ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பளர் ஒருவரை போட்டியிட வைப்பதன் மூலம் சிங்களத் தலைமைகளுடன் பேரம்பேசும் சந்தர்ப்பத்தை உருவாக்க முடியுமென குறித்த முயற்சியில் ஈடுபட்டுள்ள தரப்பினர் குறிப்பிடுவதோடு, இம்முயற்சி ஒருவிஷப்பரீட்சையாக இருக்கப்போவது மாத்திரமல்ல மீண்டும் இனவாதத்தை தூண்டும் நடவடிக்கையாக மாறப்போகிறது அம்முயற்சியை எதிர்ப்பவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இதனைவிடவும், தமிழ் பொதுவேட்பாளர் ஒருவரை அடையாளம் காண்பதும் கடினமானது என்ற நிலைப்பாடுகளும் உள்ளன. இவ்வாறான நிலையில்,வடக்கு,கிழக்கு அரசியல் பிரதிநிதிகள் தெரிவித்துள்ள கருத்துக்கள் வருமாறு,

ஈ.பி.ஆர்.எல்.எப்.இன் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவிக்கையில், பொதுவேட்பாளர் என்ற விடயத்தை முதலாவதாக முன்வைத்தவன் யான் தான். ஜனநாயக தமிழ் கூட்டணியினர் கொள்கை அளவில் இதனை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

தற்போதைய ஜனாதிபதி தேர்தல் களத்தை பயன்படுத்தி தமிழ் மக்களுக்கான அரசியல் உரிமையை பெறுவதற்கு நாம் முயற்சிக்க வேண்டும்.

ஜனாதிபதி தேர்தலில் மூன்றுக்கு மேற்பட்ட வேட்பாளர்கள் போட்டியிடப் போகிறார்கள். இதனால் சிங்கள மக்களின் வாக்குக்கள் பிளவடையப்போகின்றன. 50சதவீதத்துக்கு மேலான வாக்குகள் யாருக்கும் கிடைக்கப்போவதில்லை.

வட, கிழக்கில் சுமார் 11இலட்சம் தமிழ் வாக்குக்கள் உள்ளன. தமிழ் பொது வேட்பாளர் கணிசமான வாக்குகளைப் பெறுவாராக இருந்தால் முதல் சுற்றில் சிங்கள வேட்பாளர்கள் வெற்றிக்கான சதவீதத்தினைப் பெறமுடியாது விட்டால் இரண்டாவது தடவை வாக்கெண்ணும் செயற்பாட்டுக்குச் செல்லும் நிலை ஏற்படும்.

அச்சமயத்தில் வெற்றி பெறுவதற்கு விரும்பும் வேட்பாளர் தமிழ் பொதுவேட்பாளரின் ஆதரவினை பெறவேண்டிய நிலைமை உருவாகும். அது பேரம்பேசும் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும்.

இலங்கை விவகாரங்களில் இந்தியா, அமெரிக்கா, சீனா போன்ற நாடுகள் செல்வாக்கு செலுத்துவதற்கு போட்டி போடுகிறார்கள். அவர்கள் தாங்கள் விரும்பும் ஒருவரையே ஜனாதிபதியாக கொண்டுவர வேண்டுமென விரும்புவார்கள்.

தமிழர்களின் அதரவு இல்லாமல் அவர்களால் தமது இலக்கை அடைய முடியாது. ஆகவே அந்நாடுகள் தமிழ்த் தரப்புடன் பேசுவதற்கான களம் உருவாகுவதற்கும் சாத்தியப்பாடுகள் உள்ளன.

இதனால் தமிழ் மக்கள் தமிழ் பொதுவேட்பாளர் ஒருவருக்கு வாக்களிக்கும் பட்சத்தில் எந்தவொரு தலைவர் ஜனாதிபதியாக வந்தாலும் தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்ற அழுத்தத்துக்கு உள்ளாவார்” என்றார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கையில்,

கடந்த காலங்களில் இடம்பெற்ற ஜனாதிபதி தேர்தல்களின்போது இரா.சம்பந்தனை பொதுவேட்பாளராக நிற்கும்படி சமய தலைவர்கள் உட்பட பலர் வற்புறுத்திய போதும் அவர் அதை நிராகரித்தார்.

