உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக பாராளுமன்றத்தில் நடந்த விவாதத்தில் உரையாற்றிய பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜெயசேகர கவலையுடன் ஒரு விடயத்தை குறிப்பிட்டிருந்தார்.

விடுதலைப்புலிகளுக்கு எதிராக தீரத்துடன் போரிட்டு வெற்றி பெற்ற இலங்கை படையினர் இப்போது ரஷ்யா- உக்ரேன் போரில் எதிர் எதிர் திசையில் நின்று தங்களுக்குள் மோதிக்கொள்கின்றனர் என்பதே அவரது கவலையாக இருந்தது.

உக்ரேன் மீது ரஷ்யா படையெடுப்பை மேற்கொண்ட போது இலங்கையிலும் அதன் தாக்கம் எதிரொலித்தது.

இரண்டு நாடுகளுகளுடன் இலங்கைக்கு வர்த்தக ரீதியான தொடர்புகள் இருந்தன. அத்துடன் இலங்கைக்கு அதிகளவு சுற்றுலா பயணிகளை கொண்டு வரும் நாடுகளாகவும் இந்த நாடுகள் இருந்தன.

இப்படி இரண்டு நாளுகளும் மோதிக்கொள்ளும் போது இலங்கைக்கான சுற்றுலா பயணிகள் வருகையும், பாதிக்கப்பட்டது . ரஷ்யா மீதான அமெரிக்காவின் பொருளாதாரத் தடைகளாலும் இலங்கை பாதிக்கப்பட்டது.

ஆனாலும் இந்த நெருக்கடியை இலங்கை அரசாங்கம் ஓரளவுக்கு இலாவகமாகவே கையாளத் தொடங்கி இருக்கிறது.

அதனால்தான் ரஷ்யா மீதான, டொலர் பரிமாற்றத் தடைக்கும் மத்தியில், அந்த நாட்டில் சுற்றுலா பயணிகள் இலங்கைக்கு வருவதில், முதலிடத்தில் உள்ள இந்தியாவுடன் போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றனர்.

இத்தகைய நிலையில் இரண்டு நாடுகளுக்கு இடையில், ஒருவித சீரான உறவு இருந்துகொண்டிருக்கும்போது, குறிப்பாக பாதுகாப்பு ரீதியான உறவுகளில் நெருக்கமான நிலை காணப்படுகின்ற போது, இது தரப்புக்கும் இடையில் பிரச்சினையை தோற்றுவிப்பதாக இருப்பது அந்தப் போர்க்களத்துக்கு செல்லுகின்ற இலங்கை படையினர் தான்.

ரஷ்ய – உக்ரேன் போரில் வெளிநாட்டு கூலிப்படைகள் அதிகளவில் பங்கெடுத்திருப்பது வெளிப்படையான விடயம் தான்.

அங்கு பிரித்தானிய, அமெரிக்க படையினர் கூட போர்க்களத்தில் இருக்கிறார்கள். ஆனால் அவர்கள் அதிகாரபூர்வமாக அமெரிக்காவையும் பிரித்தானியாவையோ, பிரதிநிதித்துவம் செய்யவில்லை.

சுயாதீனமான அவர்கள் உக்ரேனுக்கு ஆதரவாக களம் இறங்கி இருக்கிறார்கள். அமெரிக்க, பிரித்தானிய படைகளில் இருந்து விலகிக் கொண்டவர்களும் அந்தப் போர்க் களத்தில் ரஷ்யாவுக்கு எதிராக களமிறங்கியிருக்கிறார்கள்.

இது ரஷ்யாவுக்கும் தெரியும், சம்பந்தப்பட்ட நாடுகளுக்கும் தெரியும். ரஷ்யாவுக்கும் போர்க்களத்தில் படையினருக்கு பற்றாக்குறை இருக்கிறது. அதுபோல உக்ரேனுக்கும், ரஷ்ய படையெடுப்பை எதிர்ப்பதற்கு போதுமான படையினர் இல்லை.

இதனால் இரண்டு நாடுகளுமே தங்களின் பக்கம் வெளிநாட்டு கூலிப்படையினரை அமர்த்தி சண்டையிடுவதில் ஆர்வம் காட்டுகின்றன.

ரஷ்யாவின் படையெடுப்பு தொடங்கிய போது, பல நாடுகளில் இருந்து தன்னார்வலர்களாகப் போரிட சென்றவர்கள் ஏராளம். அவர்கள் பெரும்பாலும் உக்ரேனுக்கு சென்றார்கள்.

அதற்குப் பிறகு அந்தப் போர் நீண்டு செல்லத் தொடங்கியதை அடுத்து, தன்னார்வலர்கள் அங்கு செல்வது குறைய தொடங்கியது. ஆனால் கூலிப்படைகளாக செல்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கிறது.

ரஷ்யாவில் கூலிப்படைகளாக செல்பவர்களுக்கு சுமார் 3000 டொலர்கள் வரை சம்பளம் பேசப்படுவதாக சொல்லப்படுகிறது. ஆனாலும் அந்த ஊதியத்தை அவர்களால் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றதா, ஒழுங்காக அது அவர்களின் குடும்பத்தினருக்கு சென்று சேருகிறதா என்பன போன்ற கேள்விகள் இருக்கின்றன.

