தான் தங்கியிருக்கும் விடுதில், மாணவி ஒருவர் இருந்தார் என்றக் குற்றச்சாட்டின் பேரில், அந்த விடுதியில் தங்கியிருக்கும் ஆசிரியர் ஒருவர், சனிக்கிழமை (27) கைது செய்யப்பட்டார். இந்த சம்பவம், ஹட்டன் பிராந்திய கல்வி அலுவலகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

கினிகத்தேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான பாடசாலை ஒன்றின் ஆசிரியரே சந்தேகத்தின் பேரில் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

அதே பொலிஸ் எல்லைக்கு உட்பட்ட மற்றுமொரு பாடசாலையிலிருந்து 11 ஆம் தரத்தில் கல்வி கற்கும் பாடசாலை மாணவியை ஆசிரியர் தங்கியிருக்கும் பாடசாலையின் ஆசிரியர் விடுதிக்கு அழைத்து வந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் ஆசிரியர் கினிகத்தேனை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஆசிரியர் தற்போது பணிபுரியும் பாடசாலைக்கு முன்னதாக அந்த மாணவி கல்விப்பயிலும் பாடசாலையில் பல வருடங்களாக சேவையாற்றி வந்துள்ளார் என்பது விசாரணைகளின் ஊடாக கண்டறியப்பட்டுள்ளது.

மேலதிக வகுப்பு ஆரம்பிப்பதற்கு தாமதமானதால், ஆசிரியரின் விடுதிக்கு தான் சென்றதாக பொலிஸாரிடம் மாணவி தெரிவித்துள்ளார்.

ஆசிரியையின் இல்லத்திற்கு தான் சென்ற போதும் ஆசிரியர் தன்னை துன்புறுத்தவில்லை என பாடசாலை மாணவி ,பொலிஸாரிடம் மேலும் தெரிவித்துள்ளார்.

பாடசாலை மாணவி மருத்துவ பரிசோதனைக்காக நாவலப்பிட்டி மாவட்ட பொது வைத்தியசாலை சட்ட வைத்தியரிடம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதுடன், கைது செய்யப்பட்ட சந்தேகநபரான ஆசிரியரை ஹட்டன் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தவுள்ளதாக கினிகத்தேனை பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் அவசர தொலைபேசி இலக்கமான 119க்கு கிடைத்த இரகசிய தகவலை அடுத்தே, ஆசிரியர் கைது செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Share.
Leave A Reply