அவர் அதற்கு மறுப்புத் தெரிவித்தமைக்கான காரணம் சிங்கள மக்கள் மத்தியில் இந்த விவகாரம் இனவாதத்தை தூண்டும் என்பதாலாகும்.

ஜனாதிபதி தேர்தலில் குமார் பொன்னம்பலம், சிவாஜிலங்கம் போன்றோர் போட்டியிட்ட காலத்திலும் தமிழ் மக்கள் ஏகோபித்து அவர்களுக்கு வாக்களிக்கவில்லை. தற்போது ஜனாதிபதி தேர்தலை பகிஷ்கரிக்கும்படியான கோரிக்கையும் முன்வைக்கப்படுகிறது. அந்த நிலை காணப்பட்டால் மக்கள் என்ன நிலைப்பாடு கொண்டவர்களாக காணப்படுகிறார்கள் என்பது தெரியாமல் போய்விடும்.

அதேநேரம், சிங்கள தலைமைகள் தமிழ் வேட்பாளர் ஒருவரை நிறுத்தும் சூழ்ச்சியையும் செய்யலாம் அதில் அவர்கள் குளிர்காயலாம். மேற்படியான அனைத்தையும் கருத்திற் கொண்டே நாம் முடிவுக்கு வரவேண்டும்.

2005ஆம் ஆண்டு தேர்தலை பகிஷ்கரிக்கும்படி கூறப்பட்டபோது விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த வடக்கில் மக்கள் மட்டுமே வாக்களிக்கவில்லை. ஆனால் வவுனியா மன்னார் மற்றும் கிழக்கு மாகாண மக்கள் அனைவரும் வாக்களித்தார்கள்.

அத்தேர்தலின்போது தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு சமஷ்டி அடிப்படையில் தரப்படுமென ரணில் விக்கிரமசிங்க கூறியமை மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தார்கள். எனவே யார் எந்தக் கோரிக்கையை முன் வைத்தாலும் தமிழ் மக்கள் பிரதான வேட்பாளர் ஒருவருக்கு வாக்களித்த வரலாறேயுண்டு.

2010இல் சரத் பொன்சேகாவுக்கும் 2015இல் மைத்திரிபால சிறிசேனவுக்கும் வாக்களித்தார்கள். எனவே தான் நாம் எடுக்கப்போகும் முடிவு தமிழ் மக்களை வெகுவாக பாதித்து விடும் என்பதை புரிந்து கொள்ளவேண்டும்.

பொதுவேட்பாளர் தொடாபில் வட கிழக்கில் தகுதியான ஒருவர் இருப்பதாக எனக்கு தெரியவில்லை. எனவே தான் தமிழ் பொது வேட்பாளர் என்ற விடயம் ஒரு ஆபத்தான முயற்சி என்று குறிப்பிடுகின்றேன்” என்றார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் தெரிவிக்கையில்,

பொதுவேட்பாளர் தொடர்பில் கட்சி முடிவெடுக்கும் வரை நான் ஒரு கருத்தையும் கூற முடியாது. மிக விரைவில் கட்சி தீர்மானிக்குமென நம்புகிறேன்.

எனினும், தமிழ் மக்களின் அரசியல் போக்குப்பற்றிப் பார்க்கின்றபோது, கடந்த காலத்தில் தமிழ் மக்களின் ஆதரவினால் ஆட்சி மாற்றங்களைக்கூட கொண்டுவர முடிந்தது.

டட்லி சேனநாயக்க, ஸ்ரீமாவே ஆகியோரின் ஆட்சி கலைக்கப்படும் அளவுக்கு தமிழர்கள் தீர்மானிக்கும் சக்தியாக இருந்தார்கள். ஆனால் ஸ்ரீமாவோவின் காலத்தில் அந்த நிலைமை மாற்றப்பட்டது.

