிப்படுத்த வேண்டும் என்றனர்.

இதற்குப் பின்னர் மைத்திரிபால சிறிசேன, சூத்திரதாரியை தனக்கு முன்னரே தெரியாது என்றும் , மூன்று வாரங்களுக்கு முன்னர் தான் அது பற்றி தான் அறிந்ததாகவும் ஒரு மழுப்பல் கருத்தை வெளியிட்டார்.

இந்த பின்னணியில் பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸின் உத்தரவை அடுத்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர், மைத்திரிபால சிறிசேனாவை அழைத்து விசாரணை செய்திருக்கின்றனர்.

கிட்டத்தட்ட ஐந்தரை மணிநேரம் அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டிருக்கிறது. ஆனால் மைத்திரிபால சிறிசேன அளித்த வாக்குமூலம் உண்மையான குற்றவாளி யார் என்பதை தெளிவாக எடுத்துக்கூறியதா என்ற தகவல்களை எதுவும் வெளியாகவில்லை.

மைத்திரிபால சிறிசேன திடீரென எதற்காக ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் சூத்திரதாரியை வெளிப்படுத்த முற்பட்டுள்ளார் என்ற சந்தேகம் பலருக்கும் இருக்கிறது.

ஈஸ்டர் ஞாயிறு குண்டுத் தாக்குதல் இடம்பெற்றபோது ஜனாதிபதியாக இருந்தவர் அவர். தாக்குதல் நடப்பதற்கு முன்னரே இந்திய புலனாய்வு அமைப்பிடம் இருந்து போதுமான முன்னெச்சரிக்கைகள் வழங்கப்பட்டிருந்தன.

ஆனால் அந்த முன் எச்சரிக்கைகளை ஜனாதிபதியான மைத்திரிபால சிறிசேனவோ, பொலிஸ் மற்றும் புலனாய்வு அதிகாரிகளோ போதுமானளவுக்கு கவனத்தில் எடுத்துக் கொள்ளவில்லை.

மைத்திரிபால சிறிசேன சிங்கப்பூரில் தங்கியிருந்தபோதே குண்டுவெடிப்பு இடம்பெற்றது. அவர் உடனடியாக நாடு திரும்புவதற்கு வாய்ப்புகள் இருந்தும் மறுநாளே நாடு திரும்பியிருந்தார்.

இவையெல்லாம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகளாக முன்வைக்கப்பட்டன. அவர் அதனை மறுத்து வந்தாலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலை தடுக்கத் தவறியதால் தங்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்டவர்கள் சார்பில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை வழக்கில், மைத்திரிபால சிறிசேன உள்ளிட்ட ஐவர் மனித உரிமைகளை மீறி உள்ளனர் என்று உயர்நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

இதற்கமைய, மைத்திரிபால சிறிசேன 10 கோடி ரூபாவையும், முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜயசுந்தர மற்றும் அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் தலைவர் நிலந்த ஜயவர்தன ஆகியோர் தலா 7 கோடி 50 இலட்சம் ரூபாவையும், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ 5 கோடி ரூபாவையும், தேசிய புலனாய்வுப் பிரிவின் தலைவர் சிசிர மென்டிஸ் ஒரு கோடி ரூபாவையும் பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு இழப்பீடாக வழங்க வேண்டும் என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு, மைத்திரிபால சிறிசேனவின் அரசியல் வாழ்க்கையில் முக்கியமானது ஒரு கரும்புள்ளியாகவே அமைந்திருக்கிறது.

அவர் இழப்பீடு செலுத்துவதற்கு தன்னிடம் பணம் இல்லை என்று கூறி, காலத்தை இடித்தடித்து வருகிறார். அந்த நிதியை பொதுமக்களிடம் இருந்தும் சேகரித்து வருகிறார்.

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் தொடர்பாக தனக்கு ஏதும் தெரியாது என்று மறுத்துவந்த மைத்திரி, திடீரென தனக்கு சூத்திரதாரியை தெரியும் என புரளியை கிளப்பினர்.