ஏனென்றால் இதனை ரஷ்யாவோ உக்ரேனோ சட்டபூர்வமாக செய்யவில்லை. வெளிநாட்டு கூலிப்படையினரை போரில் ஈடுபடுத்துவதை, இந்த நாடுகள் அதிகாரபூர்வமாக ஒப்புக்கொள்ளவில்லை.

அவ்வாறு போரில் ஈடுபடுத்துவது அல்லது ஆட்களை திரட்டுவது என்பது சர்வதேச நியமங்களுடன் ஒத்து வராமல் இருக்கலாம்.

அதனால் ரஷ்யா தனது பக்கத்தில் ஆட்சேர்க்கும், கூலிப்படையினரை பற்றிய தகவல்களை வெளியிடுவதில்லை. ஆங்காங்கே வெளியாகிய சில, காணொளி துண்டுகளில் ரஷ்யாவில் இலங்கை படையினர் பணியாற்றுவது மட்டும் தான் வெளியே தெரியும்.

இந்த போரில் உக்ரேன் படையினருக்கு ஆதரவாக போரிட்டுக் கொண்டிருந்த இலங்கை இராணுவத்தில் இருந்து விலகிச் சென்ற கப்டன் ஹேவகே உள்ளிட்ட சிலர் உயிரிழந்திருப்பதாக தகவல்கள் வெளியாகின.

அப்போது அது பற்றி யாரும் பெரிதாக கணக்கில் எடுத்துக் கொள்ளவில்லை. ஏனென்றால் அவர்கள் தன்ஆர்வலர்களாக உக்ரேனுக்கு சென்றவர்களாக கருதப்பட்டது.

ஆனால் இப்போது ரஷ்யாவுக்குச் சார்பாக போரிட்டுக் கொண்டிருந்த இலங்கையை சேர்ந்த இரண்டு முன்னாள் இராணுவத்தினர், உயிரிழந்திருக்கிறார்கள். அவர்களின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவோ உரிய முறைப்படி அடக்கம் செய்யப்பட்டதாகவோ தகவல்கள் இல்லை.

ரஷ்யாவில் உயிரிழந்த இராணுவ சிப்பாய் ஒருவரின் குடும்பத்தினர் , ஒரே ஒரு மாத சம்பளத்தை மாத்திரம் அவர் அனுப்பி வைத்தார் என கூறியிருக்கிறார்.

அதுவும், 3000 டொலர்களுக்கு இணையானதல்ல, சுமார் 500 டொலர்கள் வரை தான் இருக்கும்.

இதன் பின்னர் தான், இலங்கை இராணுவத்தினர் கூலிப்படைகளாக ரஷ்ய போர்க்களத்தில் செயற்படுவதற்கு எதிர்ப்பு நிலை தோன்றியிருக்கிறது.

ஒரே போர்க்களத்தில் இலங்கை இராணுவத்தினர் இரு வேறு தரப்புகளுக்காக சண்டையிடும் போது அவர்கள் தங்களுக்குள்ளே மோதிக் கொள்ள நேரிடுகிறது.

அதனைத்தான், புலிகளுக்கு எதிராக தீரத்துடன் போரிட்ட இராணுவத்தினர் இப்போது ரஷ்ய- உக்ரேன் போர்க்களத்தில் எதிரெதிரே மோதிக் கொண்டிருக்கிறார்கள் என்று விசனத்துடன் குறிப்பிட்டிருக்கிறார் தயாசிறி ஜெயசேகர.

இலங்கையில் சட்ட திட்டங்களின் படி இராணுவத்தினரோ அல்லது குடிமக்களோ, மற்றொரு நாட்டின் இராணுவத்தில் இணைந்து கொள்ள முடியாது.

இது அரசாங்கத்துக்கு தெரியும், ஆனாலும் ரஷ்யாவுக்கு இலங்கை இராணுவத்தை சேர்ந்தவர்களும், ஓய்வு பெற்றவர்களும் செல்ல தொடங்கிய போது அதனை தடுத்து நிறுத்துவதற்கான நடவடிக்கையை அரசாங்கம் முன்னெடுக்கவில்லை.

அவ்வாறு செய்யும்போது ரஷ்யாவுடன் முரண்பாடு ஏற்படும். இது முதலாவது பிரச்சினை.

ரஷ்யாவில் கூலிப்படையினராக போரிடும் இலங்கை படையினர் தங்களுக்கு வழங்கும் சம்பளத்தை அங்கே செலவிட மாட்டார்கள்.

இங்குள்ள குடும்பத்தினருக்கு தான் அனுப்புவார்கள். எனவே இலங்கைக்கு வெளிநாட்டு செலாவணி வருமானம் கிடைக்கும்.