5வருடங்களுக்கு ஒருமுறை தேர்தல் வருகிறபோதுதான் தென்னிலங்கை தலைமைகளுக்கு தமிழ் மக்களுடைய ஆதரவு தேவையாக இருக்கிறது. எனவே தான் வரும் சந்தர்ப்பங்களை சரியாக பயன்படுத்த வேண்டும்” என்றார்.

புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவிக்கையில்,

கொள்கையளவில் பொதுவேட்பாளர் நிறுத்தப்படுவதற்கு இணங்கியுள்ளோம். ஆனால் நிபந்தனைகள் சில பூர்த்தி செய்யப்பட வேண்டும். தமிழர்களை பொறுத்தவரை சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களித்து வந்திருந்தபோதும் அதன் மூலம் எதையும் பெறவுமில்லை, சாதிக்கவுமில்லை.

1977ஆண்டு தமிழ் மக்கள் ஒற்றுமையாக வாக்களித்து இரண்டாவது சக்தியாக கோரிக்கைகளை முன் வைத்தார்களோ அதேபோன்று தமிழ் வேட்பாளர் விடயத்திலும் தீர்க்கமாகச் செயற்பட வேண்டும்.

ஆகவே எங்கள் கட்சியை பொறுத்தமட்டில் தமிழ்த் தேசியப் பரப்பில் இருக்கக்கூடிய அனைத்து கட்சிகளும் ஒன்றிணைந்து ஒருவேட்பாளரை நிறுத்த முடியுமாக இருந்தால் நாங்கள் அதை ஆதரிக்க காத்திருக்கிறோம். அத்துடன் வேட்பாளரும் அனைவராலும் ஏற்றுக்கொள்ள வேண்டும்” என்றார்

வடமாகாண சபையின் தவிசாளர் சி.விகே. சிவஞானம் தெரிவிக்கையில், “தமிழ் பொதுவேட்பாளர் என்பது சாத்தியமற்ற முயற்சியாகும். எம்மவர் மத்தியில் ஒற்றுமையை ஏற்படுத்தி வாக்களிக்கச் செய்வதென்பது முடியாத காரியமாகும்.

இவையெல்லாவற்றையும் சரிசெய்து ஒழுங்குபடுத்தி முடிவுக்கு கொண்டு வரப்பட்டாலும், பொதுவேட்பாளர் தெரிவில் முரண்பாடுகள் உண்டாகும். சரியான வேட்பாளரை தெரிவு செய்வதில் பல சவால்களை நாம் சந்திக்கவேண்டிவரும்.

நீதியரசர் விக்னேஸ்வரன்; தானே களமிறங்கப்போவதாக கூறியவர் நிலைப்பாட்டை மாற்றி வேலன் சுவாமிகளை அடையாளப்படுத்துகிறார். தற்போது வடக்கு, கிழக்குக்கு பொருத்தமான ஒருவர் தேவையென்று கூறுகிறார்கள். இப்படியே கதைத்துக் கொண்டிருந்தால் ஒற்றுமையைக் கொண்டுவர முடியாது.

இதனைவிடவும், கிழக்கு முஸ்லிம் மக்கள் தமிழ் பொது வேட்பாளரை ஆதரிக்கப்போவதில்லை. டக்ளஸ், கருணா, பிள்ளையான், அங்கஜன் தமிழ் மக்களின் கணிசமான வாக்குகளைப் பெறுவதற்கு முயற்சிப்பார்கள் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்” என்றார்.

இலங்கைத் தமிழரசுக்கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் தெரிவிக்கையில்

1948ஆம் ஆண்டு தொடக்கம் சிங்கள பிரதமர்களாலும் ஜனாதிபதிகளாலும் தமிழர்கள் ஏமாற்றப்பட்டே வந்திருக்கிறார்கள்.