அதன் பின்னர் 3 வாரங்களுக்கு முன்னர் தான் தெரியவந்தது என்று மழுப்பினார். இப்போது அது தொடர்பாக அவர் வாக்குமூலம் கொடுத்திருக்கிறார்.

அவ்வாறாயின் மூன்று வாரங்களுக்கு முன்னர் ஈஸ்டர் ஞயிறு தாக்குதல் சூத்திரதாரி யார் என்று மைத்திரிபால சிறிசேனவுக்கு தகவல் வழங்கியது யார்? என்ற கேள்வி எழுகிறது.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாக இருந்த போது இவ்வாறான ஒரு தகவலை வெளியிட்டிருந்தால், அதனை அதிகாரபூர்வமானதாக நம்பகரமானதாக எடுத்துக்கொள்ளலாம்.

ஏனென்றால் அவருக்கு பொலிஸ் மற்றும் புலனாய்வு பிரிவுகளின் ஊடாக அது சம்பந்தமான தகவல்கள் கிடைத்திருக்கும்.

ஆனால் தற்போது மைத்திரிபால சிறிசேன பாராளுமன்ற உறுப்பினராக மாத்திரமே இருக்கிறார். அதனால் அவருக்கு தகவல் வழங்கிய தரப்பு அதிகாரபூர்வமானதாக இருக்க முடியாது.

இவ்வாறான நிலையில் மைத்திரிபால சிறிசேன கூறுவது போன்று பிரதான சூத்திரதாரியாக விளிக்கப்படும் நபர் தான் உண்மையான சூத்திரதாரி என்று நிச்சயமாக கூற முடியாது.

ஏனென்றால் ஈஸ்டர் ஞாயிறு குண்டு தாக்குதல் பின்னணியில் இருந்த சூத்திரதாரி அல்லது சூத்திரதாரிகள் என்று பல பேரை நோக்கி, விரல்கள் நீட்டப்பட்டிருக்கின்றன. ஆனாலும் உண்மைக் குற்றவாளிகள் யார் என்று இதுவரை வெளிப்படுத்தப்படவில்லை.

மல்கம் ரஞ்சித்

இதுதொடர்பான விசாரணை நடத்திய ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையில், குற்றவாளிகள் என்று அடையாளப்படுத்தப்பட்டவர்கள் தொடர்பான விபரங்கள் அடங்கிய, 1500 பக்கங்கள் மறைக்கப்பட்டிருப்பதாக, பேராயர் மல்கம் ரஞ்சித் சில வாரங்களுக்கு முன்னர் குற்றம்சாட்டியிருந்தார்.

இவ்வாறான நிலையில் மைத்திரிபால சிறிசேன உண்மையான சூத்திரதாரி என்று வாக்குமூலம் கொடுத்திருப்பது, சரியானதா என்று உறுதிப்படுத்தப்பட வேண்டும். அது சரியாகவும் இருக்கலாம் தவறாகவும் இருக்கலாம்.

மைத்திரிபால சிறிசேன அரசியல் நோக்கத்துடன் இந்த தகவலை வெளியிட முன்வந்தாரா என்ற கேள்விக்கு நியாயமான இடம் இருக்கிறது. ஏனென்றால் வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட தான் விரும்புவதாக அவர் சில மாதங்களுக்கு முன்னர் கூறியிருந்தார்.

அவர் போட்டியிடுவாரா போட்டியிடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறதா என்பதை விட, அதற்கான சூழலை உருவாக்க அவர் முற்பட்டிருக்க வாய்ப்புகள் இருக்கின்றன.

இந்த நிலையில், மைத்திரிபால சிறிசேன கிளப்பி விட்டுள்ள இந்த புயல், வரப்போகும் ஜனாதிபதி தேர்தலிலும் ஈஸ்டர் ஞாயிறு தாக்குதல் பிரசார ஆயுதமாக பயன்படுத்தப்படக் கூடும் என்பதையே வெளிப்படுத்தியிருக்கிறது.

– சத்ரியன்-

Share.
Leave A Reply