Ex-Sri Lankan military officer Sylvester Andrew Ranish

எனவே, ரஷ்யாவுக்கு செல்லத் தொடங்கிய கூலிப்படையினரை இலங்கை அரசாங்கம் தடுக்கவில்லை. தற்போது உக்ரேன் சார்பாக, 60 பேரும், ரஷ்யா சார்பாக 100 பேரும் இலங்கையர்கள் போரிடுவதாக ஒரு மதிப்பீடு உள்ளது. இது சரியான அல்லது துல்லியமான மதிப்பீடு அல்ல.

ஏனென்றால், இலங்கை அரசும் இதனை ஏற்றுக் கொள்ளவில்லை. ரஷ்ய, உக்ரேன் அரசுகளும் ஒத்துக் கொள்ளவும் இல்லை. ரஷ்ய போர்க்களத்தில் இலங்கைப் படையைச் சேர்ந்தவர்கள் கொல்லப்பட்ட தகவல் அண்மையில் வெளியாகியதை அடுத்து. மொஸ்கோவில் உள்ள இலங்கைத் தூதுவர், இலங்கையர்கள் போரில் பங்கெடுத்திருக்கிறார்களா என்ற விபரத்தை தருமாறு ரஷ்ய பாதுகாப்பு அமைச்சிடம் கோரிக்கை விடுத்திருந்தார்.

அதற்கு உத்தியோகபூர்வமான பதில்கள் எதுவும் வழங்கப்பட்டதாகத் தெரியவில்லை. அதேவேளை, கொழும்பில் உள்ள ரஷ்ய தூதரகம் அண்மையில் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது.

அதில் இலங்கைப் படையினர் எவரும், ரஷ்யாவினால் போரில் ஈடுபடுத்தப்படவில்லை என்று கூறப்பட்டிருந்தது. இது இலங்கை அரசாங்கத்துக்கும், அந்த நாட்டின் சார்பில் போரிடச் சென்றவர்களுக்கும் அதிர்ச்சியைக் கொடுத்தது.

ஏனென்றால், ரஷ்ய போர்க்களத்தில் இலங்கையர்கள் செயற்படுகின்றனர், உயிர்களை இழந்திருக்கின்றனர். காயமடைந்திருக்கின்றனர். ஆனால் அதனை ரஷ்யா மறுக்கிறது என்றால், இந்த விடயத்தை ஒளிக்க நினைக்கிறது.

கூலிப்படையினராக போரில் ஈடுபடுத்தப்பட்டவர்களுக்கான சட்டபூர்வ அந்தஸ்தை கொடுக்க ரஷ்யா விரும்பவில்லை. அவர்களுக்கான ஊதியத்தையோ, உயிரழந்து, காயமடைந்தால் இழப்பீட்டையோ கொடுக்கத் தயாராக இல்லை என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

இலங்கைக்கும் ரஷ்யாவுக்கும் நெருங்கிய உறவு இருந்தாலும், குறிப்பாக பாதுகாப்பு உறவுகள் நெருக்கமாக இருந்தாலும், இந்த விடயத்தில் தீர்க்கமானதொரு நிலைப்பாட்டை எடுக்க முடியாமல் இருக்கிறது அரசாங்கம்.

இந்த விவகாரம் குறித்து ஆராய்ந்து பாராளுமன்றத்தில் பதிலளிக்கப்படும் என்று நீதியமைச்சர் விஜேதாச ராஜபக்ஷ கூறிருந்தார். ஆனாலும், இன்னமும் அரசாங்கத்தின் பதில், சமர்ப்பிக்கப்படவில்லை.

அண்மையில் ரஷ்ய தரைப்படைகளின் பிரதி தலைமை அதிகாரி தலைமையிலான குழு இலங்கைக்கு வந்தது. பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தலைமையிலான குழு மொஸ்கோவுக்கு சென்று திரும்பியது. ஆனாவும் இந்தக் கூலிப்படையினர் தொடர்பான சர்ச்சைக்கு தீர்வு காணப்படவில்லை.

ரஷ்யாவுக்கு கூலிப்படையினரை அனுப்பும் மோசடிக் கும்பல் வலையமைப்பிலும் பாதுகாப்புத் துறையை சேர்ந்த முன்னாள் அதிகாரிகளே ஈடுபட்டிருக்கிறார்கள். அவ்வாறான ஒரு மேஜர் ஜெனரல் அண்மையில் கைது செய்யப்பட்டார்.

ஆனாலும், தற்போது அந்த நாடுகளில் உள்ள கூலிப்படையினர் எத்தனை பேர், அவர்களுக்கு ஊதியம் வழங்கப்படுகிறதா- இழப்பீட்டு உத்தரவாதம் உள்ளதா என்பது பற்றிய விவகாரங்களுக்குள் அரசாங்கம் நுழையவில்லை.

புலிகளுக்கு எதிராக தீரத்துடன் போரிட்ட படையினரைவிட, ரஷ்யாவுடனான உறவுகள் தான் முக்கியம் என்று, இலங்கை அரசாங்கம் கருதுவதால் தான் இந்த நிலை.

– சுபத்ரா

Share.
Leave A Reply