எனவே கடந்த காலம் நிகழ்காலம் எதிர்காலம் என்று யோசிப்போமானால் எல்லாம் தமிழர்களுக்கு ஏமாற்றமாகவே காணப்படுகிறது. அநுராகுமார திஸநாயக்க சமஷ்டி தருவது பற்றியோ 13 நிறைவேற்றுவது பற்றியோபேசப்போவதில்லை என்கிறார்.

ஜனரிபதி ரணில் பொலிஸ் அதிகாரம் தவிர்த்து 13 பற்றி யோசிக்கலாம் என்கிறார். சஜித் பிரேமதாஸ எதனையும் பகிரங்கமாகக் கூறுவதற்கு தயாராக இல்லை.

எனவே சிங்கள தலைமைகள் தமிழ் மக்களின் தேசியப் பிரச்சினையை தீர்க்க தாயரில்லை என்பது தெளிவாகவே தெரிகிறது. எனவே தான் சிங்கள தலைமைகளுக்கு வாக்;களிப்பதன் மூலம் நாம் எந்த நன்மையையும் அடையப்போவதில்லை” என்றார்.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச்செயலாளரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்ராஜா கஜேந்திரன் தெரிவிக்கையில், “எங்களை பொறுத்தரை தேர்தலிலிருந்து தமிழ் மக்கள் விலத்தி நிற்கவேண்டும் என்பது தான் கோரிக்கை. தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தாலும் வாக்கு பெற்றரோ பெறாதவரோ தமிழ் மக்களின் நலனைப்பற்றி சிந்திக்க தயாரில்லை. எல்லோரும் தமிழ் மக்களுக்கு எதிராகவே செயற்படுகிறார்கள்.

2019 ஆம் ஆண்டு தேர்தலில் வட, கிழக்கு தமிழ் மக்கள் சஜித்பிரேமதாஸவுக்கு வாக்களித்தும் அவர் தமிழ் மக்களுக்கு சார்பாக நடந்துகொள்ளவில்லை.

தமிழ் மக்களுக்கு எதிராக மேற்கொள்ளப்படும் எந்தவிடயத்தையும் கட்டுப்படுத்த தயாரில்லை. இப்படியான நிலையில் தமிழ் மக்களை கருத்தில் கொள்ளாதவர்களுக்கு வாக்களிக்க முயலுவோமாக இருந்தால் அது அர்த்தமற்றதாகவே போய்விடும்” என்றார்.

மட்டக்களப்பு மாநகரசபை முன்னாள் மேயர் தியாகராஜா சரவணபவன் தெரிவிக்கையில், “தமிழ்ப்பொது வேட்பாளர் என்பது விஷப்பரீட்சை. கொள்ளி கட்டையால் முதுகு சொறியும் முயற்சிக்கு பொதுஜன அபிப்பிராயம் என்ற கருத்தை கொண்டுவர முயற்சிக்கிறார்கள்.

தற்போதைய நிலையில் தமிழ்த் தேசியத்துக்கு எதிரான சிந்தனைகள் உள்ளவர்கள் அதிகமாக காணப்படுகிறார்கள். வட, கிழக்கில் தமிழ் தேசியத்துக்கு எதிரான மக்கள் வாக்குசதவீதம் அதிகம். இந்நிலையில் பொதுவேட்பாளர் ஒருவர் நிறுத்தப்படும் போது தமிழ் மக்களின் ஆதரவு கிடைக்கவில்லையாயின் ஏலவே தமிழீழ கோரிக்கை சர்வதேச அளவில் எவ்வாறு மழுங்கடிக்கப்பட்டதோ அதேநிலைதான் மீண்டும் ஏற்படும்.

அதேநேரம், பொதுவேட்பாளர் ஒருவரை ஆதரிக்க தமிழ் மக்கள் தயார். ஊடகங்கள்pன் ஆதரவு இருக்கிறது. புத்திஜீவிகள் ஆதரவுதர காத்திருக்கிறார்கள் புலம்பெயர் சமூகத்தவர் பின்னால் நிக்கிறார்கள் என்றால் நாம் இந்த முயற்சியை முன்னெடுக்க முடியும்” என்றார்.

-திருமலை நவம்-

Share.
Leave A Reply